தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

ஊடகவியலாளர்களின் உரிமைகளை அடக்க காட்டுமிராண்டிகளுக்கு அதிகாரத்தை வழங்கியது யார்?

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மோடியின் அரசு விசா வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 08:53.59 AM GMT ]
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வருகை தர இருக்கும் ஐ.நா. விசாரணை குழுவுக்கு மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு விசா வழங்கி விசாரணை முறையாக, முழுமையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஐ.நா. சபையில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றபட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
ஐ.நா. சபையின் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவை இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது ஏற்புடையதல்ல.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை இந்தியாவில் நடத்தும் நோக்குடன் இந்திய அரசுக்கு ஐ.நா. விசாரணைக்குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதாக அமைகிறது.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வருகை தர இருக்கும் ஐ.நா. விசாரணை குழுவுக்கு மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு விசா வழங்கி விசாரணை முறையாக, முழுமையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரின் தவறான அணுகுமுறையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த கவலைக்குறியதாக ஆகியிருக்கிறது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் தொடர் முயற்சியால் இதுவரையில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். மீண்டும் தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு அதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண தற்போதைய பா.ஜ.க. அரசு வழிவகை செய்ய வேண்டும்.
தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கவும் எல்லை தாண்டும் பிரச்சினையை தவிர்ப்பதற்கும் மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு உடனடி நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcis2.html
எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தினால் மகிந்தவுக்கே சாதகம்: பசில்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 10:31.46 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை மாத்திரம் நிறுத்தினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அது சாதமாக அமையும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டால், அது ஜனாதிபதிக்கு பாதிப்பாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலரை தனது அமைச்சு அழைத்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையொன்றை சுட்டிக்காட்டி அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள வாக்காளர்களை தம் பக்கம் ஈர்த்ததன் காரணமாகவே ஜே.வி.பி மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி ஆகியன கடந்த மாகாண சபைத் தேர்தலில் பாரிய வளர்ச்சியை காட்டின.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து அச்சமடைய தேவையில்லை.
ஆனால், சிங்கள பௌத்த வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஏனைய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொலைகள் செய்யவில்லையாம்? ஆளும் கட்சி அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 10:59.30 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அதனை மாற்றுமாறு கூறுவது அரசியல் வரலாற்றின் ஏளனம் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தம்பதெனிய மாரச்சிமுல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒவ்வொருவரும் கூறுவது போல் மாற்ற முடியாது. நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் பல நிலைப்பாடுகள் உள்ளன.
எனினும் சுதந்திரக் கட்சியினரின் கருத்துக்களை அறிந்தே அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொலைகளை செய்த கட்சியல்ல. இதனால், சுதந்திரக் கட்சியினர் தமது கட்சி குறித்து பெருமையாக பேச முடியும்.
நாடு பெற்ற சமாதானத்தை பாதுகாக்க வேண்டும். வதந்திகளுக்கும், பொய்களுக்கும் ஏமாற வேண்டாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு காலங்களுக்கு தேவையான தலைவர்களை உருவாக்கியது. ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்திய சார்பு தீர்மானங்களையே எடுக்கும்.
இதுதான் அந்த கட்சிக்கு சுதந்திரக் கட்சிக்கு இடையில் உள்ள வேறுபாடு எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழத்துக்கான நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக மக்கள் அவை
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 12:24.30 PM GMT ]
65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்படும் இன அழிப்பின் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு ஒரு அரசு இல்லையேல், தமிழனுக்கு எதும் இல்லை என்ற நிலை இலங்கைத் தீவில் உருவாகிவிட்டது.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையை தனி மனித உரிமைப் பிரச்சினையாகவும், மனிதவுரிமை பிரச்சினையாகவும் சுருக்கிவிடும் முயற்சியில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது.
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவத்துக்கு வெறுமனே புனர்வாழ்வும் , பொருளாதார அபிவிருத்தியையும் சிங்கள பேரினவாத அரசோ அல்லது சர்வதேச நாடுகளோ பேசிப் பயனில்லை, மாறாக ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அதிகாரத்தை தாமே நிர்ணயிக்கும் ஒரு தீர்வைப் பற்றியே சர்வதேசம் பேச வேண்டும் என்பதுக்கு அமைய தமிழீழத்தை அடையச் செல்லும் வழியில் ஒரு படியாக அதுக்கான வலுச்சேர்ப்பு நகர்வாக நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கடந்த வருடங்களாக தனது அரசியில் நகர்வுகளை செய்துவருகின்றது.
அந்தவகையில் கடந்த நான்கு நாட்களாக மொரிசியஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தமிழர் மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் செயலாளர் திருச்சோதி அவர்கள் மொரிசியஸ் நாட்டின் பிரதமர், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச அறிஞர்கள், முன்னிலையில் "ஈழத்தமிழர்கள் தேசிய இருப்பும், தேசிய ஒடுக்குமுறையும்” எனும் தலைப்பில் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் இன அழிப்பை எடுத்துரைத்தது அனைவரையும் கவர்ந்தது.
அத்தோடு மொரிசியஸ் நாட்டின் பிரதமரோடும், எதிர்க்கட்சித் தலைவரோடும் மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் , தமிழ் அமைப்புகளோடும் முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார்.
மொரிசியஸ் நாட்டில் தமிழ்க் கோயில் கூட்டமைப்பும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையும் இணைந்து செய்த முன்னைய மாநாட்டின் தொடர்ச்சியாலும் அரசியல் நகர்வாலும் சிறிலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மொரிசியஸ் புறக்கணித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcis6.html
ஊடகவியலாளர்களின் உரிமைகளை அடக்க காட்டுமிராண்டிகளுக்கு அதிகாரத்தை வழங்கியது யார்?
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 12:50.41 PM GMT ]
ஊடக பயிற்சி கருத்தரங்கு ஒன்றுக்காக கொழும்புக்கு வந்து கொண்டிருந்த யாழ். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் இடைநடுவில் தடையேற்படுத்திய பின்னர், காட்டுமிராண்டிகள் சிலர் அந்த கருத்தரங்கை நடத்த இடமளிக்காமை ஆகிய சம்பவங்களை சுதந்திர ஊடக அமைப்பு கண்டித்துள்ளது.
ஏ9 வீதி ஊடாக நேற்று முன்தினம் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இந்த ஊடகவியலாளர்களை இரண்டு முறை சோதித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் இரண்டாவது பொய்யான குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்துள்ளனர்.
பின்னர், விடுவிக்கப்படட யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள், கொழும்பு வந்திருந்ததுடன் கருத்தரங்கு நடைபெறவிருந்த இலங்கை பத்திரிகை நிறுவனத்திற்கு வருவதற்குள் காட்டுமிராண்டிகள் சிலர் கருத்தரங்கை நிறுத்துமாறு அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளனர்.
நிறுத்தாது போனால் தாக்குதல் நடத்த வேண்டியேற்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சிறிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய இந்த காட்டுமிராண்டிகள், இலங்கையில் எங்கும் இப்படியான கருத்தரங்கை நடத்த இடமளிக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.
இது முற்றாக சட்டவிரோதமான பாதக செயல் என கண்டிக்கும் ஊடக சுதந்திர இயக்கம், இலங்கையின் ஊடகவியலாளர்களின் உரிமைகளை அடக்க இந்த காட்டுமிராண்டிகளுக்கு அதிகாரத்தை வழங்கியது யார் என இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நாளுக்கு நாள் ஏற்படுத்தப்படும் தடை மற்றும் இடையூறுகள், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் வேறான உபசரிப்பை காட்டுகிறது என்பது சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து உண்மையை வெளியிடுவதற்காக சுதந்திர ஊடக அமைப்பு நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
ஊடக சந்திப்பு நடத்தப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர், சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகரவின் கையடக்க தொலைபேசிக்கு மறைக்கப்பட்ட இலக்கத்தில் இருந்து பேசி ஒருவர் உயிர் மீது ஆசை இருந்தால், ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளார்.
மீறி நடத்தினால், கொலை செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த கொலை அச்சுறுத்தலை சுதந்திர ஊடக இயக்கம் அச்சமின்றி கண்டிக்கின்றது எனவும் சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcity.html

Geen opmerkingen:

Een reactie posten