தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

இனவாதத்துக்கு எதிரான பிரதமர் ரணிலின் கருத்து !

இனவாதத்தைத் தூண்டி நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கச் செய்யும் விதத்தில் வடக்கிலும் தெற்கிலும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இனவாதத்துக்கு எதிரான எமது பயணத்துக்கு இரு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்றன.
வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் வெளியிட்ட இனவாத கருத்தானது மேற்குறித்த ஒருதரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியது.
எனினும் வடக்கு மாகாணசபையின் தீர்மானம் குறித்த இனவாத செயற்பாட்டுக்கு வடக்கு முதல்வருக்கு கன்னத்தில் அடித்தால் போல் சர்வதேசம் பதில் வழங்கியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்திருக்கின்றார்.
நாட்டின் நல்லிணக்க பயணத்துக்கு இனவாத சக்திகள் தடையாக உள்ளன. எமது ஆட்சியில் இனவாதத்துக்கு இடமில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீளவும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எந்தவொரு ஆட்சேபமும் இல்லை. எனினும் இனவாதத்தை போஷிக்க முயலக்கூடாது. நாட்டில் இனவாதத்தை போஷிக்கும் பத்திரிகைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுப்போம்.
புதிய நல்லாட்சி மிக்க அரசுடன் விளையாட வேண்டாம். இதுவே இனவாதிகளுக்கான எனது இறுதி எச்சரிக்கை. நாட்டின் மூவின மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடனான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை குருநாகலில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்.
நாம் நாட்டை கட்டியெழுப்பும் அதேவேளை வடக்கு மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்போம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதுடன் காணாமல்போனோர் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வோம்.
யுத்தம் இல்லாதபோது தெற்கில் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்பட்டதென்றால் வடக்கு மக்கள் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டிருப்பர் என்பதை எமக்கு அறிய முடியும்.
யுத்தத்தின் போது வடக்கு மக்கள் வீடுகளின்றி அநாதரவாக்கப்பட்ட போது மஹிந்த ராஜபக்ச வடக்கில் அலரிமாளிகையை நிர்மாணித்து சுகபோகம் அனுபவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்படுவார்கள் என்றும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் எடுத்துக்கூறியுள்ளார்.
உண்மையிலேயே நாட்டில் இனவாதத்தை பரப்பி மீண்டும் அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்த பல்வேறு இனவாத சக்திகள் முனைந்து வருகின்றன.
கடந்த வாரம் நுகேகொடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான தூய்மையான ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் அமைப்புக்களும் இணைந்து கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தக் கூட்டத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனவாதப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இவ்வாறு சிறுபான்மை இனமக்களுக்கு எதிராக பெரும்பான்மை இன மக்களை தூண்டிவிடும் வகையில் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இனவாத பிரசாரங்களை கட்டவிழ்த்து விடும் நடவடிக்கைகளில் இத்தகைய சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
இதனையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்பகுதியில் இனவாதத்தைத் தூண்ட முயற்சி எடுக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டியதாகவே தெரிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலுக்கு வருவது தொடர்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும் இனவாதத்தை இதற்காக போஷிக்கக் கூடாது என்று பிரதமர் கூறிய கருத்து சரியானதாகவே தெரிகின்றது.
இதேபோல் இனவாதத்தை தூண்டும் வகையில் சில ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த ஊடகங்கள் இனவாத செயற்பாட்டை கைவிடத் தவறினால் அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஊடகங்கள் கடந்த 10 வருடங்களாக என்னை அரசியலிலிருந்து விரட்டுவதற்கு முனைப்புடன் செயற்பட்டு தோல்வி கண்டுவிட்ட நிலையில் இப்போது எமது அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்தஆறை ஓடச்செய்யும் ஒரு மோசமான ஊடக கலாசாரத்தில் இறங்கியுள்ளன என்றும் பிரதமர் தனது உரையில் குற்றம் சாட்டியிருந்தார்.
ஊடகங்கள் மீது பிரதமர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். உண்மையிலேயே இனவாதத்தை தூண்டும் வகையில் எத்தகைய ஊடகங்கள் செயற்பட்டாலும் அது தவறானதேயாகும். 3 தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் நாடு பேரழிவை சந்தித்திருந்தது.
இவ்வாறு அழிவுகளை சந்தித்த பின்னரும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னைய அரசாங்கம் உரிய முயற்சிகளை எடுத்திருக்கவில்லை. தற்போதைய புதிய அரசாங்கமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அதனை முற்றாக குழப்பியடிக்கும் வகையில் இனவாதக் கண்ணோட்டத்துடன் ஊடகங்கள் செயற்படுவது தவறானதேயாகும்.
ஆனாலும் ஊடக சுதந்திரம் அமுலிலுள்ள ஒரு நாட்டில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை. இந்த வகையில் ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் ஊடகங்களுக்கு எதிராக அரசாங்கத் தரப்பினர் கருத்துக்களை தெரிவிப்பது முறையான செயற்பாடு அல்ல.
பிரதமர் இனவாத ஊடகங்கள் மீது கவனம் செலுத்தியுள்ளமை நாட்டின் நல்லிணக்கத்தை கட்டி வளர்ப்பதற்கு என்றால் அதனையும் பாராட்டலாம். வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பிலும் அந்த தீர்மானத்தைக் கொண்டுவந்த வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்பிலும் பிரதமர் குற்றம் சாட்டியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமேயாகும்.
இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெருமளவானோர் கடத்திச் செல்லப்பட்டனர். அதனைவிட அதிகமானோர் காணாமல்போயினர். இவ்வாறான ஒரு அவலம் கடந்த அரசாங்க ஆட்சியில் இடம்பெற்றது.
ஐ.நா. வின் அறிக்கையின்படி 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகம் என்றே சுயாதீனத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.
இவ்வாறு படுகொலை இடம்பெற்ற நிலையில் அதுகுறித்தே வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தார்.
கடந்த வருடம் இந்தப் பிரேரணையினை கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்திருந்தார். அப்போது இனப்படுகொலை தொடர்பான இந்த பிரேரணையினை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் சம்மதம் தெரிவித்திருக்கவில்லை. இதனால் அந்தப் பிரேரணையானது கிடப்பில் போடப்பட்டிருந்தது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இனப்படுகொலை தீர்மானத்தை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் சமர்ப்பித்து நிறைவேற்றியிருந்தார். இந்தப் பிரேரணை மீது உரையாற்றிய முதலமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சாடியிருந்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பின்நின்ற முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போது இந்த பிரேரணையினை நிறைவேற்றியமை குறித்து தென்பகுதியில கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
பெரும் இனவாதப் பிரசாரங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றிருந்தது.
100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத்தை ஏப்ரல் மாதம் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு துணைநின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடமாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறை வேற்றியமையானது தென்பகுதியில சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசாங்கத்துக்கு எதிர்ப்பலையை உருவாக்கியிருந்தது.
இதனைக் கருத்தில்கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடபகுதியிலும் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவே எண்ணவேண்டியுள்ளது.
ஆனாலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் செயற்படுவதே நல்லது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuzD.html

Geen opmerkingen:

Een reactie posten