தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

கிரிஷாந்த டி சில்வா புதிய இராணுவத் தளபதியானார்! கோத்தாவுக்கு நெருக்கமானோர் ஓரங்கட்டப்பட்டனர்!



புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வாரங்களின் பின்னர், கடந்த 16ம் திகதி, இலங்கையின் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவினால், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இராணுவக் கட்டமைப்பு பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இராணுவம் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களும், அவரது விசுவாசிகளும், உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு, தாராளமாகக் கவனிக்கப்பட்டனர்.
அதைவிட, ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில், சுமார் 2,000 இராணுவத்தினரைக் கொண்டு, ஆட்சியைத் தக்கவைக்க இராணுவச் சதித்திட்டம் ஒன்று அலரி மாளிகையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டும் உள்ளது.
இந்தப் பின்னணிகளில், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் இடம்பெறும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அது, கொஞ்சம் தாமதமாக நடந்தேறியிருக்கிறது. கடந்த 16 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின்படி, 15 மேஜர் ஜெனரல்கள், மற்றும் மூன்று பிரிகேடியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி, இந்த இடமாற்றங்களில் இன்னொரு விடயமும் நடந்திருக்கிறது.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவானவர்கள், நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் இராணுவ அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு, முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்பு அமைச்சுக்குள், குறிப்பிடத்தக்க பதவியைப் பெற்றுக் கொள்ளாவிடினும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கணிசமான செல்வாக்கைச் செலுத்தி வருகிறார்.
கடந்த வாரம் இராணுவக் கட்டமைப்பில் இடம்பெற்ற மாற்றங்களில் ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய பங்கு வகித்திருப்பதாகக் கூறுப்படுகிறது.
2010ம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தனர் என்ற குற்றச்சாட்டில், 2010 பெப்ரவரியில், 14 இராணுவ உயர் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டிருந்தனர்.
உள்நாட்டில் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையடுத்து அவர்களில் பலரும் வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்களில், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உள்ளிட்ட 10 அதிகாரிகள் மீண்டும் இராணுவத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற மறுநாளே, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிரிகேடியர் கெப்பிட்டிவெலன்ன ஆகியோர் நாடு திரும்பியிருந்தனர்.
அப்போதே, இவர்களுக்கு இராணுவத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதுபோலவே, கடந்த வாரம் இடம்பெற்ற இராணுவக் கட்டமைப்பு மாற்றங்களின் போது, இராணுவச் செயலாளராக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், நடவடிக்கைப் பணிப்பாளராக பிரிகேடியர் கெப்பிட்டிவலன்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவையிரண்டும் இராணுவத் தலைமையகத்தில் உள்ள முக்கியமான பதவிகளாகும்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாகவே, யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர், முன்னைய அரசாங்கத்துக்கு நெருக்கமானவர் என்பதுடன் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவராகவும் இருந்தவர்.
அவருக்குப் பதிலாக, யாழ். படைகளின் தளபதியாக, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் முக்கிய பங்கு வகித்த - ஜெனரல் சரத் பொன்சேகாவின் போர்த்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைத்த ஒரு அதிகாரி.
வெலிஓயாவில் இருந்து நகர்வுகளை ஆரம்பித்து, முல்லைத்தீவைக் கைப்பற்றிய 59வது டிவிசனுக்குத் தலைமை தாங்கியிருந்தார் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த.
அவரை இப்போது, முக்கியத்துவம் மிக்க படைத் தலைமையகங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருக்கிறது புதிய அரசாங்கம்.
வன்னிப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, கிழக்குப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் லால் பெரேரா, மத்திய படைகளின் தலைமையக தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா ஆகியோரும் இராணுவத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா சபுகஸ்கந்தையில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வன்னிப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவும், கிழக்குப் படைத் தலைமையகத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜனக வல்கமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, முன்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தளபதியாக இருந்தவர்.
கடைசியாக, இராணுவச் செயலராகப் பணியாற்றியவர். அங்கிருந்தே அவர் வன்னிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆயுததளபாடப் பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இறுதிப் போரில் 53வது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர் என்பதுடன் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டதாகவும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பவர்.
இந்த இடமாற்றங்களில், கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமான அதிகாரிகள் ஓரம்கட்டப்பட்டுள்ளனர், முக்கிய பதவிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
அல்லது எந்தப் பதவிகளும் அளிக்கப்படாமல், இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில், இன்னொரு விடயம் கவனிக்கப்பட்டுள்ளது- அது போர் முனையில் ஆற்றிய செயல்.
இங்கு போர்க்குற்றங்கள் குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை.
அதனால் தான், போரில் முக்கியமாகப் பங்கெடுத்த பங்கெடுத்த மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதுபோலவே, இறுதிப்போரில் முக்கிய பங்காற்றியவரும், தற்போது முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதியாக பதவி வகிப்பவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மீது புதிய அரசாங்கம் கை வைக்கவில்லை.
எனினும், போரில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா போன்றவர்கள் பின்னர், கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசியாக மாறிவிட்டதால், அவர் ஓரம்கட்டப்பட்டு, இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம், இராணுவக் கட்டமைப்பில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இராணுவக் கட்டமைப்பில் மற்றொரு பாரிய மாற்றமும் இடம்பெறவுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி பல்வேறு ஊடகங்களிலும் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால், புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் சார்பில், கடந்த 18ம் திகதி பிரிகேடியர் ஜெயவீர ஒரு அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தார்.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பதவிக்காலம் பெப்ரவரி 22 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் தான், அடுத்த தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், முக்கியமாக முப்படைகளின் தளபதிகள், கூட்டுப்படைகளின் தளபதி போன்றோர் மாற்றப்படுவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, அலரி மாளிகைச் சதித்திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்தவர் என்று புதிய அரசாங்கத்திடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டார்.
என்றாலும், அவரைத் தொடர்ந்து அந்தப் பதவியில் வைத்திருப்பதை ஜெனரல் சரத் பொன்சேகா விரும்பவில்லை.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணையில் தனக்கு எதிராக பொய்ச்சாட்சி கூறியவர் என்பதால் லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க மீது அவருக்கு கடும் சீற்றம் உள்ளது.
அதுபோலவே, கூட்டுப்படைகளின் தளபதியான ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மீதும், சரத் பொன்சேகாவுக்கு கடுமையான கோபம் உள்ளது.
சரத் பொன்சேகாவின் போர்முனைச் சாதனைகளை அபகரித்துக் கொண்டவர் அவர்.
மட்டுமன்றி, சரத் பொன்சேகாவுக்கு நிகராக ஜெனரல் பட்டத்தையும் சேவையில் உள்ள போதே பெற்றவர்.
சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர்.
இதுபோன்ற காரணங்களால், ஜெனரல் ஜகத் ஜெயசூரியவையும், லெப். ஜெனரல் தயா ரத்நாயக்கவையும், ஓரம்கட்டுவதில் குறியாக இருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா.
இவர்கள் பங்கேற்றதால், சுதந்திர தின நிகழ்வில் கூடப் பங்கேற்கவில்லை என்றும், இவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் தான் பங்கேற்கமாட்டேன் என்றும் வெளிப்படையாகவே அவர் கூறியிருக்கிறார்.
இதனால் இவர்களால் தொடர்ந்து பதவியில் நீடிப்பது கடினமான காரியம்.
அதேவேளை, புதிய இராணுவத் தளபதி பதவிக்கு 8 மேஜர் ஜெனரல்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
மேஜர் ஜெனரல்களான கிரிசாந்த டி சில்வா, பிரசாத் சமரசிங்க, ஜகத் ரம்புக்பொத்த, ராஜகுரு, மிலிந்த பீரிஸ், லலித் தவுலகல, ரத்நாயக்க, ஜெகத் டயஸ் ஆகியோரே அவர்கள்.
இவர்களில் யார் அடுத்த இராணுவத் தளபதி என்று இந்தப் பத்தி எழுதப்படும் வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தற்போதைய நிலையில், மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவே பதவி வரிசையில் மூப்பாக இருக்கிறார்.
அவர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவை விடவும் பதவி வரிசையில் மூப்பு நிலையில் உள்ளவர்.
ஆனால், முன்னைய அரசாங்கத்தினால் அவருக்கு இராணுவத் தளபதி பதவி அளிக்கப்படவில்லை.
எனினும், கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமாக இருந்தவர், மற்றும் போரின் பின்னர் நடந்த நீதிக்குப் புறம்பான சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பன போன்ற குற்றச்சாட்டுகள், மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு காரணமாகலாம்.
அவரையடுத்து, மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த இருப்பதால் தான் அவரே அடுத்த தளபதி என்று செய்திகள் வெளியாகின.
புதிய இராணுவத் தளபதி நியமனத்தில், ஜெனரல் சரத் பொன்சேகா செல்வாக்குச் செலுத்துவதாக கூறப்படுகிறது.
எனினும், அதைவிட இன்னொரு விடயமும் கூடுதல் செல்வாக்குச் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது தான் போர்க்குற்றங்கள்.
போர்க்குற்றச்சாட்டுகளில் தொடர்புபடாத அதிகாரியையே புதிய அரசாங்கம் இராணுவத் தளபதியாக நியமிக்கும் என்று கருதப்படுகிறது.
புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறலில் உள்ள தனது கடப்பாட்டை உலகிற்குக் காட்ட அது அவசியம்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் விரோதம் வளர்க்காத, போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடாத அதிகாரிகள் என்று பார்த்தால், அடுத்த இராணுவத் தளபதி பதவிக்கு வாய்ப்புள்ளவர்களாக ஒரு சிலரே எஞ்சக் கூடும்.
சுபத்ரா

http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnsyJ.html

Geen opmerkingen:

Een reactie posten