தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செயலாளர் ஒருவரை பதவி நீக்கியுள்ளார்!

அபிவிருத்திக்கு 6ஆயிரம் மில்லியன் ரூபா நிதி தேவை! வடமாகாண சபை மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 03:17.25 PM GMT ]
வடமாகாண அபிவிருத்திக்காக 6ஆயிரம் மில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளதாக தெரிவித்து, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்த நிதியினை தமக்கு ஒதுக்கீடு செய்து  வழங்குமாறு வடமாகாண சபை மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடமாகாணத்திற்கான அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வடக்கு மாகாணசபை பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் தயாரிக்கப்படும் முதலாவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.
குறித்த வரவு செலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் உள்ளூராட்சி ஆகிய 5 அமைச்சுக்களாலும் முன் மொழியப்பட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அமைச்சும் அடுத்த ஆண்டு மாகாண சபையூடாகத் தம்மால் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கு, எவ்வளவு நிதி தேவை என்பதையும் சமர்ப்பித்துள்ளன.
அதன்படி வடக்கு மாகாண சகல அமைச்சுக்களினுடாகவும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 6 ஆயிரம் மில்லியன் ரூபா பணம் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்தே மேற்படி கோரிக்கை மத்திய அரசிடம் விடுக்கப்பட்டுள்ளதாக, மாகாணசபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழில் நீரை சுத்திகரிக்க புதிய திட்டம்
யாழ்.மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாய தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
குடாநாட்டின் நகர்ப்பகுதி மற்றும் பிரதேச வாரியாக உள்ள வளர்ந்துவரும் நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி பெருமளவு கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இவை உரியமுறையில் பயன்படுத்தப்படாத நிலையில், பெருமளவுக்கு அவை கடலில் சேர்க்கப்படுகின்றது. அல்லது நிலத்தில் சேமிக்கப்படும் நிலையில் நிலத்தடி நீருக்கு ஆபத்தான நிலை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அண்மையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் குறித்த விடயம் தொடர்பில், சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்று யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் கமநலசேவைகள் நிலையம், விவசாய அமைப்புக்கள் இடையில் கைச்சாத்திடப்பட வுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்படி குடாநாட்டின் நகரப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சிராய் குளத்தில் சேகரித்து பின்னர் சுத்திகரித்து அந்த நீரை நவாலி, சங்கரத்தை, மானிப்பாய், ஆகிய பகுதிகளில் விவசாய தேவைகளுக்காக வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படுமானால், ஒரு நாளைக்கு 10ஆயிரம் மீற்றர் கியூப் நீர் விவசாய தேவைகளுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாணம் முழுவதும் இவ்வாண்டிற்குள் மின்சாரம் வழங்கப்படும்
வடமாகாணம் முழுவதுக்குமான மின்சார வசதி இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என தெரிவித்திருக்கும் வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளர் ந.குணசீலன், 90 வீதமான பிரதேசங்களுக்கு மின்சார வசதி இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் 100வீதம் மின்சார வசதியை செய்து கொடுக்க வேண்டும், எனவும் அதனை இந்த வருட இறுதிக்குள் செய்து கொடுக்கும் படியும் அரசாங்கம் பணித்திருக்கின்றது.
இதற்கமைவாக யாழ்.மாவட்டத்தில் மின் இணைப்புக்கள் முழுமையாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் தீவகப் பகுதிக்கான மின் இணைப்புக்கள் மட்டுமே தாமதமாகின்றன.
நெடுந்தீவில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று அனலைதீவு, எழுவைதீவு பிரதேசங்களுக்கு அடுத்தகட்டமாக மின்சார விநியோகம் வழங்கப்படவுள்ளது.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு இந்த வருட டிசம்பர் மாத இறுதிக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். குறிப்பாக அக்கராயன் பிரதேசத்திற்கான மின் இணைப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் வவுனியா மற்றும் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் 95 வீதமான பிரதேசங்களில் மின்சாரத்தை மக்கள் பெற்றுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchsy.html
இலங்கை இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசைப் போலக் கருதி செயல்படுகிறதே?
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 03:50.37 PM GMT ]
இலங்கையைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், தற்போதுள்ள பா.ஜ.க. அரசானாலும் சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதிலேதான் முனைப்பாக உள்ளது. இவ்வாறு திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கேள்வி - பதில் வடிவிலான கடிதம்:
கேள்வி:- இலங்கை அரசு மேலும் மேலும் ஜனநாயகத்திற்கு விரோதமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்ட போதிலும், இந்திய அரசு அதனைக் கண்டிக்க முன்வராமல், இலங்கையையும் இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசைப் போலக் கருதி செயல்படுகிறதே?

கலைஞர்:-  இந்தப் பிரச்சினை குறித்து நாம் தொடர்ந்து மத்திய அரசு செய்ய வேண்டியதை எடுத்துக் கூறி வலியுறுத்தியே வருகிறோம். இலங்கையைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், தற்போதுள்ள பா.ஜ.க. அரசானாலும் சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதிலேதான் முனைப்பாக உள்ளது.
அடுத்த மாதம் 18 முதல் 20ம் தேதி வரை கொழும்பில் இலங்கை இராணுவம் கருத்தரங்கம் ஒன்றை நடத்தவுள்ளது. அந்தக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் தகுதியிலே உள்ள உயர் அதிகாரிகளும், பா.ஜ.க. சார்பில் அதன் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தரங்கம் முக்கியமாக இலங்கைக்கு நட்பு நாடுகள் எத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கும் என்பதை முடிவு செய்யுமாம். “குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழியும் தோண்டிய கதை”யைப் போலத்தான் இந்தியாவின் இந்த முடிவு உள்ளது.
அதுபோலவே, இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக 26-7-2014 அன்று நடைபெறவிருந்த பயிலரங்கத்தை, இலங்கை அரசுக்கு ஆதரவான சிங்கள அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி ரத்து செய்து விட்டன.
இதுகுறித்து இலங்கையிலே உள்ள அமெரிக்கத் தூதரகம் 28ம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் பேச்சு சுதந்திரத்துக்கும் கூட்டம் கூடும் சுதந்திரத்துக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இலங்கை மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்கமும் இதே காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலே தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து எங்கோ உள்ள அமெரிக்க நாடு தனது அதிருப்தியை அறிக்கை மூலம் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் போது, பக்கத்திலே உள்ள இந்திய நாடு பாராமுகமாக இருப்பது உலகத் தமிழர்களுக்கெல்லாம் வேதனையைத்தான் தருகிறது.
தமிழ்ப் பத்திரிகையாளர் பயிலரங்கம், இலங்கை அரசின் பாதுகாப்புக் கருத்தரங்கம், ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா மறுப்பு ஆகிய அனைத்துப் பிரச்சினைகளிலும் மத்திய அரசு எதிர்மறை அணுகு முறையையே கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய பா.ஜ.க. அரசு கடந்த கால காங்கிரஸ் அரசு போல நடந்து கொள்ளாமல் தமிழ் இனத்தைப் பாதுகாத்திடும் நோக்கில் நடந்து கொள்ள வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchsz.html
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செயலாளர் ஒருவரை பதவி நீக்கியுள்ளார்!
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 03:55.36 PM GMT ]
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு முறையற்ற விதத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டவரை உடனடியாக பதவி நீக்குமாறு முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் குறித்த செயலாளரை பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
யாழ்.குடாநாட்டில் இரு உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்படாத நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் புதிய செயலாளர்கள் அந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு செ.ரமேஷ் என்பவர் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் முறையற்ற விதத்தில் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த பிரதேச சபை செயலாளர் முறையற்ற விதத்தில் பதவி பெற்றுள்ளதாக வடமாகாண ஆளுநருக்கு முதலமைச்சர் எழுத்து மூலமாக தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர் தன்னால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டே, அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக பதில் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் சட்ட ஏற்பாடுகளின் படி தனது சம்மதம் இன்றி குறித்த பிரதேச சபை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் எழுத்து மூலம் ஆளுநருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இதற்கமைவாக குறித்த பிரதேச சபை செயலாளரை பதவியிலிருந்து நீக்குவதாக முதலமைச்சருக்கு ஆளுநர் பதில் வழங்கியிருப்பதுடன், பிர தேச சபை செயலாளரை பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
மேலும் அந்தச் சபைக்கு புதிய செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான நேர்முக தேர்வினை நடத்த ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார்.
இதேவேளை பிரதேச சபை செயலாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நேர்முகத் தேர்வு பிரதம செயலாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும். எனினும் குறித்த செயலாளர் அந்த நேர்முகத்தேர்வில் தோற்றவில்லை.
அவர் ஆளுநரால் நடத்தப்பட்ட நேர்முக தேர்வில் மட்டுமே தோற்றியிருந்தார். என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchs0.html

Geen opmerkingen:

Een reactie posten