அநீதி இழைக்கப்பட்ட எம் இனத்திற்கான நீதியை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது வெகுசன அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட அமைதிவழிப் போராட்டத்திற்கு எம் தோளோடு தோளாக நின்று உரிமையோடு ஒன்றிணைந்த ஈழ தமிழ் மக்கள் அனைவரையும் நன்றியோடு நெஞ்சிருத்திக் கொள்கிறோம்.
யாருக்கும் யாரும் இங்கே தனிப்பட நன்றி சொல்வதற்கில்லை, ஏனெனில் இது பாதிக்கப்பட்ட எம் இனத்திற்கான போராட்டம்; கருவறுக்கப்பட்ட எம் வாழ்வாதாரத்திற்கான முரசறைவு. பல்கலைக்கழக சமூகம் என்று மட்டுமல்லாது நீதிவேண்டிய தமிழ்ச்சமூகம் என்ற அடிப்படையில் ஓரணியாய் நாம் அனைவரும் ஒன்றிணைந்தமையே இங்கே முக்கியமானது.
தமிழ் மக்களின் உரிமைக்குரலாய் என்றும் விளங்கிவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இம் மக்கள் புரட்சிக்கான இன்றைய போராட்ட மறுமலர்ச்சியானது இத்துடன் நின்றுவிடப் போவதில்லை.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கென்ற புரட்சிக்கவியின் சங்கநாதம் போல் எம் மக்களுக்கான நீதிமறுப்பின் எதிரொலியாய் நம்மனைவரினதும் இன்றைய பாரிய ஒன்றிணைவானது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் நிச்சயம் ஒரு செய்தியினைச் சொல்லியிருக்கும் என நாம் நம்பிக்கை பூண்டுள்ளோம்.
எம் தேசத்தில் நடந்தது பாரிய இனவழிப்பே. அதனை அனைத்துலக முன்னணி ஊடகங்கள் கூட ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தன. அத்துடன் ஐக்கிய நாடுகளின் ஆரம்ப அறிக்கை கூட இதனைக் கோடிட்டுக் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறிருந்தும் இன்றுவரை சர்வதேசத்திடமிருந்து எமக்கான நியாயத்தின் சிறுதுளியேனும் எம்மீது பட்டுத்தெறிக்கவில்லை. காலாகாலமாக ஏமாற்றப்பட்ட இனமாகவே எங்களின் வாழ்நிலை தொடர்கின்றது. இந்நிலையிலேயே எமக்கான நீதியினை நாம் வேண்டி நிற்கிறோம்.
தமிழ்மக்கள் விடயத்தில் முன்னைய அரசுகள்விட்ட தவறினையே இன்றைய அரசாங்கமும் செய்து கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் எம் உணர்வுகளையும் உரிமைகளையும் சூனியமாக்கவே முற்படுகின்றது.
இறுதிப்போரின் மனிதவுரிமை மீறல் விவகாரத்தில் முன்னைய அரசிலும் சரி இப்போதைய அரசிலும் சரி அதனோடு தொடர்புபட்டவர்களின் அங்கத்துவமே தொடர்கிறது.
இந்நிலையில் உள்நாட்டு விசாரணை மீது அணுவளவு நம்பிக்கையும் எமக்கு இல்லை. அதனை நாம் ஏற்கப் போவதும் இல்லை. தாமதப்படுத்தப்பட்ட நீதியானது தட்டிக்கழிக்கப்பட்ட நீதியாகவே கொள்ளப்படும்.
எனவே ஐக்கிய நாடுகள் சபை அந்த தவறினை இழைப்பதனையே இன்றைய போராட்டத்தில் நாம் உணர்த்தியிருந்தோம்.
சுமார் ஒரு தசாப்தத்தின் பின் எமது பல்கலைக்கழக வளாகத்தில் அணிதிரண்ட இம் மாபெரும் மக்கள் புரட்சியானது எதிர்காலத்திலும் அமைதி வழியிலான எம்போராட்டக் கதவினை திறந்து கொண்டிருக்கும்.
அந்த வகையில் எம் மக்களின் குரலாக நாம் என்றும் உழைத்துக் கொண்டேயிருப்போம் என்பதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உரிமையோடு கூறிக் கொள்கிறோம்.
- யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியில் அலையெனத் திரண்ட மக்கள்! சிங்கள மாணவர்களும் பங்கேற்பு
- யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை!
- எம் இன நீதிக்காய் ஓரணி திரண்ட ஈழ மக்களுக்கு…
- இலங்கையில் உள்ளவர்களிடம் தமிழர்கள் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது? -குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா? - மன்னார் ஆயர்
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt4E.html
Geen opmerkingen:
Een reactie posten