தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 juli 2014

ஐ.நா. போர்க்குற்ற விசாரணை குழுவினருக்கு வீசா வழங்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!

இன்னுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்! யாழில் கையெழுத்து வேட்டை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 07:39.19 AM GMT ]
ஜூலைக் கலவரத்தினை நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இன்னுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நடவடிக்கையில், பெருமளவிலான பொதுமக்கள் திரண்டு சென்று தமது ஒப்பங்களை இட்டு ஆதரவை வெளிப்படுத்தியவாறு இருந்தனர்.
இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இல்லை என்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ், சிங்கள மொழிகள் அடங்கிய  துண்டுப் பிரசுரங்களும் இத்னபோது விநியோகிக்கப்பட்டன.
மேலும், எமது நாடு இனவாத - மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம்.
1983 ஜூலை மாதம் 23 ம் திகதி இன்றைய தினம் 31 வருடங்களிற்கு  முன்னர் அன்றைய ஆட்சியாளர்களாலேயே நடந்த கறுப்பு ஜூலையின் பின்னர் உக்கிரமடைந்த யுத்தத்தினால் துன்பப்பட்டோம் என அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னிலை சோசலிசக் கட்சியினருக்கு தடையேற்படுத்திய பொரல்லை பொலிஸார்
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் எனக் கூறி சம உரிமை இயக்கம் இன்று பொரல்லையில் மேற்கொண்ட பாரிய பனரில் கையெழுத்து பெறும் நடவடிக்கைக்கு பொலிஸார் தடையேற்படுத்தியதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புது ஜாகொட தெரிவித்தார்.
முன் அனுமதியின்றி பனர் வைக்கப்பட்டதாக கூறி கையெழுத்துடன் கூடிய அந்த பனரை பொலிஸார் எடுத்துச் சென்றனர் எனவும் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் தமது கட்சியின் முக்கியஸ்தர்களான சேனாதீர குணதிலக்க உட்பட இருவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்ததாகவும் ஜாகொட குறிப்பிட்டார்.
கொழும்பு கோட்டை, கண்டி உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எடுத்த பிரச்சினையும் இன்றி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், பண்டாரவளை, எட்டியாந்தோட்டை,நாவலப்பிட்டி, காலி நகரங்களில் இன்று இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcks6.html
யாழில் இராணுவத்தினருக்கான காணி 26 ஆயிரம் ஏக்கரில் இருந்து 6 ஆயிரத்து 500 ஏக்கராக குறைப்பு: இராணுவம்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 07:45.49 AM GMT ]
யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம்கள் 26 ஆயிரம் ஏக்கரில் இருந்ததாகவும் அது தற்போது 6 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
யாழ் குடாநாட்டில் புதிதாக இராணுவ முகாம்களோ, முகாம்களுக்கான காணிகளோ சுவீகரிக்கப்படவில்லை.
அச்சுவேலி இராணுவ முகாமை விரிவுபடுத்த காணிகள் சுவீகரிக்கப்படுவதாக சில தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது என்றும் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அச்சுவேலியில் நேற்று முன்தினம் இராணுவ முகாம் அமைப்பதற்காக மக்களின் காணிகளை நில அளவையாளர்கள் காணிகளை அளவீடு செய்ய வந்த போது, காணி உரிமையாளர்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இணைந்து போராட்டம் நடாத்தி பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு 3 மணித்தியாலங்களாக போராட்டம் நடாத்தியதனையடுத்து நில அளவையாளர்கள் திரும்பிச் சென்றமை தொடர்பாக புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன்  வெளிவந்திருந்த செய்திகளை உண்மைக்குப் புறம்பானது என்று இராணுவ ஊடகப் பணிப்பாளர் ருவான் வணிகசூரிய  கூறியுள்ளமை நகைப்பிற்கிடமானது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcks7.html
ஐ.நா. போர்க்குற்ற விசாரணை குழுவினருக்கு வீசா வழங்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 07:52.22 AM GMT ]
ஐ.நா. போர்க்குற்ற விசாரணை குழுவினருக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இடைவிடாத முயற்சி காரணமாக இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆணையிடுவதற்கான தீர்மானம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் 16 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஐ.நா. அதிகாரி சாண்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான இந்தக்குழு, இலங்கையில் விசாரணை நடத்த அனுமதி அளிக்க முடியாது அந்நாட்டு அதிபர் ராஜபக்ச அறிவித்துவிட்ட நிலையில், ஐ.நா. விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று பல வாரங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதைப்போலவே, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்தும் நோக்குடன் ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக் குழுவினருக்கு வீசா வேண்டி ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை மனித உரிமை ஆணையர் பிரதீபா மஹனாமஹேவா உறுதி செய்திருப்பதுடன், இலங்கைக்கு ஆதரவான இந்தியாவின் இந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவிலும், மற்ற சார்க் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளிலும் விசாரணை குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தான் போர்க்குற்ற விசாரணையை அமெரிக்காவின் நியூயோர்க், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா, தாய்லாந்தின் பாங்கொக் ஆகிய நகரங்களில் நடத்த ஐ.நா. தீர்மானித்தாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது இந்தியாவின் மனித உரிமை வரலாற்றில் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விடும். ஒருகாலத்தில் உலகில் எந்த மூலையில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அதற்கு எதிரான முதல் குரல் இந்தியாவிலிருந்து தான் ஒலிக்கும்.
மனித உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) முதல் நெல்சன் மண்டேலா வரை அனைவருக்கும் மானசீக வழிகாட்டியாக போற்றப்படும் மகாத்மா காந்தியை இந்த உலகிற்கு வழங்கிய இந்தியா, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான விசாரணைக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது என்பதையும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு விசா தர மறுக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த செய்திகள் மனித உரிமை வரலாற்றில் கறுப்பு பக்கங்களாகவே அமையும்.
இலங்கை இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் எவ்வாறு துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இங்கிலாந்தின் சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப்படங்கள் தான் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. இந்த ஆவணப்படங்களை திரையிடுவதற்காக அதன் தயாரிப்பாளர் கெல்லம் மெக்ரே கடந்த ஆண்டு டெல்லி வர விரும்பினார்.
ஆனால், அவருக்கு விசா வழங்க முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுத்துவிட்டது. இந்தியாவின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. முந்தைய காங்கிரஸ் அரசு செய்த அதே தவறை நரேந்திர மோடி அரசும் செய்யக்கூடாது.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழு ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளது.
அதையும், உலகத் தமிழர்களின் உணர்வையும் மதித்து போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்; அதற்கு வசதியாக ஐ.நா. போர்குற்ற விசாரணை குழுவினருக்கு வீசா வழங்க நரேந்திர மோடி அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckty.html

Geen opmerkingen:

Een reactie posten