கிழக்கு மாகாணசபை ஆட்சி விடயத்தில் வழக்கம் போல சிறிலங்கத முஸ்லீம் காங்கிரஸ் தனது காலைவாரும் அரசியலை செய்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த கல்வியமைச்சை, மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான ஆரியவதி கலபதிக்கு வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணசபை விவகாரத்தில் இத்துடன் மூன்றாவது தடவையாக தமிழர்களை முஸ்லீம் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவியை சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து பெற்ற முஸ்லீம் காங்கிரஸ், தேசிய அரசாங்கமென்ற பகிரங்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு உறுப்பினர்கள், தலைமைக்கு தெரியாமல் முஸ்லீம் காங்கிரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இதன்படி கல்வி, காணி அமைச்சர்களும், பிரதிதவிசாளர் பதவியும் தருவதாக முஸ்லீம்காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது. இதனை மீறி சிங்களவர் ஒருவர் தற்போது கல்வியமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்த விடயம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளும், தமிழர்களிற்குள்ளும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இது பற்றி கூறும்போது, “இத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் தமிழர்களை மூன்றாவது தடவையாக ஏமாற்றியுள்ளது. இவர்களுடன் இனி அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் நினைக்கிறார்கள், பதவிக்காக நாம் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்போம் என.
ஏற்கனவே நாம் முதலமைச்சர் பதவியை தருவதாக கூறியபோதும், அவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்தார்கள். ஆளுந்தரப்பிற்கு சேவகம் செய்யும் மனநிலை அவர்களை விட்டு இன்னும் போகவில்லை” என்றார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரன் கூறும்போது- “முஸ்லீம் காங்கிரஸ் போடும் எலும்புத் துண்டிற்காக அவர்களின் பின்னால் நாம் செல்லப் போவதில்லை. பதவிக்காக அவர்களின் பின்னால் நாம் செல்வோம் என கற்பனை பண்ணுபவர்கள் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்” என்றார்.
http://www.jvpnews.com/srilanka/99083.html
Geen opmerkingen:
Een reactie posten