2014ம் ஆண்டு ஜூலை 19 மற்றும் 20ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34வது வருட சிறப்பு மகாநாட்டில் பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34வது வருட சிறப்பு மகாநாட்டில் பேராளர்களால் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்கள்
01. யுத்ததின் போதும் யுத்தம் முடிந்து கடந்த 5 ஆண்டுகளிலும் வடக்கு கிழக்கில் பெருமளவு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியன திட்டமிட்டே அரச படைகளாலும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளாலும் இடித்தழிக்கப்பட்டு வருகின்றது.
பல கோவில்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டுவிட்டன. பட்டப்பகலில் மக்கள் கண்முன்னே இராணுவ பாதுகாப்புடன் புத்தபிக்கு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிள்ளையார் விக்கிரகத்தை பெயர்த்தெடுத்து செல்லுமளவிற்கு சிங்கள பௌத்த அடிப்படை வாதமும் அதற்கான அரசின் ஆதரவும் வளர்ச்சியடைந்துள்ளது.
இவ்வகையில் பழம் பெருமை வாய்ந்த மூதூர் அகஸ்தியர் ஸ்தாபனம் என்று சொல்லக் கூடிய இந்துக் கோவில் சிங்கள பௌத்த தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்டு விக்கிரகங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று இராவணனால் உருவாக்கப்பட்டதென்ற வரலாற்று பெருமை கொண்ட, தமிழ் மக்கள் தமது உறவுகளின் பிதிர் கடன்களை நிறைவேற்றுகின்ற திருகோணமலை கன்னியா வெந்நீருற்றும், பௌத்த பிக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட இரு புராதன ஸ்தலங்களதும் வரலாற்றுப் பெருமையும் அவை இந்துக்களது புண்ணிய ஸ்தலங்கள் என்பதனையும் கருத்தில் கொண்டு இந்து நிறுவனங்கள் இவற்றை புனரமைக்க அனுமதியளிப்பதுடன், பௌத்த பிக்குகள் இவற்றில் தலையீடு செய்வதை நிறுத்தும் வண்ணம் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மகாநாடு ஏகமனதாக கோரி நிற்கிறது. அத்துடன் ஏனைய மத ஸ்தலங்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பாதிப்பை நிறுத்துவதற்கும், ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இம்மகாநாடு கோருகின்றது.
02. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும், இலங்கை ஜனாதிபதி மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்களும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மாண்புமிகு பான் கீ மூன் அவர்களும் இணைந்து ஓர் கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதன் பிரகாரம் இடம்பெயர்ந்த மக்கள் ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக தமது சொந்த மண்ணில் மீளக்குடியேற்றப்படுவார்கள் என்றும், யுத்தத்தில் காணாமல் போனவர்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை நடாத்தி பொறுப்பு கூறும் நடவடிக்கையை இலங்கை அரசு பூர்த்தி செய்யுமென்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் 5 வருடங்கள் கடந்து விட்ட சூழ்நிலையில் இன்னும் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படவுமில்லை. பொறுப்பு கூறும் நடவடிக்கைக்கான முயற்சி எடுக்கப்படவுமில்லை. யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, கிளிநொச்சியின் பரவிப்பாஞ்சான் மற்றும் பல கிராமங்கள், முல்லைத்தீவின் கேப்பாப்புலவு இன்னும் பல கிராமங்கள், முள்ளிக்குளம் உட்பட மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்கள் வவுனியாவில் பல கிராமங்கள் மேலும் திருகோணமலையின் மட்டக்களப்பின் புனானை கிழக்கிலும், கெவுளியாமடு மற்றும் கருங்காலியடிச் சோலை போன்ற இடங்களிலும் சம்பூரிலும் இன்னும் மக்கள் பூரணமாக குடியேற்றப்படவில்லை.
ஐ.நாவின் உள்ளக இடம்பெயர்ந்தோர் வழிக்காட்டு நெறியின் அடிப்படையில் செயலாளர் நாயகத்தினதும், இலங்கை ஜனாதிபதியினதும் கூட்டு அறிக்கைக்கு இணங்க இம்மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கவும், ஊக்கப்படுத்தவும் ஐ.நா செயலாளர் நாயகம் ஓர் பிரத்தியேக அதிகாரியை நியமிக்க வேண்டுமென இம்மகாநாடு கோரிக்கை விடுக்கின்றது.
03. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வளமிக்க பொது மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்ததன் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேற முடியாமலும், தமது வாழ்வாதரங்களை இழந்துமுள்ளனர். இதில் கணிசமான பகுதி மக்களின் மீள்குடியேற்றம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பின்போடப்பட்டு வந்துள்ளது. யுத்தம் முடிந்து 5 வருடங்கள் முடிந்துவிட்ட சூழ்நிலையிலும், கண்ணிவெடிகள் 95 வீதம் அகற்றப்பட்டுள்ள சூழ்நிலையிலும், இராணுவத்தினரை பொது மக்களின் காணிகளை விட்டு வெளியேற்றுவதன் மூலம் மாத்திரமே இம்மக்களை மீள் குடியேற்ற முடியுமென்பதால் இக்காணிகளிலிருந்து இராணுவத்தை அகற்றி மக்கள் அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இம் மகாநாடு வற்புறுத்துகின்றது.
04. பொது மக்களுக்கு சொந்தமானதும், தமிழீழ விடுதலைப் புலிகளால் அபிவிருத்தி செய்யப்பட்டதுமான பல்வேறு தென்னந் தோட்டங்கள், முந்திரிகைத் தோட்டங்கள், தேக்குமரத் தோட்டங்கள் மற்றும் விவசாயப் பண்ணைகள் போன்றவற்றை இராணுவம் தன் வசப்படுத்தியுள்ளது. இவ்வாறான தனியாருடைய தோப்புக்கள், தோட்டங்கள் போன்றவற்றை அதன் உரிமையாளரிடம் கையளிப்பதுடன் ஏனைய பண்ணைகளை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க வேண்டுமெனவும் இம்மகாநாடு வலியுறுத்துகின்றது.
05. வலிகாமம் வடக்கு, முத்தையன்கட்டு ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான மாடுகளை இராணுவம் தனக்கான பண்ணைகளில் வளர்த்து வருவதுடன், இப்பண்ணைகளில் இருந்து கறக்கும் பாலை இராணுவ முகாம்களுக்கும், நெஸ்லே கம்பனிக்கும் விற்றும் வருகின்றது. இம்மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பியிருந்த பொதுமக்கள் பஞ்சைகளாய், பராரிகளாய் வாழ்வாதாரம் ஏதுமின்றி அல்லல்படுகின்றனர். இராணுவம் இம்மாடுகளை அதற்கான சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இம்மகாநாடு வற்புறுத்துகின்றது.
06. 10 இலட்சம் மக்கள் வாழ்கின்ற வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஆயுதப்படையினர் நிலை கொண்டிருப்பதும், குழந்தைப் பிள்ளைகளின் நிகழ்வுகளில் இருந்து சகல பொது நிகழ்வுகளுக்கும் தாம்மை அழைக்க வேண்டுமென வற்புறுத்துவதும், நிர்வாகத்தின் சகல மட்டங்களிலும் தலையீடு செய்வதும், அரசியல் கூட்டங்களிற்கு மக்களை போகவிடாமல் தடைசெய்வதும், ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுவோரை மிரட்டுவதுமான நடவடிக்கைகளிலேயே இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அச்சுறுத்தப்படுவதுடன், மக்களுடைய ஜனநாயக சூழலும், இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. எனவே மேற்கண்ட பாதிப்புக்களின் தாக்கங்களை கவனத்தில் எடுத்து வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென இம்மகாநாடு கோருகின்றது.
07. 2009, 2010 ல் நடைபெற்றிருக்க வேண்டிய வடக்கு மகாணச்சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பின்போடப்பட்டு இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக 2013 செப்ரெம்பரில் தேர்தல் நடைபெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து 8 மாதங்களாகியும் கூட வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை அல்லது அதிகாரங்களை செயற்படுத்த விடாது தடை போடுகின்றது என்பதை இந்த மகாநாடு வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கின்றது.
ஆளுநரும், அரசும், மாகாணக் கடமைகளிலும், நிர்வாகங்களிலும் தலையிடுவதுடன், முதலமைச்சரின் நிர்வாகத்திற்கு சமாந்தரமாக அல்லது மேலாக, ஆளுநரும் ஒரு நிர்வாகத்தை நடத்துகின்ற போக்கையும் இம்மகாநாடு கவனத்தில் எடுத்து தனது கண்டனங்களையும் பதிவு வெய்து கொள்கிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையானது இனப்பிரச்ச்சினை தீர்விற்காகவே இந்திய இலங்கை அரசுகளால் உருவாக்கப்பட்டது என்பதனை நினைவுறுத்தும் அதேசமயம், அச்சபைக்கான அதிகாரங்கள் மறுதலிக்கப்பட்டு, அர்த்தமற்ற சபையாக அவை ஆக்கப்பட்டிருப்பதை இம்மகாநாடு வேதனையுடன் சுட்டிக்காட்டுவதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மகாணசபைகள் ஆளுநரினதோ, அரசினதோ தலையீடுகள் இல்லாமல் சுதந்திரமாக இயங்குவதை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டுமென இம்மகாநாடு கோருவதுடன், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு உரித்தான அதிகாரங்களை அரசு சட்டபூர்வமாக கையளிக்க வேண்டும் எனவும் இம்மகாநாடு கோருகின்றது.
08. நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் எறத்தாழ 70000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா அறிக்கை ஒன்று கூறுகின்றது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் தொடர்ச்சியாக எடுத்து வரும் தமிழ் இன விரோத நடவடிக்கைகளான, இராணுவ குடியேற்றம், சிங்களக் குடியேற்றம், தமிழ் மக்களுக்குரித்தான காணிகளையும், அரச காணிகளையும் பறித்தெடுத்து இராணுவம் மற்றும் சிங்கள விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கு கொடுப்பதும், சிங்கள பௌத்த மக்கள் இல்லாத வடக்கு-கிழக்கின் பல்வேறு இடங்களில் பௌத்த ஆலங்களை அமைப்பதும், அங்கு இராணுவத்தினர் பௌத்த பண்டிகைகளை நடாத்துவதும், இதற்கு தமிழ் வர்த்தகர்களிடமிருந்து பலாத்காரமாக நிதி வசூல் செய்வதும், இவ்வாறான நிகழ்வுகளுக்கு மக்களை வற்புறுத்தி அழைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
மேலும்; இராணுவ ஆக்கிரமிப்பும், அச்சுறுத்தல்களும் மக்களை தொடர்ச்சியாக நாட்டை விட்டு ஓடவே வழியமைக்கின்றது. பல ஆயிரம் மக்களை கொன்றொழித்து ஓர் இனப்படுகொலையை செய்த ஓர் அரசாங்கம் மக்களை நாட்டை விட்டு விரட்டுவதனூடாக தொடர்ச்சியான ஓர் இன அழிப்பில் ஈடுபட்டு வருவதாக இந்த மகாநாடு சிறீலங்கா அரசு மீது குற்றஞ்சாட்டுவதுடன், அதற்கு எதிராக தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு சொல்வதைப் போல் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சிப்பது உண்மையானதாக இருக்க வேண்டுமெனில், மேற்கண்ட தமிழ் இனவொழிப்பு நடவடிக்கைகளை இவ்வரசு கைவிட வேண்டுமென இம்மகாநாடு வற்புறுத்துகின்றது.
09. இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பில் இருந்து தமிழர்கள் காப்பற்றப்பட வேண்டுமாயின், தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் வரலாற்று ரீதியாக, ஒரு தேசமாக, தேசிய இனமாக வாழ்கின்றார்கள் என்பதும், சிங்கள மக்களும், தமிழ் மக்களும், மொழியால், மதத்தால், கலாச்சாரத்தால் வேறுபட்டவர்கள் என்பதையும், அவர்கள் தமக்கென தனியான மொழி, தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் போன்றவற்றை கொண்டவர்கள் என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், அதனடிப்படையில் தமிழ் மக்களுக்குரித்தான பகிரப்பட்ட இறையாண்மை மற்றும் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை என்பதன் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டுமெனவும் சர்வதேச சமூகத்தை இம்மகாநாடு கோருகின்றது.
10. வடக்கு கிழக்கை இராணுவ மயப்படுத்தல், மாகாணசபைக்கான அதிகாரங்களை பகிர மறுத்தல், ஆளுநர் ஊடாக மத்தியின் அதிகாரங்களை திணித்தல் போன்ற நடவடிக்கைகளினூடு அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகங்களை முடக்க முயற்சிக்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாண நிர்வாகத்தை முடக்குவதற்கான முழு நடவடிக்கைகளையும் ஜனாதிபதியும் அரசும் எடுத்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்தும் விதத்திலும், அடக்கு முறைகளுக்கு எதிராக பலம்மிக்க ஒரு ஸ்தாபனத்தை தோற்றுவிக்கும் ஒரு முகமாகவும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சகல துறைசார் பிரதிநிதிகளையும் உள்ளடக்கும் விதத்தில் தமிழ்த் தேசிய சபை ஒன்றை உருவாக்க வேண்டுமென இம்மகாநாடு பிரேரிக்கின்றது.
இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் பாலஸ்தீன தேசிய சபை போன்று தமிழ்த் தேசியச் சபை ஒன்றின் தேவையும் அவசியமும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டுவதுடன் இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டுமெனவும் இம்மகாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது.
11. காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை அவதானிக்கின்ற பொழுது, அது மக்களை முட்டாளாக்குவதும் அவர்களது கோரிக்கைகளை மலினப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் இக்கொமிசன் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அது மாத்திரமல்லாமல் காணாமல் போனோரின் மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர்களது உறவினர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளை இம் மகாநாடு கண்டிப்பதுடன், மிக நீண்ட காலமாக எவ்வித நடவடிக்கைகளும் இல்லாமல் சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் இம்மகாநாடு கோருகின்றது.
12. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற பக்கச்சார்பான நிர்வாக அமைப்பு முறை, எல்லைகள் நிர்ணயம் போன்ற செயற்பாடுகளை நிறுத்துமாறும், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுமாறும் கிழக்கு மாகாணசபையை இம்மகாநாடு கோருகின்றது.
13. இலங்கையில் தமிழ் பேசும் 25 வீத மக்கள் உள்ளனர். ஆனால் ஆசிரியர் சேவை தவிர்ந்த நிர்வாக சேவைகளில் 5 வீகிதத்துக்கும் குறைவானவர்களே இன்று காணப்படுகின்றனர். உயர்கல்வியிலும் அரச சேவைகளுக்கு ஆளெடுப்பதிலும் அரச சேவைகளுக்கு ஆளெடுப்பதிலும் அரசு பின்பற்றிவரும் மோசமான பாரபட்சமான கொள்கைகளே இந்நிலைமைக்கு காரணம் என இம்மகாநாடு குற்றம் சுமத்துகின்றது. எனவே அனைத்து சேவைத்துறைகளிலும் குறைந்தபட்சம் சனத்தொகை விகிதாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆளெடுப்பு கொள்கை வகுக்கப்பட வேண்டுமென அரசை வலியுறுத்துகின்றது.
14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென திருகோணமலையில் திரு.சம்பந்தன் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலே நடைபெறுவதாக தோன்றுகின்றது. இப்பதிவு என்ற விடயம் விரைவு படுத்தப்பட வேண்டும் என இம்மகாநாடு ஏகோபித்த ரீதியில் வேண்டுகோள் விடுக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcktz.html
Geen opmerkingen:
Een reactie posten