தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

கறுப்பு ஜூலை கலவரம் உள்நாட்டு நாட்காட்டியில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் கரும்புள்ளி: டலஸ் அழகபெரும!

குவைத்தில் இலங்கை பெண் கொலை - ஜப்பான் பிரஜையிடம் பணம் திருடிய நபர் கைது (செய்தித்துளிகள்)
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 12:29.42 PM GMT ]
குவைத் நாட்டில் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி தனது மனைவியை கொலை செய்துள்ளார்.
இவர்கள் வசித்து வந்த வாடகை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குவைத் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி தகவலை அடுத்து இறந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்திய போது, அவரது மனைவியை வேறு ஒரு பெண் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். எனினும் அவரிடம் தொடர்ந்தும் நடத்தப்பட்ட விசாரணைகளில் தானே மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேக நபரது கள்ளத் தொடர்பு பற்றி மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த கொலை நடந்துள்ளதாக குவைத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் பிரஜையிடம் 5 லட்சம் ரூபா திருடிய நபர் கைது - கல்கிஸ்சையில் சம்பவம்
கல்கிஸ்சை பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஜப்பான் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜப்பான் பிரஜையின் யெண் மற்றும் அமெரிக்க டொலர்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட பணத்தின் இலங்கை பெறுமதி சுமார் ஐந்து இலட்சம் ரூபா என கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் வீதி விபத்து - இருவர் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பதுளை வீதி - கோப்பாவெளியில் வசிக்கும் முருகுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை (48) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும்போது, முச்சக்கர வண்டி வீதியருகில் இருந்த மரத்தில் மோதியுள்ளது. அதன்போது வீதியில் வந்து கொண்டிருந்த சைக்கிளையும் முச்சக்கர வண்டி மோதியுள்ளது.
இதனையடுத்து சைக்கிளை செலுத்தியவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வாழைச்சேனையில் வீடமைப்பு கடன் வழங்கும் நிகழ்வு
வெளிநாட்டு வீரர்கள் (ரட்ட விருவோ) வீடமைப்புக் கடன் வேலைத் திட்டத்தின் கீழ், வெளிநாடு செல்லும் நிலையான வீடற்று தொழில் புரிவோருக்காக வீடொன்றினை அமைப்பதற்கான கடன் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சகலருக்கும் வீடு எனும் தொனிப் பொருளின் கீழ் அரசு மேற்கொள்ளும் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கு ஒரு சக்தியினை வழங்கும் நோக்கத்துடன், இலங்கை சமுர்த்தி அதிகார சபையும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் ஒன்றிணைந்து இதனை செயற்படுத்தி வருகின்றது.
இதன் கீழ் வீடொன்றினை நிர்மாணிக்கும் பொருட்டு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச கடன் தொகையான மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இதற்கான வருடாந்த வட்டி வீதமாக பத்து வீதமும் அறிவிடப்படுகின்றது.
இதற்கமைய வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் மூன்று பேருக்கு வீடமைப்பதற்காக தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் ஒன்பது இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தட்சணாகௌரி தினேஸ், வாழைச்சேனை சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன், வாழைச்சேனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ.லதா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
என்னை பார்த்தால் ஜனாதிபதி ஒழிந்து கொள்கிறார்: சசீந்திர - மோசடியாளர்கள் பற்றி ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும்: டியூ. குணசேகர
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 12:36.14 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னை பார்த்தால் ஒழிந்து கொள்வதாக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தற்போது என்னை பார்த்தால் ஒழிந்து கொள்ளும் நிலைமைக்கு வந்துள்ளார்.
ஏனெனில் நானே அவரிடம் அதிகமாக கேட்டு வருகின்றேன். கேட்பதற்கு உரிமை இருக்கின்றது.
ஏனைய முதலமைச்சர்களை விட ஜனாதிபதியுடன் அதிகமான பழக்கத்தையும் கொண்டுள்ளதுடன், அறிந்தவன் என்பதால் கேட்டதை கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஜனாதிபதி என்னை கண்டால் ஒழிந்து கொள்கிறார்.
நாங்கள் உறவினர்கள் என்பதால் மிக நீண்ட காலமாக பழகி வருகின்றோம் என்றார்.
மோசடியாளர்கள் பற்றி ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும்: அமைச்சர் டியூ. குணசேகர
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தனக்கு எந்த பொறுப்பும் இல்லை என அந்த குழுவின் தலைவரும் அமைச்சருமான டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கும், சபாநாயகருக்மே பொறுப்புள்ளது. கோப் குழுவின் தலைவர் பதவியையும் அமைச்சர் பதவியை ஒன்றாக பிணைந்து கொண்டு நான் பணியாற்றுவதில்லை.
கோப் அறிக்கையின் தீர்மானங்களை செயற்படுத்துவது நாடாளுமன்றம் அல்ல. அதனை நிறைவேற்று அதிகாரம் கொண்டவரே செயற்படுத்துவார்.
நாடாளுமன்றம் ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கு அறிக்கையை வழங்கும். அதன் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை என்றால், அது பற்றி என்னிடம் கேட்டு பயனில்லை. நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதே எனது பணி. நான் எனது பணியை சரியாக செய்துள்ளேன்.
இதனால் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மோசடியாளர்கள் பற்றி ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும் எனவும் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளூர் போர்க்குற்ற விசாரணைகளை நிராகரிப்பதாக ருத்திரகுமாரன் தெரிவிப்பு
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 12:49.17 PM GMT ]
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளுர் மட்ட விசாரணைகளை தாம் நிராகரிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுர் விசாரணைகளை காட்டிலும் சர்வதேச விசாரணையில் நம்பகத்தன்மை இருப்பதாகவும் ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்களை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் விசாரணைக்கு, முழுமையான ஆதரவை வழங்குவதாக ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விசாரணை, முன்னாள் யூகோஸ்லேவியா தீர்ப்பாயத்தை போன்ற அமைய வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்பார்ப்பதாகவும் ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் புலம்பெயர்ந்த தமிழர்கள் சாட்சியங்களை வழங்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அத்துடன் அந்த குழு பொறுப்புக்கூறும் நிலையில் செயற்படவில்லை என்றும் ருத்திரகுமாரன் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைக்குழு ஒரு பக்கசார்பாக நடந்துக்கொள்ளும் சிலர் எண்ணுகிறார்கள். எனினும் அந்தக்குழு இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcio7.html
கறுப்பு ஜூலை கலவரம் உள்நாட்டு நாட்காட்டியில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் கரும்புள்ளி: டலஸ் அழகபெரும
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 01:01.25 PM GMT ]
கறுப்பு ஜூலை கலவரம் உள்நாட்டு நாட்காட்டியில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் கரும்புள்ளியாக அமைந்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை கலவரத்திற்கு காரணமாக இருந்தாக கூறி லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் தடை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜூலை கலவரத்திற்கு காரணம் எனக் கூறி, மூன்று கட்சிகளை தடை செய்து, இலங்கை வரலாற்றில் அரசாங்கம் ஒன்று மேற்கொண்ட உலகில் மிகப் பெரிய பொய் இதுவாகும்.
கறுப்பு ஜூலை ஊடாக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு பிரிவினைவாத பயங்கரவாதத்தின் மூலம் பதில் கிடைத்தது.
1983 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி என்பது எமது உள்நாட்டு நாட்காட்டியில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் பதியப்படுவது கரும்புள்ளியாகும்.
ஜூலை 23 ஆம் திகதி கண்ணி வெடியில் சிக்கிய இராணுவத்தினருக்காக அன்று நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள், கொழும்பில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து, அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அன்றைய அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்திற்கு பிரிவினைவாத பயங்கரவாதத்தினால் பதில் கிடைத்தது.

இந்த அவமதிப்பான கறுப்பு ஜூலை கலவரத்துடன் சம்பந்தப்பட்டனர் என்று கூறி, லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன. இது இலங்கை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பொய்.
இந்த தடையே 1989-89 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு வித்திட்டது.
அன்று நாட்டில் இனவாத தீயை மூட்டியவர்கள் அதற்கான இழப்பை எதிர்கால சந்ததி செலுத்த வேண்டும் என்று எண்ணவில்லை. இந்த சம்பவங்கள் மூலம் நாம் எதிர்காலத்திற்கான பாடத்தை கற்க வேண்டும் எனவும் அமைச்சர் டலஸ் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten