தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

ராஜபக்‌ஷவைத் தோற்கடித்த ஈழமக்கள்!



இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவியிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்த முக்கியமான ஓர் நிகழ்வாகும். ஈழத் தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தி கொண்டவர்களாக இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கை வகித்துள்ளனர்.
அதாவது இந்தத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களே மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்துள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இந்த மாற்றங்களுக்கான அடிப்படையாய் இருந்த தமிழ்மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா என்பதைக் குறித்து இங்கு ஆராய்தல் அவசியமானது. 

இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது அல்லது தேர்தலில் பங்கெடுக்கலாமா என்ற குழப்ப நிலைமைகளை உருவெடுத்தன. அதற்கு பல நியாயமான காரணங்களும் இலங்கை அரசியலில் நிலவுகின்றன. குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கப்போவதில்லை. அவரைத் தோற்கடிக்கும் நோக்கில் கடந்த தேர்தலில்களும் மக்கள் வாக்களித்திருந்தனர். இந்தவேளை மைத்திரிபால சிறிசேன தமிழ்மக்களின் உரிமைப் போராட்ட பிரச்சனை தொடர்பில் எந்த நிலைப்பாட்டையும் முன் வைக்கவில்லை.

இதனால் அவருக்கு எப்படி வாக்களிக்க முடியும் என்ற நியாயமான கேள்வியை முன்வைக்கவும் நேரிட்டது. சிலர் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்ற முடிவை முன் வைத்தனர். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் பேசும் மக்களை தேர்தலைப் புறக்கணிக்க வைக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். வடக்கு, கிழக்கில் வரும் வாக்குகளை தெற்கில் தாம் ஒரு மாவட்டத்தில் பெறுவோம் என அன்றைய அமைச்சர் ரோஹித எச்சரித்தார்.

இராணுவத்தைக் கொண்டும் வடக்கில் தேர்தலைக் குழப்ப இலங்கை அரசு நடவடக்கைகளை முன்னெடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தம்மை ஆதரிக்காது என்று அரச தரப்பினர் குறிப்பிட்டிருந்ததுடன் அவர்களின் ஆதரவு தேவையில்லை என்றும் குறிப்பிட்டனர்.மைத்திரிபால சிறிசேன தரப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் அதை வைத்து தனி ஈழம் அமைக்கும் சதிச்செயல் என்று சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மைத்திரியை தோற்கடித்து வெல்வதே மகிந்தவின் திட்டமாக இருந்தது. 

இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவேண்டிய நிலைக்கு உள்ளானது. இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு குறித்தும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தனி ஈழ ஓப்பந்தம் செய்ததாக சிங்கள இனவாத அமைச்சர் தெற்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ராஜபக்சவுக்கு வாழ்வா? சாவா? என்ற இந்தத் தேர்தலில் அவர் தாராளமாக இனவாதத்தைக் கக்கிப் பிரச்சாரம் செய்தார்.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்ச தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசுக்கு வாக்களியுங்கள் என்றார். தான் ஒரு பிசாசு என்பதை ராஜபக்ச ஒப்புக்கொண்டார். அதேபோல அவரது அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகைளை பூண்டோடு படுகொலை செய்தார் மகிந்த ராஜபக்ச என்றார். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அமெரிக்க ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு இரண்டு நாட்களுக்கு பதில் அளிக்காமல் புலிகளை அழித்ததாகச் சொன்னார்.

யுத்தத்தை வைத்த மகிந்த ராஜபக்ச தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பயங்கரவாதத்தை அழித்தோம், இரண்டு நாடுகளை ஒன்றாக்கினேன் என்றார். யுத்த வெற்றியை வைத்து மறுபடியும் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று ராஜபக்சவின் கனவு தேர்தலில் பொடிப்பொடியானது. தான் நடத்தியது மாபெரும் வெற்றி யுத்தம் என ராஜபக்ச மீண்டும் மீண்டும் சித்தரிக்கும் போது அந்த இனக்கொலை யுத்தத்தில் நடந்த அநீதிகள் தழிழ்மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுகின்றன. யுத்த வெற்றியைக் கொண்டாடும் ராஜபச்ச தோல்வியில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரக்கூட விடுவதில்லை.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவன் நான் என்பதன் மூலம் தொடர்ந்தும் தானே ஆட்சி புரிய வேண்டும் என்பதுதான் மகிந்தவின் ஆசை. எதற்காக இந்த யுத்தம் மூண்டது? யார் யுத்தத்தைத் தொடக்கினார்கள்? என்பதை எல்லாம் மிக இலகுவாக மறைத்துக் கொண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் எல்லாம் முடிந்ததாக ராஜபக்ச காட்டிக்கொண்டிருந்தார். அகிம்சை போராட்டம் தோற்றபோது ஆயுதப் போராட்டம் வெடித்தது உரிமையை மறுத்து இனத்தை அழித்து நிலத்தைப் பறிக்கும் சிங்களப் பேரினவாதக் கொள்கைக்கு எதிராகவே தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்த யுகத்தை மன்னராட்சிக் காலத்திற்குப் பின்னோக்கி இழுத்து தனது குடும்ப சர்வாதிகார இராணுவ ஆட்சியைத் தொடர்வதே ராஜபக்சவின் நோக்கமாக இருந்தது. இதனால் தமிழ்மக்கள் ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார்கள். நடைபெற்ற தேர்தல் முடிவுகள்  வெளியாகத் தொடங்கிய போது முதன்முதலில் ராஜபக்சவின் படுதோல்வியை கிளிநொச்சி முடிவு ஒன்று அறிவித்தது.  அண்மையில் கிளிநொச்சிக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராஜபக்ச பயங்கரவாதிகளின் தலைநகரம் என்றார். போராளிகள் இரத்தத்தில் உருவாக்கப்பட்ட கிளிநொச்சி மீள் எழுகை பெற்று உலகத் தலைவர்களை அழைத்த சமாதான நகரம். 

பின்னர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி என்று வடக்கு கிழக்குப் பகுதியிலும் மலையகத்திலும் ராஜபக்ச தோல்வியைத் தழுவ மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் கம்பஹா, பொலனறுவை, நுவரேலியா, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் ராஜபக்ச வெற்றியீட்டினார். அங்கு வெற்றியீட்டிய ராஜபக்ச வட கிழக்குப் பகுதிகளில் தோல்வியடைந்தமையால் அதிபர் பதவியை இழந்தார். தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் மகிந்த ராஜபக்சேவே மீண்டும் வெற்றி பெற்றிருப்பார். அவ்வாறான ஓர் நிலையை தடுக்கும் வகையில் தமிழ் மக்களின் மனங்கள் ஒருமித்துச் செயற்பட்டுள்ளன.

தேர்தலில் வாக்களிக்கும்போதே ராஜபக்சவின் முகம் தோல்வியைத் தெளிவாக பிரதிபலித்தது. முடிவுகள் வெளிவரத் தொடங்கிய பின்னர் தனக்கு ஏற்படப் போகும் தோல்வியை ஊகித்த ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி தேர்தல் முடிவுகளை இரத்து செய்ய முயன்றார். பின்னர் இராணுவ சதிப்புரட்சியை ஏற்படுத்த முயன்றார். இதற்கு இராணுவத் தளபதி, சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் என்போர் மறுத்துவிட்டனர். அது மாத்திரமின்றி ராஜபக்சே இராணுவ ஆட்சிகைக் கொண்டுவர இருப்பதை அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் உள்ளிட்ட சில வெளிநாட்டுத் தலைவர்கள் ராஜபக்சவைத் தொடர்புகொண்டு கடும் தொனியில் எச்சரித்துள்ளனர். அதன் பின்னர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை அழைத்து தோல்வியை ஒப்புக்கொண்டு அதிகாரத்தை கையளித்துவிட்டுச் செல்வதாக கூறிய ராஜபக்சே தனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  தோல்வி பீறிட  அழுகையை அடக்கிகொண்டு ராஜபக்சே அரச மாளிகையைவிட்டு சென்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தவர் என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்தவர் என்றும் புகழப்பட்ட ராஜபக்சே இலங்கை வரலாற்றில் பதவியிலிருந்து தோற்ற முதல் அதிபராக வெளியேற்றப்பட்டார். உடனேயே தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற மகிந்த ராஜபக்சே அவரது தோல்வியால் கண்ணீர் விட்டு அழுது தனது ஊர் மக்களுக்கு மத்தியில் பேசினார்.  தன்னை வடக்கு கிழக்கு மலையக மக்களே தோற்கடித்தனர் என்றும் ஈழப் பிரதேச மக்களே என்னை தோற்கடித்தனர் என்றும் குறிப்பிட்டார். சிங்கள மக்கள் என்னை வெற்றி பெற வைத்தனர் என்றும் நான்தான் சிங்கள மக்களுக்கு ஜனாதிபதி என்றும் கூறினார்.

எங்கள் மக்கள் ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்துவிட்டு �நான் உங்களின் உறவினன்� என்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் உரையாற்றிய ராஜபக்சே நான் ஈழப் பிரதேசத்தால் தோற்கடிக்கப்பட்டேன் என்பதன் மூலம் தனது சிங்களப் பேரினவாதப் போக்கையும் ஈழமக்களைப் பிரித்து நோக்கி தான் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் ஒப்புக்கொண்டுவிட்டார். ஈழப் பிரதேச மக்கள் ஏன் தன்னைத் தோற்கடித்தார்கள் என்பதை மறைப்பதன் மூலம் தொடர்ந்தும் சிங்களப் பேரினவாதத்தை ராஜபக்ச துாண்ட முயற்சிக்கிறார்.

சீனாவுக்கு நண்பனாகவும் மேற்கிற்கு ஆபத்தாக வளர்ந்து வரும் ராஜபக்ச ஆட்சியை ஈழத் தமிழர் பிரச்சனையை வைத்து முடிவுக்கு கொண்டு வர முற்பட்ட சர்வதேசம் அதை ஒரு விதத்தில் நிறைவேற்றி விட்டது. கடாபியைப் போல இரத்தப்பலி வாங்குவார்கள் என ராஜபக்ச அஞ்சியிருந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குபலத்தைவைத்து கடுமையான தோல்வியை வழங்குகிறது. இந்த சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும்.இலங்கைத்தீவு சர்வதேசக் கண் கொண்டிருக்கும் அரசியல் போட்டியை இது மிகவும் துல்லியமாக காட்டுகிறது.

மகிந்த ராஜபக்சே தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர் தலைமையில் இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முதலியோர் சர்வதேச விசாரணைகளுக்கு புதிய ஜனாதிபதி ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வதேச விசாரணைகளிலிருந்து ராஜபக்ஷவையும் படையினரையும் பாதுகாப்பேன் என்று உறுதி கூறியுள்ளார்.

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வது மகிந்த ஆட்சியில் மாத்திரமல்ல. மகிந்த ஆட்சியில்தான் அது பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் முதல் தமிழ் மக்கள் ஈழத்தில் அழிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன அழிப்பைத் தடுத்து நிறுத்த சர்வதேச விசாரணையும் அரசியல் ரீதியான தீர்வும் அவசியமானது. இறுதிப் போர்க்காலத்தில் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற வகையிலும் மைத்திரிபால சிறிசேன சர்வதேச விசாரணைகளுக்கு பதில் அளிக்க வேண்டியவர்.

ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தின் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த சர்வதேச விசாரணையிலிருந்து ராஜபக்சவையும் படையினரையும் பாதுகாப்பேன் என்று கூறியவரும், அந்நாட்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டவர் என்ற புகழையும் கொண்டவருமான மைத்திரிபால சிறிசேன அந்த யுத்தத்தில் நடந்த அநீதிகள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்க வேண்டியவரே.

தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தது எதற்காக?
முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஈழமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைப் போர்க்குற்றங்களுக்காகவே. தொடர்ந்தும் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து தமிழ் இனத்தை அழிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை ராஜபக்ஷ திட்டமிட்டு முன்னெடுத்தார். பாதைகளைப் போட்டார். யாழ்தேவி ரயிலை கொண்டு வந்தார். கட்டிடங்களைக் கட்டினார். ஆனால் தமிழ்மக்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றாமல் அந்தக் காயங்களை இன்னும் பெருப்பிக்கும் விதமாகவும் தமிழ் இனத்தை அழிக்கும் விதமாகவும் தொடர்ந்து செயற்பட்டார். இதனாலேயே ராஜபக்சவை தமிழ் மக்கள் தோற்கடித்தனர்.

இலங்கை வரைபடத்தில் ராஜபக்ச தோற்கடித்த வரைபடம் என்பது தமிழ் ஈழம் என்பதும் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டும். இதிலிருந்து மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேச சமூகமும் ஈழ மக்களும் இலங்கைத் தீவில்  வாழும் சிறுபான்மை இனங்களும் வெளிப்படுத்தும் செய்தியைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்குப் பதிலளிப்பதுடன் அதனை தடுத்து நிறுத்தி நம்பிக்கையும் உறுதியும் கொண்ட எதிர்காலத்திற்கான அரசியல் தீர்வு ஒன்று ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றதும் அரசில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச வகித்த பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு சிவில் நிர்வாகத்தில் பணியாற்றிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு ஆளுநரான முன்னாள் இராணுவத் தளபதியும் நீக்கப்பட்டுள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்பலாம் என்றும் அவர்கள் அரசாங்கத்தை எவ்வாறும் விமர்சிக்கலாம் என்றும் மைத்திரிபால சிறிசேன தரப்பு அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் என்பது சிங்களப் பேரினவாத மாற்றமல்ல. ஆட்சியிலிருந்து ஒரு குடும்பமும் அதன் சர்வாதிகாரமுமே நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மக்களுக்கு எதிரான பேரினவாதம் அப்படியே இருக்கின்றது. ராஜபக்‌ச குறிப்பிட்டதைப் போன்று சிங்களவர்களுக்கு இடையில் இந்தத் தேர்தல் நடந்தால் அதில் மகிந்தவே ஜனாதிபதி. இந்த மாற்றம் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களால் ஏற்பட்டது.

தமிழ் மக்கள் வாக்களித்தமையால்தான் வெற்றிபெற்றவர் என்ற அடிப்படையில் மைத்திர்பால சிறிசேன தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர். இன்னுமொரு ஐந்து வருடத்தில் மகிந்த ராஜபக்சவைப் போன்ற இன்னொருவர் வந்தால் மீண்டும் பேரினவாத ஆட்சியும் இராணுவ ஆட்சியும் தமிழ்மக்களை நசுக்கும். எனவே ஈழத் தமிழ் இனம் இலங்கைத் தீவில் என்றைக்கும் பாதுகாப்பாக வாழ ஓர் அரசியல் தீர்வு அவசியமானது. தங்களை தாங்கள் ஆளவும் நிம்மதியாக வாழவும் நிலைத்து நிற்கும் அர்த்தமுள்ள தீர்வாக அது அமையவேண்டும்.

- தீபச்செல்வன் -

http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu3E.html

Geen opmerkingen:

Een reactie posten