தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

யாழ். ஊடகவியலாளர்களிடம் 03 மணி நேரமாக ஓமந்தை பொலிஸார் விசாரணை!!



ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் யாழ். ஊடகவியலாளர்கள் 07 பேர் செய்த முறைப்பாடு தொடர்பில் 03 மணி நேரமாக இன்று செவ்வாய்க்கிழமை ஓமந்தை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஓமந்தை பொலிஸார் தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதுடன், தாம் பயணித்த வாகனத்தில் இராணுவத்தினர் கஞ்சா வைத்ததாக ஓமந்தை பொலிஸில் மேற்படி ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைக்குச் சென்ற யாழ். ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகப் பயிற்சி நெறிக்காக வந்த யாழ். ஊடகவியலாளர்களின் வாகனத்தில் கஞ்சா இருந்ததாக யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் 7 பேர் உட்பட வாகனத்தின் சாரதியும் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வாகனச் சாரதி மீது கஞ்சா வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஓமந்தையில் இருந்த இராணுவத்தினர் தமது வாகனத்தில் கஞ்சா வைத்ததாகவும் அதை தாம் அவதானித்ததாகவும் அங்கு வந்த பொலிஸார் தம்மை தரக்குறைவாக நடத்தியதுடன், தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாக ஓமந்தை பொலிஸில் யாழ். ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்தனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் ஓமந்தை பொலிஸாரினால் விசாரணைக்காக, முறைப்பாடு செய்த ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டனர்.
விசாரணைக்காக 11 மணிக்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மதியம் 02 மணிவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணை தொடர்பாக யாழ். ஊடகவியலாளர்கள் தெரிவிக்கையில்,
கடந்த சனிக்கிழமை அதிகாலை ஓமந்தை பொலிஸில் நாம் செய்த முறைப்பாடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
இதன் பின்னர் நாம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெறவுள்ளது எனத் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchr1.html

Geen opmerkingen:

Een reactie posten