[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 03:08.50 PM GMT ]
மாலபே பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி- அடுத்த இரண்டு நாட்களில் வீரவன்ஸவின் மனைவி கைது செய்யப்படுவார்: பொலிஸார்
மீண்டும் வருவாரா மஹிந்த?
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 03:40.43 PM GMT ]
கடந்த புதன்கிழமை நுகேகொடையில் நடந்த பிரமாண்டமான கூட்டம், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட நாடகத்தின் முதற்காட்சியாகவே பார்க்கப்படுகிறது.
நுகேகொடைக் கூட்டத்தில் திரண்ட பெருமளவு மக்கள், மஹிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்ற செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக, அவருக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் தலைவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், மஹிந்த ராஜபக்ச ஆட்சியை இழந்த போதிலும், அவர் தனது செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் இழந்திருக்கவில்லை. ஆறு வாரங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் 57 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார்.
சுமார் நான்கரை இலட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றதால் தான் அவர் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.
எனவே, மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கை, மீண்டும் நிரூபிக்க வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கவில்லை.
சுமார் 10 ஆயிரம் வரையான மக்களைக் கூட்டியதன் மூலம் மட்டும், அவர் செல்வாக்கை இழந்து விடவில்லை என்று காண்பிக்கவும் தேவையில்லை. எனவே இந்தக் கூட்டத்தை, பலத்தை நிரூபிக்கும் கூட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது.
தான் வடக்கு கிழக்கு மக்களால் தான் தோற்கடிக்கப்பட்டேன் என்பதை மஹிந்த ராஜபக்ச மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். அவ்வப்போது அவர் தான் தோற்கடிக்கப்படவில்லை என்றும், அது ஒரு சூழ்ச்சி என்றும் கூடக் குறிப்பிடுகிறார்.
அதாவது, வடக்கு கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து தன்னைத் தோற்கடித்ததாகவும், இதனை ஒரு சூழ்ச்சி என்றும் அவர் குறிப்பிடுவதன் மூலம், மஹிந்த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் தன்னை அவர்களின் கதாநாயகனாக மட்டும் நிறுவிக் கொள்ளவில்லை.
அதற்கு அப்பால், உள்ளூர ஒரு இனவாத உணர்வும் தீவிரமாகப் பரப்பப்பட்டும் வருகிறது.
நுகேகொடை கூட்டம் மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கை நிரூபிப்பதற்கானது என்பதை விட அவரது அரசியல் மீள்வருகையை உறுதிப்படுத்துவதற்கானது என்றே கூறலாம்.
பண்டைய காலங்களில் மன்னர்களின் வருகையை அறிவிக்க கட்டியக்காரர்கள் வருவது போல, மஹிந்த ராஜபக்சவின் மீள்வருகையை அறிவிப்பதற்கான, கட்டியம் கூறுவதற்கான கூட்டமே நுகேகொடையில் நடந்திருக்கிறது.
கடந்த ஜனவரி 8ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், கூட மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கவில்லை.
அதுவே அவரது அரசியல் அபிலாசை முற்றுப் பெறாதுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தது. அதற்குப் பிந்திய கடந்த ஆறு வாரங்களில், மஹிந்த ராஜபக்ச மீண்டும் பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலுக்கு வரப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனாலும் அவர் தனக்கு அத்தகைய எண்ணம் கிடையாது என்று சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், தான் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று திட்டவட்டமாக ஒருபோதும் அவர் அறிவித்திருக்கவில்லை.
புலிகளைத் தோற்கடித்த, நாட்டை ஒன்றுபடுத்திய தலைவர் என்ற வகையில் சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு பெரிய கதாநாயகனாகவே மதிக்கப்படுகிறார்.
அந்த இமேஜ் அவரை இன்னமும் அரசியல் கனவில் மிதக்கச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலும் தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் தங்கியுள்ள மஹிந்த ராஜபக்சவைப் பார்க்க தினமும், 50 வரையான பஸ்களில் சிங்கள மக்கள் செல்வதாக செய்திகள் வெளியாகின்றன.
கதிர்காமத்துக்கு யாத்திரையாகச் செல்கின்ற மக்கள், இப்போது கால்டன் இல்லத்துக்குச் சென்று மஹிந்த ராஜபக்சவுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.
சிங்களக் கிராமங்கள், நகரங்களில் இருந்து பஸ்கள் தினமும் கால்டன் இல்லத்துக்குப் படையெடுப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இது ஒரு நாடகம் என்றும், திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டிருந்தாலும், அதனை முற்றிலும் சரியானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ச அந்தளவுக்கு செல்வாக்குப் பெற்றிருக்கிறார்.
சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் போர் ஒரு நிம்மதியற்ற நிலையையே ஏற்படுத்தியிருந்தது.
இராணுவத்தில் இருந்த அவர்களின் பிள்ளைகளினதோ, கணவன்மாரினதோ எதிர்காலம் பற்றிய அச்சம், ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து வந்தது.
அந்த அச்சத்தை அவர்களின் மனதில் இருந்து நீக்கியது மஹிந்த ராஜபக்ச தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும், எவ்வளவு தான் மோசடிகளை, ஊழல்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அதிகார துஷ்பிரயோகம், சர்வாதிகார ஆட்சி பற்றி குற்றம் சாட்டப்பட்டாலும், அவையெல்லாம் சாதாரண சிங்கள மக்களின் மனங்களைப் பாதிக்கவில்லை.
அவர்கள், தமது பிள்ளைகளோ, கணவன்மாரோ, உறவினர்களோ போரில் கொல்லப்படுவதில் இருந்து காப்பாற்றியவராகவே மஹிந்த ராஜபக்சவைப் பார்க்கின்றனர்.
இந்த பிளஸ் பொயின்ட் தான் மஹிந்த ராஜபக்சவுக்கு இப்போது மட்டுமல்ல எப்போதும் இருக்கக் கூடிய பலம். இதனை வைத்துத் தான், தமது அடுத்த அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போட்டிருக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பிறகு, தொடர்ந்தும் அரசியலில் இருந்து, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது ஒரு காத்திரமான, கனமான அரசியல் தலைமைக்குரிய பண்பாக கருதப்படமாட்டாது.
அதனால் தான், தனது தோல்விக்குப் பின்னர் ஒரு சிறிய இடைவெளியை அவர் விட்டிருந்தார். அந்த இடைவெளிக்குள், புதிய அரசாங்கம் மகிந்த ராஜபக்சவை அவமானப்படுத்துவதற்கும், குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் பயன்படுத்திக் கொண்டது.
அதேவேளை, தான் இல்லாத காலத்தில் ஏற்படக் கூடிய வெறுமை நிலையை, அரசியல் இடைவெளியின் பாதகத்தன்மையை தென்னிலங்கை மக்கள் மற்றும் கட்சிகளிடம் உணரச் செய்திருந்தார் மஹிந்த ராஜபக்ச.
மஹிந்த ராஜபக்ச இல்லாமல் போனால், தமது எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும் என்றுணர்ந்த விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்கள் தான், அவரை மீண்டும் முன்னிறுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
மஹிந்த இல்லாத சிறு இடைவெளிக்குள் இவர்கள் அந்த ஆபத்தின் தன்மையை உணர்ந்திருக்கிறார்கள்.
எனவேதான் அதனை சிங்கள மக்கள் முன் கொண்டு சென்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான மக்கள் அலையாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.
ஒரு பக்கத்தில் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இருந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயும், மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பலரும் இருக்கின்றனர்.
அவர்களையும் நுகேகொடை கூட்டத்தில் காண முடிந்தது. இந்த எல்லாத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முதல் முயற்சியே நடந்திருக்கிறது.
இந்தக் கூட்டம் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தான் தங்காலையில் இருந்து வருவதாகவும், வெலிக்கடைச் சிறையில் திஸ்ஸ அத்தநாயக்கவைப் பார்க்கச் சென்றபோது கூறியிருந்தார் மஹிந்த ராஜபக்ச.
தங்காலைக்கும் கொழும்புக்கும் இடையில் எவ்வளவு தூரம் என்பதை விட, கொழும்பில் என்ன நடக்கிறது என்பதை உலகின் எந்த மூலையில் இருந்தும் பார்த்து விடக் கூடிய வசதிபடைத்த இன்றைய உலகில், தங்காலையில் இருந்த தனக்கு நுகேகொடை கூட்டம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று, மஹிந்த ராஜபக்ச கூறியது அவரது உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தியது.
அதுமட்டுமல்ல, தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய மஹிந்த ராஜபக்ச, அந்தக் கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள முன்னரே, அதன் கனபரிமாணங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை தயான் ஜயதிலக மூலம் வாசிக்கச் செய்தது அதைவிடப் பெரிய நடிப்பு.
இவையெல்லாம், “மாமன்னர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருகிறார்… பராக்…. பராக்….” என்று கூறுவதற்காக நடத்தப்பட்ட நாடகங்களே.
இப்போது மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் .பிரதமர் பதவிக்காக போட்டியிட வேண்டும் என்ற மனோநிலை தெற்கிலுள்ள சிங்கள மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியாக இருந்த அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை நியாயப்படுத்தவதற்காக, இது மக்களின் அவா, அபிலாசை என்று காட்டி அதை நிறைவேற்றவே மீள் பிரவேசம் செய்யப்போவதாக காட்டிக் கொள்வதே இந்த நாடகத்தின் முழுக்கதை.
இந்த நாடகத்தின் கடைசிக் காட்சி மஹிந்தவின் மீள் அரசியல் பிரவேசத்துடன் தான் முடிவடைய வேண்டும். அது தான் நியதி. ஆனால், இடையில் இந்தக் கதையில், திடீரென வில்லன்கள் யாரும் புகுந்து கொள்கிறார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
கபில்
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns1B.html
Geen opmerkingen:
Een reactie posten