தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

படையினர் சுவீகரிக்கும் காணிகளில் சிங்களக் குடியேற்றம்: மாவை எம் பி!!!

புனித செபஸ்தியரின் திருப்பண்டத்தினை திருடிய நபர் கைது - யாழில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் கைது
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 04:11.51 AM GMT ]
இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித செபஸ்தியரின் திருப்பண்டத்தினை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கந்தானை சென். செபஸ்தியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியாரின் புனித பண்டைய பொருள் நேற்று இரவு காணாமல்போயுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, அவரது வீட்டில் சோதனைகளை மேற்கொண்ட வேளை, புனித செபஸ்தியரின் திருப்பண்டம் மற்றும் அது வைக்கப்பட்டிருந்த கலசமும் இன்று அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, ஒட்டுமடம் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு இந்தியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஆடை மற்றும் ஆபரண விற்பனையில் ஈடுபட்டிருந்தாக பொலிஸார் கூறினர்.
39 மற்றும் 47 வயதான இந்த சந்தேக நபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULcht3.html
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று- களுத்துறையில் புதிய இராணுவ முகாம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 05:13.07 AM GMT ]
ஊவா மாகாண சபைக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று தொடங்கவுள்ளது.
பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அலுவலக நேரங்களிலேயே தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுயேட்சைக் குழுக்கள் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை மட்டுமே தமது கட்டுப்பணத்தை செலுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே பிரவேசிக்க முடியும் எனவும் தேர்தல் செயலகம் சுட்டிக் காட்டியுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதித் தினங்களில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதால் அமைதியான முறையில் செயற்படுமாறும் தேர்தல் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிலையங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் 15 ஏக்கரில் புதிய இராணுவ முகாம்
களுத்துறை மாவட்டத்தில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக இராணுவத் தளபதி, களுத்துறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் 15 ஏக்கர் காணியை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இந்த இராணுவ முகாமை அமைக்க திட்டமிட்டுள்ளது.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இணைப்புக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவ முகாமுக்கான காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிளில் அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் முஸ்லிம்களின் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
இதனை இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சிங்களவர்களுக்கு சொந்தமான வீடுகளும் சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அளுத்கம , பேருவளை நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள மத்துகம பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULcht4.html
படையினர் சுவீகரிக்கும் காணிகளில் சிங்களக் குடியேற்றம்: மாவை எம் பி
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 06:10.10 AM GMT ]
வட மாகாணத்தில் இராணுவத்தினருக்கு என்று சுவீகரிக்கப்படும் காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை கிளை தெல்லிப்பளையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.  இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 
காலம் காலமாக தமது சொந்த இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் அவல நிலையில் வசித்து வரும் இந் நிலையில், அவர்களுடைய சொந்தக் காணிகளில் சிங்கள குடியேற்றங்களை அமைக்க அரசு முனைகிறது.
தமது சொந்தக் கிராமங்களில் சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்த மக்கள் இன்று அகதிகளாக அவல வாழ்வு வாழ்கின்றனர்.  அவர்களது பரம்பரை நிலங்களை இராணுவத்தினர் தம் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 
இவ்வாறு தம்வசப் படுத்திய காணிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தவுள்ளனர்.
இதனால் அரசு தமிழர்களின் இன விகிதாசாரத்தை திட்டமிட்டு குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தற்பொழுது சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் வசிக்கின்றனர்.  இவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 60 ஆண்டு காலமாக தொடரும் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் தற்போது மேலும் வலுப்பெற்றிருக்கின்றன.
அவர்களது பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பது ஊடாக ஒரு இனத்தை அழித்து விடலாம் என்பதே அவர்களின் நீண்ட கால திட்டமாக உள்ளது.
மயிலிட்டியில் தந்தை செல்வா காலத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு இங்குள்ள உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.  ஒரு காலத்தில் எமது பகுதிகளில் இருந்து 300 க்கு மேற்பட்ட லொறிகளில் கடலுணவு கொண்டு செல்லப்பட்டது.
தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள் பெருமளவான பொருள்களை கொள்வனவு செய்து சென்றனர்.  அந்தக் காலத்தில் செல்வச் செழிப்புடன் எமது கிராமங்கள் இருந்தன.
ஆனால் இன்று நாம் தென்னிலங்கையை நம்பி வாழ வேண்டிய சூழல் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
மத்திய அரசு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை தம்வசப்படுத்தி வைத்திருக்கிறது.  இதனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக துன்பங்களையே எதிர்நோக்க வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULcht5.html

Geen opmerkingen:

Een reactie posten