தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

சீனர்களின் தளமாகும் சீனக்குடா !

சீனக்குடாவில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் விவகாரத்தில், அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்றிருக்கிறது.
சீனக்குடாவில் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பான விவகாரம், கடந்த வாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருந்தது.
திருகோணமலையில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி அளிப்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், அது 1987ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
அதைவிட, இலங்கை விமானப்படையிடம் உள்ள 34 சீன விமானங்களையும் பராமரிக்க ஆண்டுக்கு ஒரு மில்லியன் டொலரே செலவாகிறது என்றும், அதற்காக ஏன் 40 மில்லியன் டொலர் செலவில் பராமரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தக் காரியத்தையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்று தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி, சீனக்குடாவில் தான், இந்த விமானப் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
அமைச்சர் பீரிஸ் வெளியிட்ட தகவலின்படி, கட்டுநாயக்க, திருகோணமலை, மத்தள ஆகிய மூன்று விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றில், இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால், சீனக்குடாவில்தான் அது அமைக்கப்படும் என்பது இன்னமும் உறுதியாகவில்லை, இலங்கை அரசாங்கம்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்று பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.
மறுநாள், இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அங்கு கருத்து வெளியிட்ட பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, திருகோணமலையில் தான், இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டதுடன், அந்தப் பராமரிப்பு நிலையத்தை இலங்கை விமானப்படையே நிர்வகிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதாவது சீன நிறுவனம் இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை உருவாக்கினாலும், அதனை நிர்வகிக்கப் போவதும், அங்கு பணியாற்றப் போவதும், இலங்கை விமானப்படையினர் தான் என்று கூறி சமாளிக்க முற்பட்டார்.
அவர்களுக்கான பயிற்சிகளை அளிக்கப் போவது, சீன நிபுணர்கள் தான் என்பதையும், முதற்கட்டமாக அந்தப் பணியே இடம்பெறும் என்றும் அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அந்தப் பயிற்சி அளித்தல் பணி எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஒரு பக்கத்தில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இன்னமும் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இடம் தெரிவு செய்யப்படவில்லை என்று கூறுகின்ற அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரோ, சீனக்குடாவில் தான் அது அமைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்த இழுபறியைக் கொண்டே இந்த விவகாரத்தில் அரசாங்கம் முன்னுக்குப் பின் முரணான விடயங்களைக் கூறுகிறது என்பது உறுதியாகியுள்ளது.
அதுபோலவே, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எதற்கும் இலங்கை இடமளிக்காது என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் கூட, இந்தியாவுக்கு அச்சுறுத்தலானது அல்ல என்று தான் அரசாங்கம் கூறி வருகிறது.
ஆனால், சீனாவின் முத்துமாலை வியூகத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகமும் ஒன்றாகவே குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையே, சீனக்குடாவில் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்பட்டது குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தம்மிடம் பிரச்சினை எழுப்பியதாக வெளியான செய்திகளை பீரிஸ் மறுத்திருக்கிறார்.
சாதாரணமாக, நட்பு ரீதியாகவே அதுபற்றி சுஸ்மா சுவராஜ் விளக்கம் கேட்டார் என்றும், அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
அவ்வாறாயின், சீனக்குடாவில் விமானப் பராமரிப்பு நிலையத்தை சீனா அமைப்பதை இந்தியா தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகப் பார்க்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் ஒருபோதும், அந்தக் கவலை இந்தியாவுக்கு ஏற்படாது என்று கூறமுடியாது.
ஏனென்றால், சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவே நீண்டகாலக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
சம்பூரில் இலங்கையுடன் கூட்டு முயற்சியாக அனல் மின் நிலையத்தை அமைக்கப் போகிறது.
இவ்வாறு இந்தியாவின் நலன்களைப் பேணுகின்ற ஒரு கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில், சீன பாதுகாப்பு நிலை ஒன்று அமைவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.
ஆனால், இந்த விடயத்தில், இந்தியாவுக்கு சரியான தகவல்களை இலங்கை பரிமாறுகிறதா என்ற சந்தேகமும் உள்ளது.
ஏனென்றால், இம்மாத நடுப்பகுதியில், இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா, இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவர் தனது பயணத்தின் கணிசமான நேரத்தை, திருகோணமலையில் கழித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனக்குடாவில் உள்ள விமானப்படைப் பயற்சி நிலையத்தில் அவர் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த விமானப்படைப் பயற்சி நிலையத்துக்கு அருகில்தான், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க சீனாவின் வான் பொறியியல் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அங்கு பணியாற்றவுள்ள. சீனப் பொறியியலாளர்களுக்காக, மாபிள் பீச் பகுதியில், ஒரு தங்குமிடத் தொகுதியும் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது விமானப்படையின் விடுதி அமைந்துள்ள, மாபிள் பீச் பகுதிக்கும், இந்திய விமானப்படைத் தளபதி சென்றிருந்தார்.
துறைமுகப் பகுதியை படகு மூலம், சென்றும் பார்வையிட்டிருந்தார்.
எனவே, சீனக்குடா விடயத்தில் இந்திய பாதுகாப்புத் தரப்பு மெத்தனமாக இருக்கிறது என்று கருதக் கூடாது.
ஆனால், இந்திய விமானப்படைத் தள பதி கொழும்புக்கு வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே, இலங்கை விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக சீனாவுக்குச் சென்று திரும்பியிருந்தார்.
எனினும், அவரது பயணம் தொடர்பாக தகவல்களை, இந்திய விமானப்படைத் தளபதி கொழும்பில் இருந்து திரும்பும் வரை இலங்கை அரசாங்கமோ விமானப்படையோ வெளியிடவில்லை.
கிட்டத்தட்ட பத்து நாள்கள் கழித்தே அது பற்றி அறிவிக்கப்பட்டது.
சீனாவில், பயணம் மேற்கொண்டிருந்த போது, கடந்த 10ம் திகதி சீன விமானப்படைத் தளபதி ஜெனரல் மா சியாவோதியனுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக.
அவர்களின் பேச்சுக்களில் சீனக்குடா விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
ஏனென்றால், 2011ம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன விமானப்படைத் தளபதியான ஜெனரல் மா சியாவோதியன் திருகோணமலைக்கும் சென்றிருந்தார்.
அவர் சீனக்குடாவின் அமைப்பை நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னர் தான், அங்கு தளம் அமைக்க சீனா அடிப்போட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, விமானப்படைத் தளபதி, எயர் மார்ஷல் கோலித குணதிலக தனது சீனப் பயணத்தின் போது, சீனக்குடாவில், விமானப் பராமரிப்புத் தளத்தை நிறுவத் திட்டமிட்டுள்ள சீன வான் பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத்தாபனத்துக்கும், சென்றிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆக, சீனக்குடாவில், சீன நிறுவனத்துக்கு தளம் அமைக்க இணங்கப்பட்டு விட்டது என்பது உறுதியாகி விட்ட போதும், இந்த விவகாரம் பிரச்சினையாக்கப்படாமல் இருப்பதற்காக, முன்னுக்குக் பின் முரணான தகவல்களை அரசாங்கம் வெளியிடுகிறது.
இலங்கை விமானப்படையிடம் மொத்தமாக உள்ள 160 விமானங்களில், சீனத் தயாரிப்பு விமானங்கள், வெறும் 34 மட்டுமே உள்ளன.
அதுவும், சீனத் தாயாரிப்பு விமானங்களின் பராமரிப்புச் செலவினங்களை விட, அமெரிக்க, ரஷ்யத் தயாரிப்பு விமானங்களின் பராமரிப்புக்கு விமானப்படை அதிகளவு பணத்தைச் செலவிடுகிறது,
ஏனென்றால், அவற்றைப் பராமரித்து, திருத்தியமைக்கவோ, மீளப்புனரமைக்கவோ, அமெரிக்காவுக்கோ ரஷ்யாவுக்கோ தான் அனுப்ப வேண்டியுள்ளது.
ஆனால், சீன விமானங்களை, பாகிஸ்தானில் வைத்தே புனரமைக்கும் வசதிகள் உள்ளன. அதற்கு ஆகின்ற போக்குவரத்துச் செலவு, ரஷ்யா, அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மிக மிகக்குறைவே.
இருந்தாலும், அரசாங்கம், சீனாவின் விமானங்களைப் பராமரிப்பதற்கான நிலையத்தை மட்டும் அமைப்பதற்கு முக்கியத் துவம் கொடுப்பதும், அது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிடுவதும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் மீது சந்தேகம் கொள்ளவே வைக்கிறது.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciwy.html

Geen opmerkingen:

Een reactie posten