தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1990ல் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது ஆற்றிய உரை!



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு எதிரான யுத்த குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த காலகட்டத்தில் தேசப்பற்று, தேசத்துரோகம், நாட்டை காட்டிக்கொடுப்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் மீண்டும் இந்த நாட்டில் ஓங்காரமிட ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி உட்பட அரசாங்க அமைச்சர்கள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பாக சர்வதேசத்திற்கு தகவல் வழங்குவோர் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் தேசத்துரோகிகள் என விமர்சிக்கின்றனர்.
இதே குற்றச்சாட்டை மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியில் இருந்தபோது அவருக்கு எதிராக அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சுமத்தியது.
1990 ம் ஆண்டு இப்போதைய அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடச் சென்றபோது மஹிந்த ராஜபக்ச மீது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இக்குற்றச்சாட்டை சுமத்தியது.
அவர்கள் ஜெனீவாவுக்கு எடுத்துச் செல்லத் தயாரான தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பொலிஸாரை ஈடுபடுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டன. இருந்தும் மஹிந்த ராஜபக்சவும் வாசுதேவ நாணயக்காரவும் ஜெனீவா சென்று தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.
1990 அக்டோபர் 25ம் திகதி பாராளுமன்றத்தில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றத்துக்கு மஹிந்த ராஜபக்ச இவ்வாறு பதிலளித்திருந்தார்.
கனம் பிரதி சபாநாயகர் அவர்களே!
இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு தூரம் சீர்குலைந்து கொண்டிருக்கின்றது என்பது தொடர்பாக இன்று இங்கேயே இந்த கெளரவமிக்க சபையிலேயே நீங்கள் கண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.
பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயக நாடொன்றில் ஜனநாயகத்தின் ஒரு இலட்சணமாகும். கருத்துக்களை வெளியிடும் உரிமை உங்களைப்போலவே எதிர்த் தரப்பினருக்கும் இருக்கின்றது.
கருத்துக்களை வெளியிடுவது அரசாங்கத்தை வர்ணித்து துதிபாடுவதற்கோ அல்லது தலைவர்களைப் போற்றி துதிபாடுவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. ஜனநாயகம் என்பது தமது எதிராளிகள் தம்மை விமர்சிக்கும் போதும் தமக்கு எதிராகப் பேசும் போதும் அதை செவிமடுக்கும் சக்தி உங்களுக்கு இருக்கவேண்டும் என்பதை இச் சந்தர்ப்பத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அதுமட்டுமல்ல, ஜனநாயகம் இந்த நாட்டில் சீரழிந்துள்ளதால் தான் இன்று வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமின்றி நாடு முழுவதும் தீப்பற்றி எரிகின்றது. உங்களது 13 வருட காலத்துக்குள் இந்த நாட்டில் ஜனநாயகம் மீதிருந்த நம்பிக்கை தவிடு பொடியானதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இன்று ஜனநாயகத்தைப் பாதுகாக்க, கருத்துக்களை வெளியிட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தடை விதித்தால். பாராளுமன்றத்தில் பேசுவதற்கு மட்டுமல்ல கருத்துக்களை வெளியிடுவதற்கும் உரிமை இருக்க வேண்டும். இன்று எனக்கு என்ன நடந்தது?
இன்று இந்த பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு நாட்டு மக்களால் வழங்கப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பேசும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தப் பார்க்கின்றனர். அன்று எம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. புலிகளுக்கு உதவ முயற்சிக்கின்றார்கள் என்றும் எம்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இருந்தும் இன்று நீங்கள் திக்குமுக்காடிப் போயிருக்கின்றீர்கள். இதோ இந்த அறிக்கையை வாசிக்கும் போது நீங்கள் மெளனம் காக்க வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள்.
இந்த நாட்டுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தும்படி நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் சென்று கூறவில்லை என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் மனித உரிமைகளை பாதுகாக்கும்படியே நாம் கோரிக்கை விடுத்தோம் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
கூட்டுத்தாபனங்களை மூடுங்கள், தொழில்களிலிருந்து மக்களை வெளியேற்றுங்கள், அரிசி, கூப்பன் புத்தகங்களை இல்லாதொழியுங்கள், அப்பாவி மக்களின் வயிற்றில் அடியுங்கள், சீனி விலையை அதிகரியுங்கள், இ.போ.சபையை தனியார் மயப்படுத்துங்கள் என்று உலக வங்கியிடம் கூற முடியுமென்றால், அப்போது அவர்களது கூற்றின்படி அம்மாதிரி இந்த அரசாங்கம் நடந்துகொண்டால் நாம் உதவி வழங்கும் நாடுகளிடம் நாட்டுக்கு உதவியளிக்கும் போது மனித உரிமைகள் தொடர்பாக ஏன் நிபந்தனை விதிக்க முடியாது' எனக் கேட்டோம். இந்த கோரிக்கையையே நாம் விடுத்தோம். இன்று அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான் ஒன்றைக் கூற வேண்டும். எமது கெளரவ அமைச்சர்தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுத்தார். கெளரவமளிக்க வேண்டிய நேரத்தில் நாம் கெளரவமளிக்க வேண்டும். எப்படியிருந்தும் அந்த அழைப்பை அவரே விடுத்தார்.
இந்த அரசாங்கம் மனித உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றால் ஜெனீவாவுக்கு மட்டுமல்ல உலகத்தில் எந்தவொரு இடத்துக்கோ அப்படியில்லா விட்டால் நரகத்துக்கோ சென்று இந்த அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அந்த உரிமைகளை பெற்றுக்கொள்ள செல்லவேண்டிய எந்தவொரு இடத்துக்கும் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம் என்பதையும் ஞாபகப்படுத்துகின்றோம். இதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அமைச்சரே எமக்குள்ள உரிமைகளை பறித்துக்கொள்ள இடமளிக்கமாட்டோம். இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
கெளரவ ஏ.எச்.எம்.அஸ்வர்:----- இராஜதுரோக வேலை செய்யாதீர்கள். இனத்துரோக வேலை செய்யாதீர்கள்
மஹிந்த ராஜபக்ச - இந்த நாட்டின் கௌரவமிக்க சபையின் உறுப்பினர்களை பொலிஸ்காரர்களைக் கொண்டு தடுத்து நிறுத்துகின்றீர்கள். கொலைகார பொலிஸ்காரர்களைக் கொண்டு தடுத்து நிறுத்துகின்றீர்கள். சோதனையிடாதீர்கள்.
நாங்கள் தங்கப் பாளங்களை எடுத்துச் செல்லவில்லை. நாங்கள் இரத்தினங்களை எடுத்துச் செல்லவில்லை. நாங்கள் வெளிநாட்டு வங்கி களை எடுத்துச் செல்லவில்லை. நாங்கள் மெனிக்திவெல போன்று திருட்டுப் பணத்தை எடுத்து செல்லவில்லை.
நாங்கள் திருட்டுப்பணத்தை எடுத்துச் சென்று பொலிஸ்காரர்களிடம் அவமானப்படவில்லை. இந்நாட்டுத் தாய்மாரின் ஓலங்களை மாத்திரமே எடுத்துச் செல்கின்றோம் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.
அதற்கு சுதந்திரம் இல்லையா? அந்த தாய்மார்களின் ஓலங்கள்தான் பன்னிரண்டு நாடுகளுக்கு கேட்டிருக்கின்றன. பன்னிரு நாடுகளின் தலைவர்கள் அந்த தாய்மாரின் ஓலங்களுக்கும் சத்தியாக்கிரகத்துக்கும் செவிமடுத்த போதும் கடவுளே இந்த அரசாங்கம் அவர்களது துன்பங்கள் குறித்து எவ்வளவு ஓலமிட்டாலும் அதை செவிமடுக்க மறுக்கின்றது.
இன்று நீங்கள் பிரச்சினைகளில் மூழ்கிக் கொண்டிருக்கின்றீர்கள். சிக்கிக்கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் மக்கள் மத்தியில் செல்லவென கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடமாடும் சேவையொன்றை ஆரம்பித்தீர்கள்.
தாயொருவர் ஓடி வந்து என்னிடம் கடவுளே நான் மயிரிழையில் தப்பினேன் எனக் கூறினார். பிள்ளையுடன் ஒரு தாய் என்னிடம் வந்தார். எனது பிள்ளையை குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்ட அதிகாரிதான் பிடித்துச் சென்றார் என இனங்கண்டு கொண்டேன் என்றார்.
வாயை மூடுங்கள். உங்களுடன் எனக்கு பேச வேண்டியது எதுவுமில்லை. கேட்டுக் கொண்டிருங்கள். அந்த தாயின் கதையை இந்த நடமாடும் சேவை குறித்து பிரசாரம் செய்யப்படுவதால் அதன் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் அடுத்த தம்பியுடன் தாயை அனுப்பி வைத்தனர்.
அந்த தாய் நடமாடும் சேவைக்கு சென்றார். அங்கு பார்த்தால் தனது மகனை அழைத்து சென்ற பொலிஸ் அதிகாரியே அங்கு நடமாடும் சேவையில் அமர்ந்து கொண்டு முறைப்பாடுகளை கேட்டுக் கொண்டுமிருக்கிறார்.
தாயும் மகனும் மூச்சிளைக்க ஓடிவந்து "கடவுளே மயிரிழையில் தப்பினோம் முறைப்பாடு செய்திருந்தால் நானும் இல்லை எனது மூத்த மகனும் இல்லை என்றார். என்ன இது? நான் நடமாடும் சேவைக்கு எதிரானவன் அல்ல. இருந்தும் குற்றம் செய்த அதிகாரியை அந்த குற்றம் குறித்து விசாரணை செய்வதென்றால் அது திருடனின் தாயிடம் ஜோதிடம் பார்ப்பது போலல்லவா?
காணாமற் போவது பற்றி நீங்கள் கூறியி ருக்கிறீர்கள் இந் நாட்டுக்கு ஜோஸிம் மற்றும் கொள்ளையர்கள் வந்து அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பணம் கொடுத்தால் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி இருக்கும் ஹோட்டல்கள் அனைத்தையும் கொடுத்து விடுகின்றீர்கள் என்ன?”
நீங்கள் கோயில்களுக்கு வழங்கியுள்ள இடம் என்னவென்பது எமக்கே தெரியும். மோசக்காரர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கெஸினோ விளையாட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் தினந்தோறும் நடக்கும் பூஜை.
நீங்கள் எல்.ரீ.ரீ.ஈ. காரர்களுடன் கலதாரி ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தும்போது நாங்கள் எதிர்த்தோம் என கூறினீர்கள். எமக்கு தெரியும் என்ன நடக்கும் என்று.
ஐக்கிய தேசியக் கட்சியை போய் இந் நாட்டிலுள்ள தமிழ் மக்களை நாம் ஏமாற்றத் தயாராக இல்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? பேச்சுவார்த்தைக்கென அழைத்து அவர்களுக்கு ஆயுதம் வழங்கி வசதிகளை செய்து கொடுத்து தாய்லாந்து பெண்களையும் வழங்கியிருப்பீர்கள்.
இன்று மொஸாட் குறித்து ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாம். அது குறித்து ஆணைக்குழு நியமிக்கப்படும் போது இந்த அமைச்சரவையில் இருக்கும் இங்கு இருந்த மூன்று அமைச்சர்களுக்கு கூட்டுப் பொறுப்பு என்பதன் கீழ் வெளியே செல்ல வேண்டியேற்படுமா? எனக் கேட்க விரும்புகிறேன்.
அப்படியானால் யார் பொறுப்புக் கூறுவது? எனக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது. மொஸாட் இயக்கத்தினரை அழைப்பித்து எல்.ரீ.ரீ.ஈ. காரர்களுக்கு பயிற்சியளித்து இந் நாட்டின் சிங்கள் இளைஞர்களை கொன்றொழிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து நீங்கள் தான் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக நாங்கள் தாய்மார் குறித்து பேசுகின்றோம். தென் பகுதியில் பிள்ளைகள் காணாமற் போன தாய்மார் காணாமற் போன 600 பொலிஸாரின் தாய்மார் எமது பிள்ளைகளைத் தேடித் தரும்படி எமக்கு அறிவித்துள்ளனர். காணாமற்போன பொலிஸாருக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி நான் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழில் எஸ். கணேசன்
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcit5.html

Geen opmerkingen:

Een reactie posten