தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

கபில அம்மான், மாதவ மாஸ்டரிடம் இருவர் பயிற்சி! அரசு குற்றச்சாட்டு! தடுக்க முடியாது: சட்டத்தரணி தவராசா கடும் வாதம்!

ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் சாட்சியமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரண்டு மேல்நீதிமன்றங்கள் விசாரணை செய்ய சட்டத்தில் இடமில்லையென எதிரிகள் சார்பாக ஆஜராகிய சீரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் தனது வாதத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கணேசரத்னம் சாந்ததேவன், முருகையா கோமகன் ஆகிய இருவருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  போதே அவர் மேற்கண்டவாறு வாதாடினார்.
2004ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி வெள்ளவத்தையில் அரச விரோத எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து கடமையாற்றிய கருணா கூட்டத்தின் உறுப்பினர்களான தங்கராஜா தப்பரமூர்த்தி, நல்லையா குகராஜா, ராஜா ராசவேலி, செங்குராஜா ஆகிய நால்வரையும் வெடி வைத்துக் கொல்வதற்காக எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் தலைவர்களின் ஒருவரான நியூட்டனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியமை உட்பட மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கணேசரத்னம் சாந்ததேவன், முருகையா கோமகன் ஆகிய இருவர் மீதும் கொழும்பு மேல்நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதே தினத்தன்று கணேசரத்னம் சாந்ததேவனுக்கு எதிராக 2000ம் ஆண்டு எல்.ரீ.ரீ;.ஈ இயக்கத்தில் இணைந்து கொண்ட கபில அம்மான் சங்கீதன் மற்றும் மாதவ மாஸ்டரின் கீழ் ஆயுதப்பயிற்சி பெற்றதாக ஒரு குற்றச்சாட்டும் 2003ம் ஆண்டு முருகையா கோமகன் எல்.ரீ.ரீ;.ஈ இயக்கத்தில் இணைந்து கிளிநொச்சியில் ஆயுதப்பயிற்சி பெற்றதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு இருவருக்கும் எதிராக தனித்தனியாக இரண்டு குற்றச்சாட்டுப்பத்திரங்கள் வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
சட்டமா அதிபரினால் இந்த இரண்டு எதிரிகளுக்கும் எதிராக குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அரச சாட்சியமாக கொண்டு மொத்தமாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவற்றில் வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் வவுனியா மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் கணேசரத்னம் சாந்ததேவனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக எதிரியினால் வழங்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க நடாத்தப்படும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவுசெய்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒசான் ஹேவாவிதாரன மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் சியாப்டீன், தட்டெழுத்தாளர் சுபோதா ஆகியோரது சாட்சியங்களும் பெறப்பட்டு, வழக்கின் எதிரியான கணேசரத்னம் சாந்ததேவனின் சாட்சியத்தையும் பரிசீலனை செய்த வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரியினால் சுயமாக வழங்கப்படவில்லையென நிராகரித்து 16-07-2014ம் திகதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவுசெய்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒசான் ஹேவாவிதாரன இன்று இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த சாட்சியினால் பதியப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாகப் பெறப்படவில்லையென வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அரச சட்டத்தரணி இந்த வழக்கில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒசான் ஹேவாவிதாரனவின் சாட்சியத்தை நெறிப்படுத்த விண்ணப்பிக்கின்றார்.
வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய முடியும். ஆனால் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மீண்டும் இந்த நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தவிர குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேறு சாட்சியங்கள் இருப்பின் இந்த நீதிமன்றினால் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்திறமையை நெறிப்படுத்தினார்.
இதன்போது அரச சட்டத்தரணி தனது வாதத்தில் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு இந்த நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாதென்றும், ஆகவே விசாரணையை ஆரம்பிக்கும்படி நீதிமன்றத்தை வேண்டிக்கொண்டார்.
அவ்வேளையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சான்றாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் கடந்த 34 வருடங்களாக மூவாயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகளில்; நாட்டிலுள்ள பல மேல் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளேன்.
ஆனால் எனது அனுபவத்தில் முதன்முறையாக வவுனியா மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட ஒரே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வழக்கை இந்நீதிமன்றம் விசாரணை செய்யவேண்டுமென சட்டவரையற்ற விண்ணபத்தை சட்டமா அதிபரின் பிரதிநிதியான அரச சட்டத்தரணி கோருவது வியப்பிற்குரியது என வாதாடினார்.
எதிரிகள் தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை செப்டம்பர் மாதம் 30ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLciqy.html

Geen opmerkingen:

Een reactie posten