தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

மைத்திரிபாலவின் இந்திய விஜயத்தால் தமிழர்களுக்கு எள்ளளவும் நன்மை இல்லை: நாம் தமிழர் கட்சி

பொதுத் தேர்தல் புதிய முறையிலா பழைய முறையிலா? – நீடிக்கும் குழப்பம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 11:28.59 AM GMT ]
அரசாங்கம் புதிய தேர்தல் முறையை நிறைவேற்றினால், இரண்டரை மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேர்தல் முறை திருத்தங்களுக்கான சட்டதிட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு விடும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை விருப்பு வாக்கு முறையிலேயே நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால், புதிய தேர்தல் முறைக்கு தயாராக காலஅவகாசம் போதுமானதல்ல எனவும் அரசாங்கம் கூறியுள்ளது.

அமைச்சர் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கப்படாது- அமரதுங்க தொடர்பில் ஜனாதிபதி கவலை
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 11:41.36 AM GMT ]
சட்டம் ஒழுங்கு, இடர் முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையை விவாதத்திற்கு எடுக்காமல், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் புத்தகத்தில் மாத்திரம் உள்ளடக்குவது குறித்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கவனம் செலுத்தி வருகின்றன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜோன் அமரதுங்க தோல்வியடைந்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.
இதனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலைமைப்புத் திருத்தங்களை செய்யாது எந்த காரணத்தை கொண்டு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜோன் அமரதுங்க தொடர்பில் ஜனாதிபதி கவலை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், ஜோன் அமரதுங்கவின் நகர்வுகள் குறித்து மகிழ்ச்சியற்றிருப்பதாக ஜனாதிபதியின் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தளர்வான போக்கை கடைப்பிடித்து வருவதே, இதற்கான காரணம் என அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் பொலிஸ் துறைக்கு ஜோன் அமரதுங்கவே பொறுப்பானவர்.
முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்த முனைப்புகளை மேற்கொள்ள பொலிஸாரை ஊக்கப்படுத்துவதில் அமரதுங்க ஆர்வம் காட்டுவதில்லை அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜோன் அமரதுங்கவின் மந்தகதியான செயற்பாடுகள் கட்சியில் மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை அதிகரித்து கட்சிக்குள் பாரிய பிளவுகளை ஏற்படுத்த காரணமாகிவிடலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.
அமைச்சர் அமரதுங்க விசாரணைகள் உட்பட பொலிஸாரின் செயற்பாடுகளை தொடர்ந்தும் தாமதப்படுத்தினால், அவரிடம் இருந்து பொலிஸ் திணைக்களம் மீளபெறப்படும் என ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் செயற்பாடுகளை ஏற்கனவே நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfvy.html

சுதந்திரக் கட்சியின் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரம் சந்திரிக்காவிடம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 11:54.45 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனை பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கட்சியின் மத்திய குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யும் அதிகாரம் இந்த ஆலோசனை பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை பேரவையின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர்களான டி.எம். ஜயரத்ன, ரட்ணசிறி விக்ரமநாயக்க ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் இன்று கூடிய சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தெரிவு செய்ய தீர்மானித்தாக கட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfvz.html

கிழக்கில் சர்வகட்சி ஆட்சி? பேச்சு நடத்தும் முஸ்லிம் காங்கிரஸ்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 12:10.52 PM GMT ]
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை தன்வசப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாணத்தில் சர்வகட்சி ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியில் பங்கேற்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு அமைச்சு பதவிகள் வேண்டும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு அறிவித்துள்ளார்.
எனினும் ஒரு அமைச்சர் பதவி, பேரவை தலைவர் பதவியை வழங்க விரும்புவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த யோசனையை நிராகரித்துள்ளது.
இதனிடையே கிழக்கு மாகாண சபையில் சர்வகட்சி ஆட்சியமைப்பது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவிகள் தொடர்பான பிரச்சினைகள் தீரும் வரை சகல அமைச்சுக்களையும் தன் பொறுப்பின் கீழ் கொண்டு வர முதலமைச்சர் நசீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமைச்சு பதவிகள் தொடர்பான பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வுகாண முடியும் எனவும் புதிய அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் கடமைகளை பெறுப்பு ஏற்பது என்பன எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒஸ்டின் பெர்ணான்டோ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் அர்ஜூண ரணதுங்க மட்டக்களப்புக்கு விஜயம்: விமான ஓடு பாதையை பார்வையிட்டார்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 12:24.04 PM GMT ]
விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சரை, மட்டக்களப்பு விமானப்படை கட்டளை தளபதி கே.டி.களுஆராச்சி தலைமையிலான விமானப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.
மட்டக்களப்பு விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விமான ஓடு பாதையின் நிர்மாணப் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் இவ் விமான ஓடுபாதை மற்றும் பயணிகள் ஓய்வறை கட்டடிடம் என்பன திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதில் அமைச்சின் உயர் அதிகாரிகள், விமான சேவை அதிகார சபை தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfv1.html

மைத்திரிபாலவின் இந்திய விஜயத்தால் தமிழர்களுக்கு எள்ளளவும் நன்மை இல்லை: நாம் தமிழர் கட்சி
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 12:40.11 PM GMT ]
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் செய்வதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு வருகை தருவதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சிங்கள இனவெறி அரசாங்கத்தின் ஜனாதிபதி பதவிக்கான முகங்கள் மாறினாலும், தமிழர்களுக்கு எதிரான எண்ணங்களும் அடக்குமுறைகளும் சித்ரவதை நிகழ்வுகளும் மாறாமல்தான் நீடிக்கின்றன.
இனவெறிக் கொடூரனாக விளங்கிய ராஜபக்சவின் ஆட்சியில் கொடூர போர் நடந்தபோது, பாதுகாப்புத் துறையில் பணியாற்றி அப்பாவி மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்த காரணகர்த்தாவாக விளங்கிய மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கிறார்.
தான் தோல்வியடைந்ததற்கு தமிழர்கள்தான் காரணம் என ராஜபக்ச வெளிப்படையாகச் சொல்லியிருக்கும் நிலையில், தனது வெற்றிக்கு நன்றிகூறி பலரையும் நினைவுகூர்ந்திருக்கும் சிறிசேன, மறந்தும்கூட தமிழர்களுக்கு நன்றி எனச் சொல்லவில்லை.
இனவெறியில் ராஜபக்சவுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதவர் சிறிசேன என்பதற்கு இதைவிட உதாரணம் தேவை இல்லை.
இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை தேவை என்கிற பன்னாடுகளின் வலியுறுத்தலுக்கு இதுகாலம் வரை புதிய ஜனாதிபதி பதில் கூறவில்லை.
பன்னாட்டு ஆய்வுக்குழுவையும் பத்திரிகையாளர்களையும் இலங்கைக்குள் அனுமதிக்கவும் சிறிசேன அரசு செவி சாய்க்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இன்னமும் தொடர்ந்தபடியேதான் நீடிக்கின்றன.
இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளில் இருந்து இன்னமும் வெளியேறவில்லை. முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு எத்தகைய நிம்மதியும் விடிவும் கிட்டியபாடில்லை.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தமிழர்களே தீர்மானிப்பதற்கான முகாந்திரம்கூட இன்னமும் அமையாத நிலையில், சிறிசேனவின் இந்திய வருகையால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் அமையப் போவதில்லை.
தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் உள்ள ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப, நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இலங்கையின் புதிய அரசு.
இந்திய அரசுமுறைப் பயணத்தின் போதும் இலங்கை அதிபர் இதனை மறைமுகமாக வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது. இலங்கையில் தனி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் துயரங்களே இன்னமும் தீர்வுக்கு வராத நிலையில், இங்கிருக்கும் தமிழர்களை அங்கே அழைத்துப்போய் எவ்வித நலனையும் இலங்கை அரசால் செய்துவிட முடியாது.
தமிழர்களின் உயிர்பறிக்கும் கொடூரங்களை மறுபடியும் நடத்திக்காட்டவே இத்தகைய நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்கிறது.
எனவே, இலங்கை அதிபர் வருகையால் தமிழர்களுக்கு எத்தகைய நம்பிக்கையும் ஏற்படப் போவதில்லை. இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தை ஒட்டி தமிழக மீனவர்களின் படகுகளை ஒப்படைக்க இலங்கை அரசு முன்வந்திருக்கிறது.
பயணத்தின்போது ஏற்படுகிற இத்தகைய இணக்கம் மற்ற நேரங்களில் மட்டும் தாக்குதலாகவும் படகு பறிப்பாகவும் அமைவது ஏன்? �தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் எனச் சொல்லவோ, அதனைச் செய்யவோ விரும்பாத இலங்கை அரசு, நல்லெண்ண அடிப்படையில் படகுகளைத் திரும்பக் கொடுப்பதாக நாடகமாடுகிறது.
வெளியளவில் நட்பு நாடாகவும் மனத்தளவில் தமிழர் விரோத அரசாகவுமே நாடகமாடும் இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்தக் காலத்தில் நன்மை பயக்கும் அரசாக அமையப்போவதில்லை.
தமிழர் விரோத நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாத சிங்கள ஜனாதிபதியின் இந்திய வருகையால் எள்ளளவு நன்மையும் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை.
இலங்கை � இந்திய நாடக நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கும் நாம் தமிழர் கட்சி இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfv2.html

Geen opmerkingen:

Een reactie posten