தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

விமலின் மனைவிக்கு கண்டுபிடிக்க முடியாத நோய் - தள்ளுவண்டியில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் சஷி!



குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலியான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு ஒன்றை பெற்றமை மற்றும் இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ஸவின் மனைவி கண்டுபிடிக்க முடியாத நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றத்தில் நேற்று நீதவான் கேள்வி எழுப்பும் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியால் கூட கண்டுபிடிக்க முடியாத அந்த நோய் என்னவென்று கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டி, ஷசி வீரவன்ஸவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷசி வீரவன்ஸவை தனியார் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தகவல் வெளியிடும் போதே நீதவான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
சட்டத்தரணி விஜேசிறி அம்பவத்த – முறைப்பாட்டாளரின் இந்த வழக்கு நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை சந்தேக நபரான எமது தரப்பு வாதியை தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற இடமளிக்குமாறு கோருகிறேன்.
நீதவான் – சிறைச்சாலை சட்டத்தின்படி சந்தேக நபருக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறமுடியாது. சந்தேக நபரான பெண்ணுக்கு எந்த நோயும் இல்லை என சட்டவைத்திய அதிகாரி பரிசோதனை அறிக்கையில் கூறியுள்ளார். சட்டவைத்திய அதிகாரியால் கூட கண்டுபிடிக்க முடியாத அந்த நோய் என்ன?. எந்த நோயாக இருந்தாலும் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியும்.
சிறைச்சாலை அதிகாரிகள்- விசேட மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
நீதவான் – சிகிச்சையளிக்க முடியும். முதலில் நோய் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏன் சொல்ல முடியாத கடினம் ஏதேனும் உண்டா?.
சட்டத்தரணி- விஜேசிறி அம்பவத்த – சந்தேக நபரான பெண்ணுக்கு காது வலி இருக்கின்றது. அவ்வப்போது மயக்கம் ஏற்படுகிறது.
நீதவான் – சட்டவைத்திய அதிகாரியால் கூட கண்டுபிடிக்க முடியாத நோய் என்னவென்று எனக்கு புரியவில்லை. சுகவீனம் தொடர்பான வைத்திய ஆலோசனை பெறப்பட்டதா?. நோய் ஒன்று இருந்தால் மட்டுமே தேசிய வைத்தியசாலையில் கூட சிகிச்சை பெற முடியும் என்றார்.
தள்ளுவண்டியில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் சஷி
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர், சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அவரை, தள்ளுவண்டியில் படுத்திருந்தவாறே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் பாதுகாப்போடு மாலபே தனியார் வைத்தியசாலையில் நேற்று சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டபோது, அவரை நலம் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ அங்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu0E.html

Geen opmerkingen:

Een reactie posten