தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியில் அலையெனத் திரண்ட மக்கள்! சிங்கள மாணவர்களும் பங்கேற்பு



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால் எந்தவித அரசியல் கலப்புமில்லாமல் திட்டமிட்டபடி, ஐ.நா சபையின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் கோயிலின் முன்றிலில் ஆரம்பமான பேரணி நல்லூர் கோயிலில் நிறைவுற்றது.
பேரணி நிறைவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கான மகஜரை கொழும்பில் உள்ள ஐ.நா. பிரதிநிதியிடம் வழங்குவதற்காக மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், இந்துக் குருமார் ஒன்றியத்தின் வாசுதேவக் குருக்கள் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட அறிக்கையில்,
எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியாகும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை மீதான விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தி அதனை செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போட்டமைக்கு நாம் எமது ஆழ்ந்த விசனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இந்த அறிக்கை திட்டமிட்டபடி வெளிவரவேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டின் போரின் போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் அறிக்கை பிற்போடப்படுவதை தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக நாம் புரிந்துகொள்கிறோம்.
அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பையும் (யுத்தத்திற்குத் தீவிர பங்காற்றியவர்கள் உட்பட), கடந்த கால உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டத் தவறியமை தொடர்பான வரலாற்றையும் கருத்தில் கொண்டு நோக்கும்போது, இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்படவல்ல எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையிலும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவு.
இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிங்கள பௌத்த தலைமைத்துவங்கள் தொடர்பிலான எமது நீண்ட கால அனுபவத்தில், இலங்கை ஆயுதப் படைகளைச் சார்ந்த அங்கத்தவர்கள் எந்தக் குற்றங்களுக்காகவும் உள்நாட்டில் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.
உள்நாட்டு விசாரணை மீதான சர்வதேச மேற்பார்வை வெறும் கால வீரியத்திற்கு மட்டுமே வழிகோலும் என்பதையும் அறிவோம். தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தமை மூலம் மஹிந்தவுக்கு எதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆட்சி மாற்றத்தின் ஊடாக பாரிய ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் நாம் வாக்களிக்கவில்லை.
ஜனாதிபதி சிறிசேன ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஒரு மாத காலப் பகுதி தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து புதிய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்கமுடியாது என்பதை நிரூபித்துவிட்டது.
நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளான இராணுவ மயமாக்கம், மக்கள் தம் சொந்தக் கிராமங்களில் குடியேறல், காணாமல் போனோர் மற்றும் சட்டவிரோத தடுப்புக் காவல் சம்பந்தப்பட்டோர் பிரச்சினைகள் தொடர்பில் சிறிசேன அரசாங்கத்தால் குறிப்பிடக்கூடிய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தில் இப்பிரச்சினைகள் உள்ளடக்கப்படவும் இல்லை. அரசியல் தீர்வுக்கான பேச்சைக் கூட சிறிசேன அரசு மேற்கொள்ளவில்லை.
ஆகவே, மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இலங்கை மீதான தம் விசாரணையை, தகவல் தருவோருக்குப் போதிய பாதுகாப்பு சர்வதேச விசாரணையாளர்களால் மேற்கொள்ள இலங்கை வர அனுமதி கோரி, இதன் மூலம் ஒரு முழுமையான - முறையான அறிக்கைத் தயாரிப்பதற்கு உதவும் வகையில், ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கபட்டதையடுத்து சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்லும் வகையில் அவசியமான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்குமாறு தங்களை வேண்டுகின்றோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt1E.html

Geen opmerkingen:

Een reactie posten