தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 februari 2015

அழுகண்ணீர் விடுபவர் துயரம் தீர்வது எந்நாளோ?

சந்திரிகா கைவசமுள்ள 10 அமைச்சுக்கள் சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்படும்!- அமைச்சர் குணவர்தன
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 02:37.00 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் இன்னும் 10 அமைச்சுக்கள் கைவசம் உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தகுதியானவர்களுக்கு அதனை எதிர்வரும் நாட்களில் வழங்கவுள்ளதாகவும் காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.
கந்தளாயில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காத சகல உள்ளுராட்சி நிறுவனங்களையும் ஆணையாளரின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.



அழுகண்ணீர் விடுபவர் துயரம் தீர்வது எந்நாளோ?
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 03:20.37 PM GMT ]
தமிழ் அன்னையர் விடும் கண்ணீர் கணக்கின்றிப் போகிறது. காணாமல்போன தங்கள் பிள்ளைகளுக்காக,  குடும்பத் தலைவர்களுக்காக ஆண்டுக்கணக்கில் அழுவதென்பது சாதாரணமானதன்று
கண்ணீரோடு உறங்கி கண்ணீரோடு விழிக்கின்ற பரிதாபத்துக்கு என்றுதான் முடிவு கிட்டும்?
பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது எங்கள் அன்னையர் நிலத்தில் வீழ்ந்து நீளுமோ எங்கள் துயர்! என்று அழுது புரண்டனர்.
இது மட்டுமல்ல; யாழ்ப்பாணத்துக்கு யார் வந்தாலும் காணாமல் போனவர்களின் உறவுகள் விடுகின்ற கண்ணீர் கண்டு இன்னமும் எவரும் இரங்காமை ஏன்?
காணாமல் போனவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கே என்பதைக் கூற வேண்டும்.
காணாமல் போனவர்கள் எவரும் இல்லை என்றால் அவர்களுக்கு நடந்தது என்ன?
அவர்களை என்ன செய்தீர்கள்? எங்கே வைத்துச் செய்தீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இதை விடுத்து எதையும் சொல்லாமல் விடுவதால், காணாமல் போனவர்களின் உறவுகள் கண்ணீரும் சோறும் அல்லவா உண்கிறார்கள். இந்த அவலநிலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நிலைக்கப் போகிறது?
2009ம் ஆண்டு மே மாதத்தில் உயிரிழந்த ஒருவரின் குடும்பம் ஏதோ எம் தலைவிதி என்று இறந்தவரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையோடு ஆறுதல் கொள்கிறது.
ஆனால் காணாமல் போனவர்களின் உறவுகள் எங்கெல்லாம் சென்று கண்ணீர் விட முடியுமோ அங்கெல்லாம் சென்று கண்ணீர் விடுகின்றனர்.
ஒரு சில தினங்களுக்கு முன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் காணாமல்போனவர்களின் உறவுகள் விட்ட கண்ணீர், கடவுளே! இதற்கு ஒரு முடிவு இல்லையா? என்று மனம் நோகிறது.
ஓ! சில வேளையில் எங்கள் அன்னையர் விடும் கண்ணீரால்தான் இந்த நாட்டின் பேரினவாதம் அழிய வேண்டும் என்பது நியதியாயிற்றோ என்று நினைக்கவும் தோன்றுகிறது. இந்த நினைப்பிற்கு ஆதாரமும் இருக்கவே செய்கிறது.
ஆம், இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் இருக்க வேண்டியவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியது ஏன்?
தேர்தலை நடத்து... தேர்தலை நடத்து... நீயே! இந்த நாட்டின் ஆயுட்கால ஜனாதிபதி என்று மகிந்த ராஜபக்­சவின் மனதை மாற்றியது எது?
அந்த மாற்றத்தோடு கூட இருந்தவரை ஜனாதிபதி வேட்பாளராக்கியது எது?
உடன் இருந்தவர்கள் மெல்ல மெல்ல நழுவியது ஏன்?
மிகப்பெரிய போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை போரில் வென்ற ஜனாதிபதியை பெளத்த சிங்கள மக்கள் மறந்தது ஏன்?
அவ்வாறு மறக்கச் செய்தது எது? என்றெல்லாம் கேள்வி எழும் போது... காணாமல் போனவர்களின் உறவுகள் விட்ட கண்ணீர் தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லலாம் அல்லவா?
அதேநேரம் காணாமல்போனவர்கள் விடும் கண்ணீர் மகிந்தவை மட்டுமல்ல; தமிழ் இனத்தை ஏமாற்றிச் சுயலாபம் தேடும் அரசியல்வாதிகளையும் அது சும்மா விடாது என்பதைப் புரிதல் வேண்டும்.
எது எப்படியாயினும் காணாமல் போனவர்களின் உறவுகள் விடுகின்ற கண்ணீர்தான் பேரினவாதிகளை, மத வெறியர்களை அழித்தொழிக்கும் பெரும்படை என்றால், அதுவும் நடந்தேயாகும்.
அதைத் தடுக்க வல்லார் எவரும் இல்லை.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnv0G.html

Geen opmerkingen:

Een reactie posten