தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

இலங்கையில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்: அமெரிக்கா கவலை!

பொது வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 11:46.23 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் எந்த உண்மையுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக கட்சிக்குள் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியல் கட்சிகளின் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள போதும் அது பொது வேட்பாளரை தெரிவு செய்யும் அர்தத்தில் அல்ல எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcix5.html
பொதுபலசேனாவும் "இப்தார்" நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தாலும் ஆச்சரியம் இல்லை: அரியநேத்திரன்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 11:49.11 AM GMT ]
முஸ்லிம் சமூகத்தின் மிகவும் உன்னதமான விரதமாக நோக்கப்படும் நோன்பு விரதம் "இப்தார்" என புனித திருக்குர் ஆனில் கூறப்படுகிறது. இதை நான் புனித மத அனுஷ்டானமாக மதிப்பதனால் தான் எந்தவொரு இப்தார் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கடந்த தினத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேட்டபோது அதுதொடர்பாக கருத்துக்கூறிய அரியம் எம்.பி,
ஒவ்வொரு மதமும் அவர்களின் மத சம்பிரதாயங்களுடனும் பக்தியுடனும் வழிபாட்டுடனும் நோன்பு நோற்று அந்த உன்னத விரதத்தை பூர்த்தி செய்வது, ஒவ்வொரு மதத்திற்கும் உரிய தனித்துவமான பாரம்பரியமான நடைமுறையாகும்.
இந்து மதத்தில் கந்தஷஸ்டி, கௌரி, விநாயகர், சோமவாரம், சிவராத்திரி என பல விரதங்களும், கிறிஸ்தவ மதத்தில் உயிர்த்தெழுந்த ஞாயிறு போன்ற விரதங்களும், பௌத்த மதத்தில் பூரணை தின விரதங்களும், உரிய மாதங்களில் உரிய திதிகளில் அந்தந்த மதங்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
அவ்வாறு தான் இஸ்லாம் மதமும் நோன்பு விரதத்தை மிகமுக்கிய விரதமாக கடைப்பிடிக்கிறது. ஆனால் அந்தவிரத அனுஷ்டானங்களின் போது பிற மதத்தவர்களை அழைத்து ஒரு களியாட்ட நிகழ்வு போன்று, அல்லது பிறந்தநாள் விழா போன்று உணவு விடுதிகள், அலுவலகங்கள்,கடற்கரைகள், பொதுமண்டபங்கள்,வீதி ஓரங்கள் என்பவற்றில் அழைத்து " இப்தார்" நிகழ்வு நடாத்துவது என்பது சிலவேளை முஸ்லிம் மக்களுக்கு அது சரியாக பட்டாலும் ஒரு உன்னதமான விரதத்தை நான் மதிப்பவன் என்ற வகையில் பகிரங்கப்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து விரதம் அனுஷ்டானம் செய்வதை இஸ்லாம் மதம் சம்மதித்துள்ளதா? என்பது எனக்கு தெரியாது.
ஆனால் வழமையாக முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் மார்க்கத் தலைவர்கள், முஸ்லீம் வர்த்தகர்கள், முஸ்லிம் சமூகப் பெரியார்கள் "இப்தார்" நிகழ்வுக்காக அழைப்பு விடுவதைப் போல் இப்போது பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ ஆகியோரும் இப்தார் நிகழ்வுக்கு அழைப்பு விட்டதையும் ஊடகங்களில் காண முடிந்தது.
எதிர்காலத்தில் பொதுபலசேனாவும் இவ்வாறு இப்தார் நிகழ்வுக்கு அழைத்தாலும் ஆச்சரியம் இல்லை.
விரதம் வேறு, விழாக்கள் வேறு இந்துக்களின் பொங்கல் விழா, சித்திரை புதுவருட விழா, தீபாவளி விழா, கிறிஷ்தவர்களின் நத்தார் விழா, ஆங்கில புதுவருட விழா, பௌத்தர்களின் சிங்கள புதுவருட விழா, நோன்மதிவிழா போன்று இஸ்லாமிய மக்களால் மீலாத்துன் நபி, ஈதுல் பித்ர், ஈதுல் அல்ஹா, என பல விழாக்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாறான விழாக்களில் வேற்று மதத்தினர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டம் நடாத்துவதிலும் புகைப்படம் எடுத்து விளம்பரப்படுத்துவதிலும் தவறில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.
ஆதியில் இருந்து முன்னோர்களான இஸ்லாம் மக்கள் இவ்வாறு விளம்பரப்படுத்தி மாற்று மதத்தவர்களை பக்கத்தில் அமரவைத்து நோன்பு நோற்று புகைப்படம் எடுக்கவில்லை, அவர்கள் எவருமே விளம்பரம் செய்து இப்தார் அனுஷ்டிக்கவில்லை. ஆனால் இப்தார் விரதம் முடிவுற்றபின் றமழான் தினத்தில் தான் எல்லோருக்குமான விருந்தோம்பல்களை மேற்கொண்டதை காணமுடிந்தது.
தற்போது சிலர் இதை அரசியலாகவும் சிலர் தங்களின் விளம்பரத்திற்காகவும் ஊடகங்களில் படம் வருவதற்காகவும் நடாத்துவது போன்று உள்ளது இதை முஸ்லிம் மார்க்க பெரியார்களும் முஸ்லிம் புத்திஜீவிகளும் எதிர்காலத்தில் கவனத்தில் எடுக்க வேண்டும்.
எனவே புனிதமான இப்தார் விரத நிகழ்வை மதிப்பவன் என்ற காரணத்தினால் தான் நான் இதுவரை எந்த இப்தார் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவும் இல்லை இனியும் கலந்து கொள்ளவும் மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcix6.html
நெருடிக்கடியை திசை திருப்ப சேறுபூசும் திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கம்!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:19.03 PM GMT ]
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உள்ளேயும் வெளியேயும் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில் அதனை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவருகிறது.
ஆளும் கட்சியின் முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சி சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பித்த ஜே.வி.பியினருக்கு எதிரான கண்காட்சியை மீண்டும் ஆரம்பிப்பது இதில் பிரதான அங்கமாகும் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
சந்தன கத்திரியாரச்சி, மாகம்பமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று கொலையுடன் சம்பந்தப்பட்டிருந்த பிரதான குற்றவாளி. இந்த வழக்குடன் தொடர்புடைய இரண்டு சாட்சியாளர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபர், கத்திரியாராச்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப்பெற்றார். கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை பிரபல அறிவிப்பாளரும் பாடலாசிரியருமான பிரேமகீர்த்தி டி அல்விஸ் கொலைச் சம்பவத்தை பயன்படுத்தி மற்றுமொரு சேறுபூசும் பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவுக்கு இந்த கொலையுடன் தொடர்பிருப்பதாக அல்விஸின் மனைவி நிர்மலா அல்விஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.
சந்தன கத்திரியாராச்சியின் கண்காட்சி ஜே.வி.பியினால் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பானது என்பதுடன், பிரேம கீர்த்தி டி அல்விஸ், ஜே.வி.பியினரால் கொலை செய்யப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.
இந்த நிலையில், இந்த சம்பவங்களை பயன்படுத்தி ஜே.வி.பிக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜே.வி.பியின் பேச்சாளர் ஒருவர், ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்கள் மீது ஜே.வி.பி பாரதூரமான அரசியல் தாக்குதல்களை தொடுக்கும் போது, அந்த அரசாங்கங்கள் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுப்பது வழமையானது எனத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcix7.html
இலங்கையில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்: அமெரிக்கா கவலை
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:34.35 PM GMT ]
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கொன்று கடந்த வார இறுதியில் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்காக அமெரிக்காவின் நிதியுதவியுடன் இந்த பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பயிற்சி கருத்தரங்கு இரத்துச் செய்யப்பட்ட பின்னர், அதில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் கருத்தரங்கு இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்த ஊடகவியலாளர் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஏனைய ஊடகவியலாளர்கள் பயமுறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் திட்டமிட்டு செயற்படும் குழுவொன்றின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் முதல் இதுவரை இரத்துச் செய்யப்பட்ட மூன்றாது கருத்தரங்கு இதுவாகும்.
பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்த போதும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்பதுடன் அச்சுறுத்தியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேவேளை 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி யாழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகள் பற்றிய செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாகவும் நாம் கடும் அதிருப்தியினை வெளியிடுகிறோம்.
காரைநகர் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினரால் இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையில் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரங்களுக்கு தடையேற்படுத்தும் நபர்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை இருப்பது இந்த சம்பவங்கள் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் அமெரிக்கத் தூதரகத்தின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLchoy.html

Geen opmerkingen:

Een reactie posten