இன்று எங்களின் வீட்டுத் தொலைக்காட்சிகளில் கணனித் திரைகளில் காணும் மனிதர்களை கழுத்தறுத்துக் கொலை செய்யும் காட்சிகளும், உயிரோடு எரியூட்டிக் கொல்லும் காட்சிகளும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவினைப் பற்றிய ஒரு கேள்வியை உலகம் எங்கும் எழுப்பியுள்ளது.
இவ்வாறு கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில், அமெரிக்காவின் இந்த இஸ்லாமிய அமைப்பிற்கெதிரான, நடவடிக்கைகளிற்கான தளபதி மேஜர் ஜெனரல் மைக்கல் நகட்டா, அவர்களின் இரகசியத் தகவல் ஒன்றைப் பகிரங்கப்படுத்தியது.
அதன் பிரகாரம் இந்த புதிய அமைப்பின் நோக்கம் என்ன என்பதை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்பதை அந்தத் தளபதி ஒத்துக் கொண்டுள்ளார்.
ஈராக்கின் மொசூல் பிரதேசத்தை கடந்த ஆண்டு மே அல்லது யூனில் கைப்பற்றியதிலிருந்து அது இன்றுவரை இங்கிலாந்தின் நிலப்பரப்பை விடப் பெரியதொரு பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கைப்பற்றிய நிலத்தை பாதுகாத்தல் என்பது ஒரு அமைப்பின் பலத்திற்கான சான்றாக இருக்கின்றதென்பதற்கமையவே இந்த விடயம் நோக்கப்பட வேண்டும்.
இந்த இஸ்லாமிய அமைப்பு பல வெளிநாட்டவர்களைக் கவர்ந்திருக்கிறது என்பது தான் பல மேற்குலக நிபுணர்களாலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் விடயம்.
குறிப்பாக மூன்று வருடங்களிற்கு குறைந்த ஒரு காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்களை இந்தப் போராட்டம் இணைத்துள்ளது.
ஆனால் இந்த அமைப்பின் மனித நாகரீகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் குறிப்பாக, மேற்கத்தைய தேசத்தவர்கள், ஈராக்கிய இராணுவ வீரர்கள், பொது மக்கள் என்ற வேறுபாடில்லாமல் மிருகத்தனமாக கொலைச் செய்யப்படுவதும் இந்த அமைப்புக் குறித்த இரண்டுபட்ட பார்வையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இதுவரை தமிழ் ஊடகங்களின் பார்வைக்கு வராத பல தகவல்களையும், மேற்குலகம் சில வேளைகளில் ஒரு புதிய உலக ஒழுக்கிற்காக யாருமே எதிர்பாராத ஒரு பாரிய அழிவைத் தரும் தாக்குதலைக்கூட மேற்கொள்ளலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சுரேஸ் தர்மா இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten