தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 maart 2011

சுட்டவர்களைப் புதைக்கும் புதை குழி: புது ஆதாரங்கள் வெளியாகியுள்ளது !

29 March, 2011 by admin


முள்ளிவாய்க்காலில் மே 18ம் தேதி சரணடைந்த பல பொதுமக்களையும், புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் இராணுவம் சுட்டுக் கொண்றது யாவரும் அறிந்ததே. இவர்களில் புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் மனைவி மற்றும் பிள்ளைகளும் அடங்குவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நாம் சனல் 4 தொலைக்காட்சியில் பார்த்த கொலைகள், நடைபெற்ற இடத்துக்குப் பக்கமாக இக் கொலைகள் நடந்திருக்காலம் எனவும், அங்கே சுட்டுகொல்லப்பட்ட பலரது உடல்களை இராணுவம் உடனே குழி தோண்டி அவ்விடத்திலேயே புதைத்தது எனவும் கூறப்படுகிறது. ஆனல் நீங்கள் இங்கே பார்ப்பது பிறிதொரு உடல்களாகும். இவை பிறிதொரு இடத்தில் சுடப்பட்டு, பின்னர் அவர்கள் உடல்களை டிராக்டர் வண்டியில் ஏற்றிச் செல்கிறது இராணுவம்.

இவர்களின் உடல்கள் பிறிதொரு இடத்தில் கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டதாக இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார். சரணடைந்த சில பெண்புலிகளைக் கொண்ற இராணுவத்தினர், அவர்களின் உடல்களையும் ஏற்றிச் சென்று புதைத்தாக தற்போது செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது எங்கே எவ்வாறு நடந்தது என்பது குறித்த விபரங்கள் தற்போது அதிர்வு இணையத்தால் பெறப்பட்டு, அவை ஆவணப்படுத்தப்படுகிறது. மேலும் கீழ் காணும் புகைப்படத்தில் உள்ள மூவரையும் இலங்கை இராணுவம் கைதுசெய்து, அவர்களை தமது தற்காலிக முகாமுக்கு கூட்டிச் சென்றுள்ளது.



மே 18ம் தேதி மாலை சுமார் 5.19 க்கு இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப் புகைப்படத்தில் இருக்கும் மூவரும் தற்போது உயிருடன் உள்ளனரா ? இல்லை இவர்கள் யார் என அறிய அதிர்வு இணையம் பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. எனவே இப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தெரிந்தால் உடனடியாக எம்மோடு தொடர்புகொள்ளவும்.

இப்படத்தில் உள்ளவர்கள் புலிகளின் தளபதி ராம் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனைவி பிள்ளைகளைப் பிடித்த இராணுவம் பின்னர் இவர்களைக் காட்டி தளபதி ராமையும் சரணடையச் செய்தனர் என்று சொல்லப்படுகிறது.

புதுமாத்தளான் பகுதியைக் திடீரென இராணுவம் கைப்பற்றியவேளை, அங்கே இருந்த தற்காலிக வைத்தியசாலையில் காயப்பட்டு இருந்த பல பெண்களை இராணுவம் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அவர்களை கேலிசெய்தும், போத்தியிருந்த ஆடைகளைக் களைந்து அவர்களை மானபங்கப்படுத்தியதாகவும், மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கீழ்தரமான இவ்வேலைகளைச் செய்யும்போது மோபைல் போனில் எடுக்கப்பட சில புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.




woensdag 30 maart 2011

ஆஸ்திரேலிய இந்து கோவிலில் துப்பாக்கி சூடு. (வீடியோ இணைப்பு)

[ 2011-03-30 20:44:21 | வாசித்தோர் : 119 ]

புதுத் தெற்கு வேல்ஸில் உள்ள ஆஸ்திரேலியாவின் பழமைவாய்ந்த இந்துகோயிலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் இந்து சமுதாயத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபர்னில் உள்ள 30 ஆண்டுகளுக்கும் மேலான ஸ்ரீமந்திர் ஆலயத்தில் முகமூடிகள் அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்து மார்ச் 19-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோயிலில் தாக்குதல் நடத்திய அந்த நபர்கள் சிசிடிவி விடியோவில் பதிவாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒருபகுதியாக இந்து சமுதாயத்தினருடன் இணைந்து போலீசார் செயல்பட்டு வருவதாக சிட்னி பத்திரிகை ஒன்று போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சிசிடிவியில் பதிவான விடியோ காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், எனினும் அதன்மூலம் இதில் எதுவும் செய்யமுடியவில்லை என்றும் இந்தியன் என்ற செய்திப் பத்திரிகையின் ஆசிரியர் ரோஹித் ரெவோ தெரிவித்தார்.

கோயிலின் பிரதான கதவுக்கு சில அடி  தூரத்தில் உள்ள நுழைவாயிலில் சில துப்பாக்கிக் குண்டுகள் மோதி உள்ளன. அதில் ஒரு குண்டு சுவர் முழுவதும் உரசிச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

குண்டுகளின் அடையாளங்களைப் பார்க்கும்போது, சிறப்புவாய்ந்த பெரிய குண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சாதாரண குண்டுகள் மிகச்சிறிய அகலத்துடன் இருக்கும். ஆனால் இந்த குண்டுகள் சுவர்களில் பெரிய துளைகளை உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

dinsdag 29 maart 2011

சோகம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ நல்லடக்கம் செய்யப்பட்ட சக்திதரனின் பூதவுடல்!

தங்களது மைந்தன் சக்திதரனை இழந்த சோகம் தாங்காது குப்பிளான் கிராமமே இருள் சூழ்ந்து கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.


கவிஞராக, மிகச் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, தீவிர சமயப் பற்றுக் கொண்ட பல்வேறு பரிமாணங்களைப் பெற்ற மிகச் சிறந்த ஆளுமையாகக் காணப்பட்ட சக்திதரனின் மரணத்தை ஜீரணிக்க முடியாத நிலை குப்பிளான் எங்கும் காணப்பட்டது.

கிராமம் எங்கும் தோரணங்கள், கறுப்புக் கொடிகள், மதில்கள் தோறும் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளுடன் எங்கும் ஒரு வித மயான அமைதி.. குப்பிளான் கிராமமே திரண்டு வந்து எம் தவப் புதல்வனுக்கு தமது இறுதிஅஞ்சலியைச் செலுத்தியது.

குடும்பத்தினரைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. அவர் ஆசிரியராகப் பணியாற்றிய சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
சக்திதரனின் வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் கண்ணீர் அஞ்சலிக்கூட்டம் இடம்பெற்றது.

அதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் பேசுகையில்,

மிகச் சிறந்த ஆசானை தமது பாடசாலை இழந்து விட்டதாகக் கூறினார். அவர் கல்வி கற்பித்த மாணவர்கள் தங்கள் பாடசாலையில் என்றுமில்லாதவாறு சிறந்த பெறுபேற்றைப் பெற்றதாகக் கூறினார். பாடசாலையில் இடம்பெறும் சமய நிகழ்வுகளிளிலும் சரி ஏனைய விழாக்கள் குறிப்பாக பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறப்பாக மாணவர்களை வழிநடாத்தும் பண்பைக் கொண்டவர் என்றும் எப்போதும் குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கு வந்துவிடும் அவரது நேரம் தவறாமை தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் குறிப்பிட்டார். (குப்பிளானுக்கும் சாவகச்சேரிக்கும் இடையிலான தூரம் யாவரும் அறிந்ததே).

அதிபருடைய இரங்கலுரையை அடுத்து பலரும் இரங்கல் உரையாற்ற முன் வந்தனர். அடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் உரையாற்ற வந்தார் ஆனால் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரையே உரையாகத் தந்து விட்டுப் போய்விட்டார். இதே நிலை அவரைத் தொடர்ந்து பேச வந்த நிறையப் பேருக்குக் காணப்பட்டது.

பின்னர் அவர் கற்பித்த தரம் 7 C மாணவர்களின் இரங்கலுரையும் இறங்கற்பாடலும் இடம்பெற்றன.

குப்பிளான் கிராமமே கண்டிராத அளவுக்கு ஏராளமான மக்களால் வீடு நிரம்பி வழிந்தது. அங்கு வந்த எல்லோருமே துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணமிருந்த்தனர்.

பின்னர் மதியம் 1.40 மணியளவில் எம்மைந்தனின் பூதவுடல் குப்பிளான் இளைஞர்களால் காடகடம்பை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பூதவுடல் கொண்டு சென்ற வழி நெடுகிலும் தெருவெங்கும் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு அதன் மேலேயே கொண்டு செல்லப்பட்டது.

போகும் வழியெங்கும் இளைஞர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுதது பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்தது. மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இளைஞர்களின் ஓலத்துக்கு நடுவே எம் மைந்தனின் பூதவுடல் கனத்த மனதுடன் புதைக்கப்பட்டது.

எப்போதும் சிரித்த அந்த அப்பாவித்தனமான முகத்தையும் யதார்த்தமான சொல்லாடல்களையும் நாம் இனி எங்கு காண்போம்?

சில கேள்விகளும் விடை தெரியாத வினாக்களும்?

* இன்று ஊடகங்களில் வந்த செய்தியை யாவரும் அறிந்திருப்பீர்கள்... தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் துப்பாக்கிகளால் சூழப்பட்டு இருக்கும் ஒரு பிரதேசத்தின் தனி மனிதனின் பாதுக்காப்பும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வாதிகாரப் போக்கும் கொண்ட இராணுவ ஆட்சியில் உயிர் வாழ்தலென்பது கஷ்டமான காரியம் தான்... வேறு எதுவும் பேசாமல் உணவு உட்கொள்ள மட்டும் வாயைத் திறந்தால் அதிககாலத்துக்கு உயிர் வாழலாம்.

* இன்று ஊர் மக்களோ அல்லது குடும்பத்தினரோ சக்திதரனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசுவதற்கு கூட ஒரு வித பய உணர்வு காணப்படுகின்றது... உண்மைதான் நடந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஜனநாயக ஆட்சியில் நாளைக்கு அவர்களின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது...?

* சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரு வாரங்களின் பின்னர் யாழ் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சக பொலிஸார்கள் சகிதம் இன்றைய தினம் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகும் மட்டும் குறிப்பாக இவ்வளவு நாளும் இந்தப் பொலிஸார் உரிய விசாரணை நடத்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டது நிதர்சனமாகியுள்ளது.

* இன்றைய தினம் அச்செழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று மலர் வளையம் வைத்து அனுதாபம் தெரிவித்தார்களாம்... (ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை ஞாபகத்துக்கு வருகிறது)

* இவரின் விடை தெரியாத அந்த மரணத்தை நீதிமன்றில் கூட முறையிட முடியாத நிலை காணப்படுகின்றது. இதைத் தான் பாரதி அழகாகச் சொன்னான்... பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று...

* வேறு எங்கும் நீதி கிடைக்காது... இனி என்ன செய்வது? கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவரிடம் பிரார்த்தியுங்கள்.. எங்கள் அன்பு மைந்தனின் ஆத்மா சாந்தியடைய....

-துருவன்
28 Mar 2011

இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்!
[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 01:26.17 AM GMT ]
யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது – 28) என்ற ஆசிரியர் கடந்த வாரம் இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் இராணுவத்தினர் அவரை கடுமையாகத் தாக்கியதாக அந்தப் பகுதியில் நின்றிருந்த வர்த்தகர்கள் கண்ணுற்றிருக்கின்றனர்.
இதேவேளை மறுநாள் காலை யாழ். ஆரியகுளம் சந்திப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற நாளன்று மாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஆசிரியர் சம்பந்தன் சக்திதரன் காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அண்மித்த மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியிருக்கின்றார்.
அதே மதுபான விற்பனை நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ் தகவல் அனுப்பியிருந்ததாக குறித்த நண்பர் தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் குறித்த நண்பர் அங்கு சென்றிருக்கவில்லை.
அதன் பின்னர் யாழ்.பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ஆசிரியர் சக்திதரனை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் குப்பிளானைச் சேர்ந்த நபர் போதை அதிகம் என்பதால் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என்று மறித்திருக்கின்றனர்.
அங்கிருந்து 7.30 மணியளவில் வெளியேறிய சக்திதரன் திருநெல்வேலி சந்திப்பகுதியில் தடுமாறியதாகவும், அவரை இடைமறித்த இராணுவத்தினர் இருவரும் சிவில் உடையில் இருந்த இருவரும் உரையாடியிருக்கின்றனர். அதன் பின்னர் இராணுவத்தினர் அவரைத் தாக்கியதை தாம் கண்ணுற்றதாக திருநெல்வேலி சந்திப் பகுதி வர்த்தகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை தமிழீழம் கிடைத்தால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடியாது என்று இராணுவத்தினரைப் பார்த்து அவர் தெரிவித்ததை அடுத்தே இராணுவத்தினர் அவரைத் தாக்கியதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரதே பரிசோதனையில் உயிரிழந்தமைக்கான காரணம் கொலையே என்று சட்டவைத்திய அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு - இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
ஆசிரியரான சத்திதரன் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குப்பிளானிலுள்ள தமது வீட்டிலிருந்து தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார். அங்கு நண்பருடன் இணைந்து சில மணிநேரத்தைக் கழித்துள்ளார்.
பின்னர் பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணித்துள்ளார். திருநெல்வேலியில் பழைய பிரதேச செயலகத்திற்கு அருகில் இவரை இராணுவத்தினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அவ்வேளை அங்கு ஒரு முறுகல் நிலைமை ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அங்கு மக்கள் கூடியுள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அருகிலுள்ள மஞ்சமுன்னா தடியை முறித்து மிரட்டியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது குறித்துத் தெரியவில்லை.
அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் பிரஸ்தாப ஆசிரியர் சுயநினைவு இல்லாத நிலையில் 119 அவசர அம்புலன்ஸ் மூலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டார். அங்கு அவர் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகத் தெரிவித்தே அனுமதிக்கப்பட்டார். உடனடியாக ஆசிரியர் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடலில் உள்ளாடையைத் தவிர வேறெந்த ஆடைகளும் இல்லாத நிலையிலேயே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து சுயநினைவில்லாமல் இருந்த பிரஸ்தாப ஆசிரியர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி மரணமானார்.
இவரது முதுகுப்புறத்தில் வயரினால் தாக்கியமைக்கான காயங்கள் காணப்படுவதுடன் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் (காயங்கள்) உள்ளன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் காயமடைந்தமைக்கான எந்தவித அடையாளங்களும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
யாழ்.நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா யாழ்.ஆஸ்பத்திரியில் மரண விசாரணைகளை நடத்தினார். சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

zaterdag 26 maart 2011

கண்கள், கைகளைக் கட்டிவிட்டு சிகரெட்டினால் சுட்டுத் தாக்கினார்: கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட லண்டன் இளைஞன் தகவல்

[ வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011, 03:59.38 AM GMT ]
என்னைக் கடத்தியவர்கள் எனது கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு கதறக்கதற முட்கம்பிகளாலும் மரச்சலாகைகளாலும் தாக்கினர். பல தடவைகள் மயங்கி வீழ்ந்த போதும் பல இடங்களில் காயம் ஏற்படுமளவுக்கு சிகரெட்டினால் சுட்டனர்.
ஒருவர் சிங்கள மொழியில் ஏதேதோ கேள்விகள் சொல்லச் சொல்ல இன்னொருவர் அதனை மொழி பெயர்த்து தமிழில் கேட்டவாறு இருவரும் தாக்கினர்.
இவ்வாறு தெரிவித்தார் லண்டனில் இருந்து வந்திருந்த வேளை இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு 27 மணித்தியாலங்களின் பின் வயல்வெளியில் வீசப்பட்ட மீசாலை மேற்கைச் சேர்ந்த கதிரவேலு அஜந்தன் (வயது29) என்ற இளைஞன்.
அவர் கடத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது
குறித்த இளைஞன் கடந்த டிசெம்பர் மாதம் மாணவர் விசாவில் லண்டன் சென்றிருந்தார். இந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த இடத்துக்கு வந்த அவர் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக கடந்த திங்கட்கிழமை யாழ். நகருக்கு வந்தபோது இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்.
தபாற்கந்தோர் வீதியூடாக ஸ்ரான்லி வீதிக்குச் செல்லும் போது இவருக்கு பின்புறமாக வந்த வெள்ளை வானில் இருந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்.
வெள்ளை வானுக்குக் கீழே வீழ்த்தப்பட்டு அவர் அணிந்திருந்த ரீசேட்டை கழற்றி அவரது கண்களை கட்டினர். கயிற்றினால் கைகளை பின்புறமாக வைத்துக் கட்டினர்.
லண்டனுக்கு சென்றதற்கான காரணம், அதற்கான பணம் எவ்வாறு கிடைத்தது, திரும்பி வந்ததற்கான காரணம் என்பவற்றை விசாரித்ததோடு ஒன்லைன் மூலமாகப் பணம் பெற்றுக் கொள்ளும் வங்கி அட்டைகள், பேர்ஸ் என்பவற்றையும் எடுத்து வைத்து வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டனர்.
இந்த விசாரணைகள், தாக்குதல்கள் வீடொன்றில் வைத்தே இடம்பெற்றது.
பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30 மணியளவில் அராலி வீதியில் கல்லுண்டாய் வீதிப் பகுதியிலுள்ள வயற்காணி ஒன்றினுள் அவரைத் தூக்கி வீசிவிட்டு வெள்ளை வான் கும்பல் தப்பிச் சென்றது.
அங்கிருந்து பஸ் மூலம் யாழ்.நகர் வந்த அவர் தற்போது யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

woensdag 16 maart 2011

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில் சித்திரவதைக் கூடங்கள்

[ புதன்கிழமை, 16 மார்ச் 2011, 01:05.20 AM GMT ]
வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பாடசாலைச் சூழலில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கலாம் என்ற அச்சம் பலரிடையேயும் ஏற்பட்டுள்ளதாக ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தப் பகுதிகளில் பாரிய சித்திரவதை முகாம்கள் இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீளக்குடியமர்வு தாமதமாவதற்கு இந்தப் பின்னணியும் காரணமாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது.
மேலும் பல தடுப்பு முகாம்கள் அல்லது சித்திரவதை முகாம்கள் உள்ளே இருப்பதாகவே பொதுமக்கள் பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர்.
அண்மையில் மீள இயங்க அனுமதிக்கப்பட்ட வசாவிளான் மத்திய மகாவித்தியாலய சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் சித்திரவதைக் கூடங்களை அப்பகுதிப் பொதுமக்கள் கண்டுள்ளனர். எனினும் அடுத்த சில தினங்களில் படையினர் அவசர அவசரமாக அவற்றினை உருக்குலைத்து விட்டனர் எனவும் ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர் கூறுகிறார்.
முற்றுமுழுதாக கதவுகள் மூடி அடைக்கப்பட்ட நிலையில் இருண்ட அறைகளையும் அங்கு பெருமளவில் இரத்தம் சிந்தப்பட்ட நிலையில் தடயங்களையும் கண்டுள்ளனர்.
அத்துடன் பலகைகள் கொண்ட கட்டில்கள் பல சித்திரவதை செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டும் குறிப்பாக முட்கம்பிகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டதான முட்கம்பித் தடயங்களையும் அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
எனினும் இது தொடர்பாக படை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து அவசர அவசரமாக அங்கு சென்ற அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்த அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். பின்னர் படையினர் மீண்டும் ஓரிரு வாரங்கள் அங்கிருந்து அனைத்தையும் சுத்திகரித்த பின்பே பாடசாலையை மீண்டும் வழங்கியதாக தெரியவந்துள்ளது.
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இவ்வாறு விடுவிக்கப்பட்ட பல பகுதிகளிலும் இவ்வாறு தடயங்கள் காணப்படுகின்றன.
யாழ்குடாநாட்டில் படையினரால் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போன ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எங்கே என்ற தகவல்கள் இன்றுவரை இல்லாமல் போயுள்ளது. இவர்கள் அச்செழு ஊரெழு முகாம்கள் ஊடாக பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் கனரக வாகனங்களில் உள்ளே கொண்டு சென்றமைக்கான பல தடயங்கள் வெளிவந்திருக்கின்றன.
எனினும் பின்னர் அவர்கள் எவருமே வெளியே வந்திருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் சித்திரவதையின் பின் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றது. அந்த வகையிலேயே இந்த சித்திரவதைக் கூடங்களும் அமைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு பகுதியினர் பலாலியில் உள்ள தடுப்பு முகாம்களில்:-
இதனிடையே வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு பகுதியினர் பலாலியில் உள்ள தடுப்பு முகாம்களில் இரகசியமாக உள்ளதனையும் ஜீரீஎன் புலனாய்வுச் செய்தியாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே தெல்லிப்பளையில் விசேட தடுப்பு முகாம் ஒன்று இயங்கிய போதிலும் அது திடீரென மூடப்பட்டது. அங்கிருந்தவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றித் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையிலேயே வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இராணுவ சித்திரவதை கூடங்களும் மனிதப் புதைகுழிகளும் இருக்கலாம் என்ற ஊகங்களும் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.