தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

உண்மையான நல்லிணக்கம் எது?

ஐநா மனிதஉரிமை ஆணையாளர் அலுவலகம் தமிழ் மக்களிடம் சாட்சியங்களை பதிவு செய்யவேண்டும்! - தமிழ் சிவில் சமூகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 01:11.44 PM GMT ]
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நேரடியாக தமிழ் மக்களிடம் சாட்சியங்களை பதிவு செய்யக்கோரியும் எமது மக்களின் விருப்பை வெளிப்படுத்தும் வெகுசனப் பிரசாரத்தை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் சிவில் சமூகம் அறிவித்துள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்ட அறிவிப்பினை தமிழ் சிவில் சமூகம் விடுத்துள்ளது.
சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கோரியும் உள்ளக பொறிமுறையை நிராகரித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 24 பெப்ரவரி 2015 அன்று யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்துள்ள பேரணிக்கு தமிழ் சிவில் சமூகம் அமையம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
இப் பேரணியில் நீதி நிலைநாட்டப்படுவதில் அக்கறையுள்ள சகல தரப்பினரையும் பெருமளவில் கலந்து கொள்ளும் வண்ணம் வேண்டுகின்றோம்.
ஜெனீவா அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தையும் செப்டெம்பருக்கு முதல் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நேரடியாக எமது மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யக் கோரியும் எமது மக்களின் விருப்பை வெளிப்படுத்தும் வெகுசனப் பிரசாரத்தையும் தமிழ் சிவில் சமூகம் விரைவில் முன்னெடுக்கும்.
10 பெப்ரவரி 2015 அன்று நிறைவேற்றப்பட்ட வடக்கு மாகாண சபையின் இனப்படுகொலை தீர்மானத்தை தமிழ் சிவில் சமூகம் முழு மனதோடு வரவேற்கின்றது.
உள்ளக பொறிமுறையில் தமக்கு நம்பிக்கையில்லை எனபதையும் நடந்தது நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலைதான் என்ற தமிழ் மக்களின் நீண்டகால விளங்கிக்கொள்ளலையும், சர்வதேச விசாரணையொன்று இனப்படுகொலை குற்றத்தையும் சேர்த்தே விசாரிக்க வேண்டுமென்பதையும் அத்தகைய ஒரு விசாரணை முறையாக நடைபெற இவ்விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தமிழ் சிவில் சமூகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றது இன்று இந்த நிலைப்பாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றமான வட மாகாண சபையும் எடுத்துள்ளமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.என தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் தமிழ் சிவில் சமூகத்தின் இணைப்பேச்சாளர் எழில் றாஜன் பாதிரியார் நிலக்சன் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns0G.html

உண்மையான நல்லிணக்கம் எது?
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 02:04.06 PM GMT ]
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நெருக்கடிகள் எந்த வகையிலும் குறையாத நிலைமைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரியும், தங்கள் பூர்வீக நிலங்களில் மீண்டும் தங்களை குடியமர்த்தக் கோரியும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகின்றனர்.
முன்னைய அரசின் காலப்பகுதியில் தமிழ்ப்பேசும் மக்கள் சொல்லொண்ணா நெருக்கடிகளுக்கு ஆளானதுடன், திட்டமிட்ட வகையில் சகல விடயங்களிலும் ஓரம் கட்டப்பட்டனர். இதனால், விரக்தியும் வேதனைகளுமே அவர்களின் வாழ்க்கையில் நிறைந்து போயிருந்தன.
இந்தநிலையில் ஆட்சி மாற்றம் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்துள்ளதுடன் தமது துயரங்களுக்கு விடிவு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதற்குப் பங்கமேற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் சார்ந்ததாகும்.
குறைந்த பட்சம் அரசாங்கம், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கேனும் சாத்தியமான வழியில் தீர்வை முன்வைப்பது இன்றியமையாததாகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்ப் பிரதிநிதிகள் அவ்வப்போது, ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற போதிலும், அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.
அவ்வப்போது, தேர்தல் காலங்களில் மாத்திரம் இவை தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதும் தமிழ் மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை முன்வைப்பதுமாக காரியங்கள் தொடர்கின்றன.
தமிழ் மக்களும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற மனவுணர்வு அரச உயர் மட்டங்களில் ஏற்படாத வரை, தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டாத நிலைமைகளே தொடர்வதாக அமையும் என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளைத் தொலைத்து விட்டுக் கதறியழுது வரும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
உலக நடப்புக்கள் எதுவும் அறியப்படாத வகையில் திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்களும் அதே இடத்தில் "கோத்தா" முகாம் என்று அழைக்கப்படும் பிறிதொரு முகாமில் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வியாழனன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன், திருகோணமலை கடற்படை முகாம் தொடர்பான இந்த சந்தேகங்கள் தொடர்பிலும் அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் இருக்கின்றார்களா? சித்திரவதைகள் இடம்பெற்றனவா? என்பது குறித்தும் பாதுகாப்பு அமைச்சு உடனடியாகக் கவனம் செலுத்தி அங்கு சென்று ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் வியாழனன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்த தகவலை வெளியிட்டதுடன், இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
யுத்தத்தின் போது 70 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர். இத்தகைய விடயங்கள் பற்றி சாட்சியமளிப்பதற்கான சூழல் இங்கு இல்லாதிருந்தது.
யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்களாகின்ற நிலையில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தாயும் மகளும் இன்னும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் வரையில் அதனை எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் மீது பிரயோகிக்க முடியும். 18 மாதங்களுக்கு விசாரணையின்றித் தடுத்து வைக்கவும் முடியும். எனவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் அடைந்த பாரிய இழப்புக்களும், துன்பங்களும், வேதனைகளும் இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குத் தெரியாத ஒன்றாகவே இருந்துள்ளது.
இன்றும் அவ்வாறான நிலைமைகளே காணப்படுகின்றன. பொதுவாக சிங்களக் கடும்போக்கு அரசியல்வாதிகளும் அவர்கள் சார்பான சிங்கள, ஆங்கில ஊடகங்களும் தமிழ் மக்கள் தொடர்பாகத் தவறான பக்கங்களையே தொடர்ச்சியாக காட்டி வருகின்றன.
இன்றும்கூட இனத்துவேசத்தை தூண்டும் கருத்துக்களே முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் இவை தாராளமாகக் காணப்பட்டன. ஆட்சியை கைப்பற்றவும் அதனை கொண்டு நடத்தவும் அவர்கள் இனத்துவேசத்தையே தமது ஆயுதமாக கொண்டிருக்கின்றனர்.
ஆனால், சாதாரண சிங்கள மக்கள் இன்று உண்மை எது என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். தமிழ் மக்கள் தங்கள் எதிரிகள் அல்ல. அவர்களும் இந்நாட்டு மக்கள்தான். அரசியல்வாதிகளே இந்த பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொண்டனர் என்று பகிரங்கமாக கூறும் அளவுக்கு நிலைமை மாற்றம் கண்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று மனிதாபிமானமுள்ள சிங்கள மக்கள் பலர் குரலெழுப்பி வருவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய காலம் கனிந்து வருவதை நன்கு அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பிடித்து வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் சூனியமாகியுள்ளது.
அதேபோன்று தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் படையினரால் கையகப்படுத்தபட்டு, அவர்கள் தமது நிலங்களில் மீளகுடியேற முடியாத நிலை வருடக் கணக்கில் தொடர்ந்தும் வருகின்றது.
இதனால் அவர்கள் 20 தொடக்கம் 30 வருடகாலம் முகாம்களில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த அநீதிகள் தொடர வேண்டுமென ஜனநாயக நாடொன்றில் எந்தவொரு மனிதாபிமானமிக்க பிரஜையும் எதிர்பார்க்கமாட்டார்கள்.
இதுவொரு குறித்த இனத்துக்கு எதிரான அடக்கு முறையாகவே பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முன்னைய அரசு விட்ட தவறுகள் தொடர புதிய அரசு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழ் மக்களுடனான புரிந்துணர்வு, நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்துள்ளது.
இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். ஜனாதிபதியின் இத்தகைய செயற்பாட்டை சர்வதேசமும் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
உண்மையில் அது செயல்வடிவம் பெறும்போதுதான் உண்மை யான புரிந்துணர்வும், இன ஐக்கியமும் உருவாக வழிவகுப்பதுடன், தமிழ் மக்களின் நீண்டகாலத் துயரங்கள் துடைக்கப்படவும் வழியேற்படும்.
தமிழ் மக்கள் புதிய அரசின்மீது மிகுந்த எதிர்பார்ப்புக்களையும், அதீத நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். அது வீண்போகாத வகையில் நடவடிக்கைகள் அமைவது இன்றியமையாததாகும்.
மாறாக நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு, காலம் கடத்தப்படுமானால் முன்னைய அரசுக்கும் இன்றைய அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாத நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns0H.html

Geen opmerkingen:

Een reactie posten