தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

மத்திய அரசை எதிர்த்து இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு!



இரு தாய்மார் ஆறு குழந்தைகள் பிரசவிப்பு –மட்டு. போதனா வைத்தியசாலையில் சம்பவம்!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:50.30 PM GMT ]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் இரு தினங்களில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது முதல் தடவையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு நாவற்காடு பிரதேசத்தினை சேர்ந்த ராஜ்குமார் நிசாந்தினி எனும் தாய் ஒரே சூழில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
அறுவைச்சிகிச்சை மூலமே குறித்த குழந்தைகள் பிரசவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் மா.திருக்குமார் தெரிவித்தார்.
மூன்று குழந்தைகளும் தேகாரோக்கியத்துடன் உள்ளதாகவும் இப்பிரசவத்தின் மூலம் இரு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிரசவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று ஏறாவூர் செம்மணோடையை சேர்ந்த திருமதி நியாம்டின் என்னும் பெண் மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளார்.
தனது முதல் பிரசவத்திலேயே இந்த மூன்று குழந்தைகளையும் ஈன்றதாகவும் சத்திர சிகிச்சை மூலமே இவர் குழந்தையை ஈன்றதாகவும் மகப்பேற்று வைத்திய நிபுணர் காஞ்சன வன்சபுர தெரிவித்தார்.மூன்று குழந்தைகளும் தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆறு குழந்தைகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சிசு சிகிச்சை பகுதியில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிசுக்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் இராப்ராலெப்பை மற்றும் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் திருமதி கிரேஷ் நவரெட்னராஜா, குழந்தை நல வைத்திய நிபுணர் திருமதி விஜி திருக்குமார் உட்பட வைத்தியர்கள் பார்வையிட்டதுடன் அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதல்முறையாக இரு தினங்களில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLchoz.html

மத்திய அரசை எதிர்த்து இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 02:08.37 PM GMT ]
மாவட்ட ஆட்சியரின் உறுதியினை ஏற்று மீனவர்கள் படகுகளின் உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிராக இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்துவோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது.
கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர்.
இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதுடன், இவர்களது 55 படகுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மீனவர்கள் தங்கள் படகுகளின் உரிமங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது மற்றும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 2ஆம் தேதி அனைத்து மீனவர்களும் படகுகளில் வெள்ளை கொடி கட்டி இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி இன்று திங்கட்கிழமை காலை இராமநாதபுரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தங்களது படகுகளின் உரிமங்களை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலமாக சென்ற மீனவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அதிகாரிகளிடம் கோரிக்கையினை சொல்லி செல்லுமாறு மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனை ஏற்றுக் கொள்ளாத மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான வாயில் முன் அமர்ந்து கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மீனவர்கள் தங்களது படகுகளின் உரிமங்களுடன் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
மீனவர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், ‘‘மீனவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து தமிழக அரசு அறிந்துள்ளது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க தமிழக முதல்வர் நேரடியாகவும், அலுவல் ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதன் மூலம் மீனவர்களும், படகுகளும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இலங்கை கடற்படையினரால் படகுகளை இழந்த மீனவர்களுக்கு அரசின் உதவிகளை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தமிழக முதல்வரின் மேல் நம்பிக்கை வைத்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
இதனைத் தொடர்ந்து மீனவர்கள், தங்கள் படகுகளின் உரிமங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் ‘‘இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. எனவே எங்களின் முதல் கட்ட போராட்டமான படகுகளின் உரிமங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிடுகிறோம்.
ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. எனவே எங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதேபோல் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி நடக்க இருக்கும் இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டத்தையும் நடத்துவோம்'' என்றார்.
முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் மீனவர் சங்க தலைவர்கள், என்.தேவதாஸ், சேசு, எமரிட், சகாயம், மீனவர் மகளிர் அமைப்ப்பின் நிர்வாகிகள் இருதயமேரி, மோட்சராணி, விவேகானந்தா குடில் நிர்வாகி சுவாமி பிரணவானந்தா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcho0.html

Geen opmerkingen:

Een reactie posten