தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளார் பிரசாந்த?

அரசுடனான தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும்: வடக்கு முதலமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 11:50.11 AM GMT ]
பாதிக்கப்பட்டுள்ள தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணனுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் சில பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அதற்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதாக கல்வி ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கல்வியமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி அது குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல எண்ணியுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்கிறார் மகிந்த ராஜபக்ச
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 01:23.47 PM GMT ]
அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களின் மனைவிமாரும் பிள்ளைகளும் இந்த அரசாங்கத்திடம் கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் இந்த பழிவாங்கும் அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி ஷசி வீரவன்ஸ உடல் நலன் குறித்து விசாரிப்பதற்காக இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று வெளியேறும் போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
பழி வாங்கும் அரசியல் மிகவும் தவறானது எனவும் தான் அப்படி எவரையும் பழிவாங்கவில்லை எனவும் அந்த விடயத்தில் எவருக்கும் தன் மீது குற்றம் சுமத்த முடியாது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தன் மீது எவரும் குற்றங்களை சுமத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். சேறுபூசும் பிரச்சாரங்களை முன்னெடுத்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது கவலைக்குரியது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எவரையும் பழிவாங்கவில்லை எனக் கூறினாலும், 2010 ஆம் ஆண்டு தன்னை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து அவரது பிள்ளைகள் உட்பட குடும்பத்தினருக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தனக்கு எதிராக செயற்படும் நபர்களையும் அவர் அரசியல் ரீதியாக பழிவாங்கியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv7B.html

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளார் பிரசாந்த?
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 01:58.04 PM GMT ]
கொலை அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பிய பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடத்திற்கு முன்னர் ரகசியமான முறையில் நாட்டில் இருந்த வெளியேறிய அவர், நேற்று நாடு திரும்பிய நிலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் நாட்டை விட்டு வெளியேறிதாக கூறியிருந்தார்.
பிரசாந்த ஜயகொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ள நிலையில், தற்போது அதன் பணிப்பாளராக பணியாற்றி வரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எல். ரணவீர எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட உள்ளார்.
பிரசாந்த ஜயகொடி பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அழுத்தங்களுக்கு அடிப்பணியாது நேர்மையாக பணியாற்றியதன் காரணமாக கொலை அச்சுறுத்தலை எதிர்நோக்கினார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தான் விரும்பியவாறு ஊடக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத காரணத்தில் பிரசாந்த ஜயகொடி இரத்தினபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர் நாட்டை வெளியேறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv7C.html

Geen opmerkingen:

Een reactie posten