தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

இந்தியா தடுமாறுகிறதா, தடம் மாறுகிறதா?

சர்வதேச நிபுணர்களுடன் சந்திப்பு குறித்து ஆராயப்படும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 03:31.25 AM GMT ]
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்களுடன் சந்திப்புக்கு அழைக்கப்பட்டால் அது தொடர்பில் ஆராயப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த சர்வதேச நிபுணர்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.
காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் ஏற்கனவே கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இருந்தும், இந்த குழுவுக்கு சர்வதேச நிபுணர்களை நியமித்துள்ளமை தொடர்பில் தாம் இன்னும் ஆராயவில்லை என்று மாவை சேனாதிராஜா கூறினார்.
சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் பரிந்துரைகளை ஏற்பது ஏற்காமல் விடுவது என்ற முடிவுகளை அரசாங்கமே எடுக்கும் என்ற அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலயின் கருத்து சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகவும் மாவை குறிப்பிட்டார.
எனவே சர்வதேச நிபுணர்கள் இந்த விடயத்தில் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என்று நம்பமுடியவில்லை என்றும் மாவை சுட்டிக்காட்டினார்.
கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதி ஒருபோதும் வெற்றியளிக்காது! இரா.சம்பந்தன் - பொது வேட்பாளரை ஆதரிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை! சுரேஷ்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 04:57.35 AM GMT ]
அரசாங்கம் ஏனைய கட்சிகளைப் பிரித்து துருவப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த நினைக்கின்றது. அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்த முனைகின்றது.
கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒருபோதும் பலிக்காது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட ஓர் கட்சியாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் எந்த விவகாரம் தொடர்பிலும் எந்தவித பிளவுமின்றியே தனது ஒருமித்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டுமென்பதில் அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. எனினும்  அது சாத்தியமாகவில்லை.
தமிழரசுக்கட்சியின் பேராளர் மாநாடு புரட்டாதி மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் எமது மாவட்டம் தோறும் உள்ள கிளைகள் மற்றும் பேராளர்கள் ஒன்றுகூடுவார்கள். இவர்கள் ஒன்றுகூடி ஏகமனதாக தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் நான் தமிழரசுக்கட்சியின் தலைவராகக் கடந்த மூன்று வருடங்களாக இருந்து வருகிறேன். அந்தவகையில் எனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகின்றேன். அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பேராளர்கள் ஒன்றுகூடி இணக்கமான முடிவுக்கு வருவார்கள். இதன் மூலம் ஒருபோதும் பிளவுபடவோ, பிரச்சினைகள் எழவோ இடமில்லை.
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் பதவி மோகத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தமிழர்களின் ஈடேற்றத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அந்தவகையில் கூட்டமைப்பை பிளவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பயனற்ற ஒன்றாகவே அமையும்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. அது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும்.
எப்படியாவது கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கலாம் என்று அரசாங்கம் கங்கணம் கட்டி செயற்படுவதையே காண முடிகின்றது. அதற்கு கட்சியோ தமிழ் மக்களோ ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும் என்றார்.
பொது வேட்பாளரை ஆதரிப்பது குறித்து த.தே.கூ. இன்னமும் முடிவு எடுக்கவில்லையாம்!
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடக்கும் என நம்பப்படும் நிலையில். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தயாராகி வருகின்றன. ஆனால் யாரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவுசெய்யவில்லை என்று கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் நாம் முஸ்லிம் காங்கிரஸுடன் உடன்படவில்லை என்றும், பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் எமது கட்சிக்குள் பிளவு என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனோ அல்லது எங்களுக்குள்ளோ வேறுபாடுகள் எவையும் இல்லை. எங்கள் கூட்டமைப்பின் தலைவர் முக்கிய அரசியல்தலைவர்கள் பங்குபற்றிய கூட்டத்தில் பங்குபற்றினார். அதற்காக கூட்டமைப்பு பொது வேட்பாளரை தேர்வுசெய்வதாக அர்த்தம் இல்லை.
மேலும் தேசிய ஒருமைப்பாடு குறித்த கருத்துக்களில் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும் கூறியதுடன், கூட்டமைப்பினர் பிளவுபட்டதாக மக்களிடம் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் நாம் வலுவான சக்தியாக ஒருமைப்பாடுடைய சக்தியாகவே இருப்போம் - என்று கூறினார். 
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcir1.html

தண்ணீரின்றி பாலைவனமாக மாறும் பொன்னகர்: பெரும் அசௌகரியத்தில் மக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 05:11.35 AM GMT ]
கிளிநொச்சி பொன்னகர் கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையிலான குழுவினர்  திடீர் விஜயமொன்றை ஒன்றை மேற்கொண்டனர்.
இதில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுதுறை அமைச்சர் குருகுலராஜா, கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரன், உறுப்பினர் குமாரசிங்கம் ஆகியோரும் அடங்குவர்.
இதன்போது அப்பகுதி மக்களின் நிரந்தர மற்றும் சமகால பிரச்சனைகள் தொடர்பாக அவர்களின் வீடுகளுக்கு சென்று அறியப்பட்டது.
வீட்டுத்திட்டம், விவசாயம், வாழ்வாதாரம், கல்வி, விளையாட்டு, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகளுடன் மிக முக்கிய பிரச்சினையான தண்ணீர் பிரச்சினை பற்றி மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மக்கள் இன்று தண்ணீருக்காக காத்திருப்பதிலும் அலைவதிலும் எம் வாழக்கை தொலைகின்றது, தண்ணீர் பிரச்சினை காரணமாக சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்றவையில் பாதிப்புக்களும் இழப்பும் ஏற்படுவதாக மக்கள் கருத்து வெளியிட்டனர்.
தண்ணீர் இன்றி பசுமையெல்லாம் வற்றி காய்ந்து, பாலைவனமாக கிளிநொச்சியின் கிராமங்கள் மாறிவருவதற்கு பொன்னகரின் பல பகுதிகளும் நல்ல உதாரணம்.
இந்தியா தடுமாறுகிறதா, தடம் மாறுகிறதா?
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 06:34.05 AM GMT ]
உலக ஒழுங்குகளின் மாற்றங்கள் எப்போதுமே இலங்கைத் தமிழர் நலன்களில் தாக்கத்தைச் செலுத்துவதாக இருந்து வந்துள்ளன. இலங்கையின் புவிசார் அமைவிடம், எப்போதுமே உலகப் பொது நடப்புகளின் பாதிப்பைச் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி வந்துள்ளது.
இத்தகைய உலகப் பொது நடப்புகளின் மாற்றங்களை இலங்கை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும், இலங்கை அரசைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக, புறச்சக்திகள் அதனை வளைத்துப் போட்டுக் கொள்வதும் வழக்கமான நிகழ்வுகள்.
இத்தகைய பின்னணியில், தமிழர் பிரச்சினையின் முக்கியத்துவம், அவர்கள் தரப்பு நியாயங்கள், மனக்குறைகள் எல்லாமே அமுங்கிப் போய் விடுகின்றன.
எனவே இப்போது உருவாகி வருகின்ற புதிய சூழல் ஒன்று குறித்தும் தமிழர் தரப்பு கவனம் செலுத்தியாக வேண்டியுள்ளது.
அதாவது இந்தியாவில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், எந்தளவுக்கு தமிழர்களுக்கு நன்மையளிக்கும் என்ற கேள்விகள் நிறையவே இருக்கின்றன.
பாஜக ஆட்சிக்கு வர முன்னரும், ஆட்சிக்கு வந்தவுடனும், இது பற்றிய கேள்விகளும், ஆய்வுகளும் நிறையவே வெளிவந்திருந்தன. பாஜக வின் கடந்தகால அரசியல் குறிப்பாக வாய்பாய்க்குப் பிந்திய காலத்தில், பாஜக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் தமிழர் தரப்புக்கு அவ்வளவு நம்பிக்கையளிப்பதாக இருக்கவில்லை.
குறிப்பாக திமுக வின் அழுத்தத்தின் பேரில் காங்கிரஸ் அரசாங்கம் பாராளுமன்றத்தில் இலங்கை அரசைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முன்வந்த போது அதனை நிராகரித்தது பாஜக வேயாகும்.
தற்போதைய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜே அந்த நகர்வு முற்றிலுமாக குழம்பிப் போனதற்கு காரணம்.
தேர்தல் காலத்தில் இலங்கைத் தமிழர் நலன் குறித்தும் இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் வெளிவிவகாரக் கொள்கை தவறானது என்றும், பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது.
பாஜக வின் தீவிர தேசியவாதப் போக்கு, தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனத் தலையீடு, பாகிஸ்தானுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கம் போன்றவை, நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை இலங்கைக்கு சாதகமாக அமையாது என்றே பொதுவாகக் கருதப்பட்டது.
ஆனால் பாஜக அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை நகர்வுகள் இன்னமும் சரியாக இடம்பெறாத நிலையில், அது ஆட்சிப் பொறுப்பேற்று இப்போதே இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், இந்திய அரசின் நிலையான வெளியுறவுக் கொள்கை பற்றிய முழுமையான தீர்மானங்களுக்கு வர முடியாதுள்ளது.
எனினும் கடந்த இரண்டு மாதங்களில் இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைசார் நகர்வுகள், அனைத்துமே இந்தியா புதிய வழித்தடத்தில் பயணிக்க எத்தனிக்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியாவும், சீனாவும் மேற்கொள்ளும் நகர்வுகள், முற்றிலும் தமது நலன்சார் அடிப்படையிலானவையே.
ஒருபோதும் இலங்கையினதோ, தமிழர்களினதோ நலன்கள் பற்றி இரு நாடுகளும் சிந்திக்காது, என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சிக்கல் தான், தமிழர் பிரச்சினை இன்னமும் தீர்க்க முடியாமல் இழுபறிப்படுவதற்குக் காரணம்.
அதாவது, புறச்சக்திகளின் நலன்களுக்காக தெற்காசியாவில் ஆடப்படுகின்ற பகடை ஆட்டத்தில் தமிழர்களின் நலன் என்பது ஒரு காயாக மாறியுள்ளது என்பதே உண்மை.
பகடை ஆட்டத்தில் ஆடப்படும் ஒரு காயின் விருப்பம் எவ்வாறு கருத்தில் எடுக்கப்படுவதில்லையோ, அதுபோலத் தான் தமிழர்களின் நலன்கள் எதிர்பார்ப்புகளும் இங்கு கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
இந்தியாவின் புதிய அரசாங்கம் சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் காட்டும் நாட்டம் இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏனென்றால் சீனா என்ற துருப்புச்சீட்டை வைத்து தான் இந்தியாவை அண்மைக் காலங்களாக எடுத்தெறிந்து செயற்பட்டு வந்தது கொழும்பு.
திடீரென்று இந்திய - சீன உறவுகளில் தென்படும் மாற்றம் இலங்கையின் துருப்புச்சீட்டைச் செயலற்றதாக்கி விடத்தக்கதாக உள்ள போதும் அது கொழும்புக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இலங்கை எதிர்கொண்டு வந்த மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு இதுவரை மேற்குலகம் தான் காரணமாக இருந்து வந்துள்ளது. அதனை முறியடிப்பதற்கு சர்வதேச அரங்கில் சீனாவும் ரஷ்யாவுமே கவசமளித்து வந்தன. ஆனால் வரப்போகும் காலங்களில் இந்தியாவும் அத்தகைய கவசத்தைக் கொடுக்கலாம் என்று தெரிகிறது.
இது அதிகாரபூர்வ முடிவாக இல்லாதுவிடினும், இந்திய அரசின் இப்போதைய நகர்வுகள் அதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளன. சீனாவைப் பயன்படுத்தி உலக அரங்கில் சில இலக்குகளை அடைய இந்தியா திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக ஐநா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெறுவதற்கு சீனா பச்சைக்கொடி காட்டும் என்று இந்திய ஊடகமொன்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. ஐநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்புரிமையை இந்தியா பெறுவதற்கு முக்கியமான தடையாக இருந்து வந்தது சீனா தான். பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கடந்த 2012ம் ஆண்டு பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். எனவே சீனா பச்சைக்கொடி காட்டினால் இந்தியா பாதுகாப்புச் சபைக்குள் நிரந்தரமாக குடியேறலாம்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வரும் செப்டம்பர் மாத முற்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பிறிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி எடுத்த முடிவும் ஒரு காரணம். பிறிக்ஸ் வங்கியை உருவாக்கும் யோசனையை சீனா முன்வைத்த போது நரேந்திர மோடி அதற்கு உடனடியாகவே இணங்கிவிட்டார்.
அவர் கேட்டது பிறிக்ஸ் வங்கியின் முதலாவது நிறைவேற்றுத் தலைவராக இந்தியர் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்பதை மட்டும் தான். அதற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலையாட்டியதால் இந்தியப் பிரதமர் அந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.
அண்மைக்காலமாகவே சீனா புதிய வங்கிகளை உருவாக்கும் கனவில் இருந்து வருகிறது. அதாவது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் செல்வாக்கே அதிகமிருப்பதால், தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் புதிய சர்வதேச வங்கிகளை உருவாக்க எத்தனிக்கிறது சீனா.
ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியை பெய்ஜிங் நகரில் ஆரம்பிக்க சீனா முயன்றது. ஆனால் அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்புக் கடைக்கவில்லை. ஆனால் பிறிக்ஷஸ் வங்கி யோசனையை சீனா முன்மொழிந்த போது உடனடியாகவே இந்தியா இணங்கிவிட்டது.
இதனால் சீனாவின் ஒரு கனவு நிறைவேறியுள்ளது. இனி சீனா ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கும். இந்தியாவும் எட்டு சார்க் நாடுகளையும் இணைத்து சார்க் வங்கி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருக்கிறது.
சீனாவின் பிறிக்ஸ் வங்கிக் கனவை நனவாக்கியதன் மூலம் பாதுகாப்புச் சபையில் தனக்கு நிரந்தர உறுப்புரிமையை பெற முனைந்திருக்கிறது இந்தியா. அதுமட்டுமன்றி அயல்நாடுகள் ஒன்று மற்றையதன் கவலைகளையும் நலன்களையும் மதித்துச் செயற்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறார்.
இதன் உட்பொருளை இந்தியா விளக்காவிட்டாலும் இந்தியாவின் நலன்களையும் கவலைகளையும் சீனா மதித்துச் செயற்பட வேண்டும், அதற்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கோரியிருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.
அதாவது இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் தலையீடுகள், இந்தியாவுக்குப் பெரும் கவலையாக இருந்து வருகிறது இலங்கை மாலைதீவு, பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பதை இந்தியா கவலையுடன் தான் பார்த்து வருகிறது.
சீனாவின் இந்தத் தலையீடுகளும் இந்திய சீன எல்லைப் பிரச்சினையும் இருதரப்பு உறவுகளைக் கெடுக்கின்ற நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதை தற்போதைய இந்திய அரசு வலியுறுத்துவதாகத் தெரிகிறது.
முன்னர் பாஜக அரசாங்கத்தினால் பெரிதாகக் கிளப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய சீன எல்லைப் பிரச்சினை குறித்து அண்மைய காலங்களில் இந்தியா முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதுமட்டுமன்றி சீனக்குடாவில் விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் சீனாவின் திட்டத்தைக் கூட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
இவையெல்லாம் சர்வதேச அரங்கில் இந்தியா தனது சில இலக்குகளை அடைவதற்காக காட்டுகின்ற சகிப்புத்தன்மை, பொறுமை என்று வைத்துக்கொள்ளலாம்.
முன்னைய காங்கிரஸ் அரசாங்கம் அமெரிக்காவுடன் அதிக நெருக்கத்தைக் கொண்டிருந்தது. சீனாவுடன் முட்டிமோதி வந்தது. ஆனால் பாஜக அரசின் கொள்கை அதற்கு மாறானதாக இருக்கும் போலத் தெரிகிறது. அமெரிக்காவுடன் நெருக்கம் கொள்ளவோ சீனாவை ஒதுக்கி வைக்கவோ அது தயாராக இல்லை.
அதுமட்டுமன்றி அமெரிக்காவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் முன்னர் தனிப்பட்ட பிரச்சினை ஒன்றும் இருந்து வந்தது. இத்தகைய கட்டத்தில் நினைவு கொள்ள வேண்டும்.  
இந்நிலையில் பாஜக அரசு அமெரிக்காவுடன் சற்று கடுமையாகவே நடந்துகொள்ளும் போலத் தெரிகிறது. ஆனால் இந்தியாவைத் தனது கைக்குள் போட்டுக்கொள்ள அமெரிக்கா இந்த இரண்டு மாதங்களிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வரும் செப்படம்பர் மாதம் அமெரிக்கா செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைச் சந்திக்கப் போகிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே சீன ஜனாதிபதியின் இந்தியப் பயணம் இடம்பெறப்போகிறது.
இவ்வாறாக இந்தியா, சீனா அமெரிக்காவை வைத்து நிகழும் மாற்றங்கள் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தவே போகின்றது.
இந்தியா சர்வதேச அளவில் தனது நலன்களை உறுதிப்படுத்த முனைந்தாலும் சீனா அதற்கு எந்தளவுக்கு சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தப் போகிறது என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஏனென்றால் மாலைதீவில் கடற்படையினருக்குப் பயிற்சியளிக்கப் போவதாக சீனா கடந்த வாரம் அறிவித்துள்ளது. இது இந்தியா எதிர்பாராத ஒன்றாகவே இருக்கும். அதைவிட மாலைதீவில் ஐந்து திட்டங்களில் கால்வைக்கவும் சீனா முயற்சிக்கின்றது.
அதுபோலவே இலங்கையிலும் சீனாவின் தலையீடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்தியா இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு சாதிக்க நினைக்கிறது போலும்.
ஆனால் இந்தியாவின் இந்தப் பொறுமையும் அதன் அண்மைய நகர்வுகளும் கொழும்புக்கு புதிய உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அது சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட இலங்கை விவகாரம் தொடர்பான நகர்வுகளையும் பலவீனப்படுத்தலாம்.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcir5.html

Geen opmerkingen:

Een reactie posten