தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 februari 2015

முஸ்லிம் காங்கிரஸ் செய்வது அரசியல் வியாபாரம்!- ஜனா

மைத்திரியின் இந்திய விஜயம் மோடிக்கு வெற்றி ; ஈழத்தமிழருக்கு...
[ புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015, 08:41.35 AM GMT ] [ வலம்புரி ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு விஜயம் செய்த மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது பேசப்பட்ட விடயம், சந்திப்பின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் என்பன ஒரு புறம் இருக்க,
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த சர்வதேச இராஜதந்திர வெற்றி என்று கூறலாம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ சீனவுடன் உறவை ஏற்படுத்தி இந்தியாவை அகற்ற முற்பட்டார்.
மன்மோகன் சிங் ஆட்சியிலிருந்த போது மகிந்த ராஜபக்­ச  இலங்கையில் நடத்திய நாடகங்கள் இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போதிலும் அதுபற்றி எதுவும் கதைக்க முடியாத அளவிலேயே காங்கிரஸ் அரசின் நிலைமை இருந்தது.
மகிந்த ராஜபக்ச­  முன்னெடுத்த வன்னி யுத்தத்தில் இந்திய அரசு வழங்கிய உதவிகள் வெளிப்பட்டால் இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானம் இந்திய மத்திய அரசு மீதும் நகரும் என்பதன் காரணமாக மகிந்த எது செய்தாலும் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மெளனம் காத்தனர்.
ஆனால், கடவுள் செயலாக இந்தியாவில் மோடி ஆட்சியமைக்க எல்லாமுமே திசை திரும்பலாயிற்று. மோடி பிரதமரான போது இலங்கையில் மகிந்த ராஜபக்ச­ சீனாவுடன் கைகோர்த்து நின்றார். மோடி எதுவும் பேசவில்லை.
ஆனால் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இலங்கை - சீன உறவை முடிவுறுத்த முடியும் என்பது மோடியின் உறுதியான நம்பிக்கை. மோடியின் நம்பிக்கையை அமெரிக்காவும் அங்கீகரித்திருக்கும்.
காலப்பிழையும் சேர்ந்துவர, ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச­  விடுத்தார். முடிவு மைத்திரி ஜனாதிபதி என்றாயிற்று. அவ்வளவுதான் இப்போது சீனாவை இலங்கை தூக்கி எறிந்து விட்டது. இந்தியாவின் நெருக்கமான உறவை ஏற்படுத்த மைத்திரி தயாராக இருக்கின்றார்.
அதன் ஓர் அங்கமாகவே அவரின் இந்திய விஜயம் அமைந்துள்ளது. இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுவார்.
ஏற்கெனவே திட்டமிட்டதன் பிரகாரம் மோடியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வார். இவை நடந்து கொண்டிருக்கும் போது மெதுவாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வை திரும்பிப் பாருங்கள். வதனம் பல மடங்கு வீக்கம் எடுத்திருப்பதை அவதானிக்க முடியும்.
ஆக, இலங்கையில் நடந்த ஆட்சிமாற்றமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயமும் பிரதமர் மோடிக்கு கிடைத்த சர்வதேச இராஜதந்திர வெற்றி என்று கூறுவதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை.
மைத்திரியின் இந்திய விஜயம் மோடிக்கு வெற்றியாயினும் ஈழத்தமிழருக்கு அது வெற்றியை தருமா என்பதுதான் இங்கு எழுந்து நிற்கும் முக்கிய கேள்வி?
இலங்கையிலிருந்து சீனாவின் தொடர்பை அறுத்தெடுத்த பிரதமர் மோடி, ஈழத்தமிழர்களின் பிரச்சினையையும் அறுத்து விடுவாரா? அல்லது தனது நாட்டுப் பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று நினைப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

http://www.tamilwin.com/show-RUmtyCScSUnp1E.html
குமரன் பத்மநாதன் யார் என தெரியாது! கருத்து வெளியிட ஒரு வாரம் தேவை சட்டமா அதிபர்
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 11:07.46 AM GMT ]
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது ஆகையால் அவரை பற்றி கருத்து வெளியிட ஒரு வார கால அவகாசம் தேவை இப்படி கூறினார் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத்.
இன்று மேன்முறையீட்டு நீதி்மன்றில் குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத் கே.பி தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தனக்கு தெரியாதெனவும் இதற்கான விளக்கத்தை அளிக்க தனக்கு கால அவகாசம் தேவையெனவும் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையிட்டு நீதிபதி விஜித் மல்லகொட, எதிர்வரும் 26ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
குறித்த மனு கடந்த 5ம் திகதி விசாரணைக்கு வந்தபோது குமரன் பத்மநாதனின் கடவுச்சீட்டை முடக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


முஸ்லிம் காங்கிரஸ் செய்வது அரசியல் வியாபாரம்!- ஜனா
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 10:47.38 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்வது கொள்கை ரீதியான அரசியல் அல்ல.அவர்கள் செய்வது அரசியல் வியாபாரம் ஆகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வது கொள்கை ரீதியான அரசியலாகும். எமது மக்களின் உரிமைகள் பெறப்படவேண்டும் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என போராடிக் கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமீன்மடு, விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த கால ஆட்சியானது தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானதொரு காட்டாட்சி, எமது லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்த ஆட்சி, கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்தொழித்த ஆட்சி, தமிழ்பேசும் மக்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்லர் அவர்கள் எமது சேவகர்கள் என நடத்தப்பட்ட ஆட்சி வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களினால் மாற்றப்பட்டு தமிழ் மக்களுக்கு விடிவெள்ளியை தோற்றுவிக்கும் ஆட்சி இன்று உருவாகியிருக்கின்றது.
அதன் பெறுபேறாக சிறைகளில் வாழும் எமது அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு நாம் கோரியபோது அவர்களின் பெயர் விபரங்களை தரும்படி கேட்டு தற்போது பரிசீலித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற எமது மக்களின் காணிகளை விடுவிக்கும்படி கேட்ட போது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நாட்டில் அமைச்சரவை இருந்தாலும் அதற்கு மேலாக ஒரு உயர்பீடம் அமைத்து எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களையும் உள்வாங்கி இனப்பிரச்சினைக்கான தீர்வையும் நூறுநாள் வேலைத்திட்டத்தினுள் அடக்கவேண்டுமென செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த மாற்றத்தின் அடிப்படையில் தான் கிழக்கு மாகாணசபையில் ஒரு ஆட்டம் வந்தது. ஒரு அதிர்ச்சி வந்தது. ஒரு தொங்கு நிலை வந்தது. கிழக்கு மாகாணசபையில் அதிக ஆசனங்களைக்கொண்ட பெரிய கட்சி என்ற அடிப்படையில் முதலமைச்சர் பதவியை பெறுவதற்காக சகல மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் உறுதியாகவும் இருந்தோம்.
ஆனால் எங்களது கனவு பலிக்கவில்லை. இது தொடர்பான காரணத்தினை நீங்கள் அறியவேண்டும். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கலக்க நிலையிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வது கொள்கைரீதியான அரசியலாகும். எமது மக்களின் உரிமைகள் பெறப்படவேண்டும் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் .நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல, நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழவேண்டும் என போராடிக்கொண்டுள்ளோம்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்வது கொள்கை ரீதியான அரசியல் அல்ல. அவர்கள் செய்வது அரசியல் வியாபாரம்.
2010ம் ஆண்டு ஐ.தே.க.வுடன் பாராளுமன்ற தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் மகிந்த அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை வகித்தார்கள். மகிந்த ராஜபக்ஸ 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிட்ட போது அவரது கூண்டுக்குள் இருந்து வெளிவந்த மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளின் ஆதரவுடனும் வெற்றியீட்டப் போகின்றார் என்ற நிலைமையேற்பட்ட பின்னர் அதிலும் தபால் மூல வாக்களிப்பு நிறைவுபெற்ற பின்னர் மகிந்த அரசாங்கத்தில் இருந்து மைத்திரி பக்கம் வந்தனர்.
இவ்வாறு மைத்திபால சிறிசேனவின் பக்கம் வந்தவர்கள் கிழக்கு மாகாணசபையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்டுள்ள நிலையில் தற்போது அவற்றினை பத்து உறுப்பினர்களாக மாற்றிக் கொண்டார்கள். மட்டக்களப்பில் இருந்து இரண்டு பேரை உள் எடுத்தார்கள், அம்பாறையில் இருந்து ஒருவரை எடுத்தார்கள்.
அதற்கு மேலாக முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி வழங்கி எனக்கும் ஒரு அமைச்சு தந்தால் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் எனது பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது, அமைச்சராக வந்தால் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று கூறி எமது முன்னாள் முதல்வர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரிடம் சென்று சத்தியக்கடதாசியில் கையொப்பம் இட்டுவிட்டு சம்பந்தர் ஐயாவை பார்க்க வருகின்றார். அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆட்சியமையுங்கள் ஆதரவு வழங்குகின்றோம் என்று கூறுகின்றார்.
எங்களிடம் 11 ஆசனங்கள் உள்ளது. அவரிடம் ஒன்றே உள்ளது.19 ஆசனங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தேவையாகும். மைத்திரி பக்கம் வந்த முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் மகிந்த பக்கம் சென்று பிள்ளையான் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் சத்தியக்கடதாசியை வாங்கியதன் பின்னரே முதலமைச்சரை நியமித்துள்ளனர்.
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதுதான் நடந்த அரசியல்.
இருந்த போதிலும் கிழக்கு மாகாணசபையில் கடந்த காலத்தில் நடந்த அநியாயங்கள், அட்டுழிங்களை செய்தார்கள். நாங்கள் இது தொடர்பில் பல தடவைகள் குரல்கொடுத்துள்ளோம். நியமனங்கள் பல முறைகேடுகள் நடந்தேறின.இவற்றினை நிறுத்த வேண்டும். அதற்காக நாங்கள் இம்மாகாணசபை ஆட்சி அதிகாரங்களுக்குள் பங்குபற்ற வேண்டும்.
2012ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மேலதிகமாக நான்காயிரம் வாக்குகளை அளித்திருந்தால் பதின்மூன்று ஆசனங்களை உருவாக்கி மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று பதினைந்து ஆசனங்களுடன் ஆட்சியை அமைத்திருப்போம்.
எங்களுடைய மக்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டுவதில்லை. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் எண்பத்து நான்காயிரம் வாக்குகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் நாற்பத்து நான்காயிரமாகும்.
தமிழ்ப் பிரதேசங்களில் ஐம்பது வீதத்திற்கும் குறைவான வாக்குகளே அளிக்கப்படுகின்றன. எழுபத்தெட்டு வீதம் தமிழர்கள் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கென இருக்கின்ற பிரதிநிதிகள் மூன்றாகும்.
இருபத்திரண்டு வீதம் முஸ்லிம்களுக்கான பிரதிநிதிகள் இரண்டாகும். காரணம் எமது மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை.ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினiரை தெரிவுசெய்யும் வாக்குகள் குப்ப கூடைகளுக்குள் இடப்படுகின்றன. . இந்த நிலை மாறவேண்டும்.
கடந்த வடமாகாணசபை தேர்தலில் 70வீதம் வாக்களித்து 30ஆசனங்களை கொடுத்துள்ளனர். அதன் மூலமாக வடமாகாணசபையில் எமது ஆட்சி அதிகாரம் நடைபெறுகின்றது. கடந்த காலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களுக்காக நியாயம் வேண்டி, அழிக்கப்பட்ட சொத்துகளுக்கான நியாயம் வேண்டி ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்துக்கு சென்றுள்ளோம்.
இந்த பிரேரணை இந்த ஆட்சிக்கு எதிரானது அல்ல. கடந்த காலத்தில் எமது மக்களை கொலைசெய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyCSdSUnqzE.html


Geen opmerkingen:

Een reactie posten