தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

சீனக்குடாவில் சீனாவின் விமானத்தளம்: இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?

திருகோணமலை நகரில் இருந்து கிண்ணியா நோக்கி 8 கி.மீ தூரத்திலும் கிண்ணியாவில் இருந்து 5 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது சீனக்குடா. இங்குதான் சீனக்குடா விமானப் படைத்தளம் உள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கான விமானப் படையினரின் மிகவும் முக்கியமான விமானப் படைத்தளம் இதுதான். சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த விமானப் படைத்தளத்தில் போர் விமானங்களான கிபிர் மற்றும் ஏனைய யுத்த விமானங்கள் இறங்கும் வசதியுள்ளது.
மேலும் இந்த விமானப் படைத் தளத்தை விஸ்தரிப்பதற்கான இடவசதிகளும் உள்ளது.
புலிகள் மீதான இறுதி யுத்தத்தை ஆரம்பித்த இலங்கை இராணுவத்தினர் பாகிஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்ட மல்டி பரல் தாக்குதலை மூதூர், சம்பூர் நோக்கி ஆரம்பித்த போது இந்த சீனக்குடா விமானப் படைத் தளத்தில் இருந்துதான் ஏவப்பட்டது.
மற்றும் மாவிலாறு நோக்கியும் இந்த தளத்தில் இருந்துதான் விமானத் தாக்குதலும் கச்சிதமாக நடைபெற்றது. இந்த சீனக்குடா விமானப் படைத்தளத்தில் இருந்துதான் பாகிஸ்தானின் மல்டி பரல் தாக்குதல் பயிற்சியை பாகிஸ்தான் இராணுவத்தினர் இலங்கை இராணுவத்தினருக்கு இரகசியமாக அளித்துள்ளதாக ஒரு உளவுத் தகவலும் உள்ளது.
இப்போதும் இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் ஏனைய இராணுவப் பயிற்சிகளும் கடந்த காலங்களாக இருந்து இன்று வரையும் நடைபெற்று வருகின்றது. தற்போதும் சுமார் 450 விமானப் படைச் சிப்பாய்கள் 6 மாதங்களுக்கொரு தடவை பயிற்சி பெற்று வெளியாகின்றனர்.
இங்கு வருடாந்தம் இரண்டு அணிப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றது. கிழக்கின் முக்கியமான விமானப் படைப் பயிற்சி இங்குதான் நடைபெற்று வருகின்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமானப் படைத்தளத்தை விட மிகவும் முக்கியமானது இந்த சீனக்குடாத் தளம். தற்போது இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து வாரத்தில் நான்கு நாட்கள் இரத்மலானை- சீனக்குடா- பலாலி- இரத்மலானை ஆகிய மூன்று வழிப் பயணத்தை விமானப் படையினர் பிரயாணிகளுக்காக நடத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட தளம்தான் விரைவில் சீன விமானப் படையினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. இது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை ஆணித்தரமாக எத்தி வைப்போம்.
தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணி
சீனக்குடா விமான நிலையம் அமைந்துள்ள காணி என்பது தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணியாகும்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது குண்டுத் தாக்குதல்களுக்குப் பயந்து மக்கள் தானாக வெளியேறிய பின்பு 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கபப்ட்ட சீனக்குடா விமான நிலையம் இறுதி யுத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கிமான விமானத் தளமாகப் பார்க்கப்படுகின்றது.
தற்போது ஒவ்வொரு ஆண்டும் சீனக்குடா விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு சீனர்கள் திருகோணமலையில் மிக நீண்ட காலம் வாழ்ந்துள்ளார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக சீனக்காரர்கள் திருமலையை விட்டு வெளியேறி விட்டார்கள். அதே போன்று சீனக்குடாவிலும் சீனர்கள் வாழ்ந்துள்ளார்கள். இப்படியாக சீனக்குடாவுக்கும் சீனர்களுக்கும் ஒரு தொடர்பு இருந்துள்ளது.
சீன விமானங்கள் சீனக்குடாவில்
500 கோடி ரூபா செலவில் 44 போர் விமானங்களைப் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் சீனக்குடா விமான நிலையம் சீனாவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அதாவது இலங்கை விமானப் படைக்கான விசேட பராமரிப்பு என்ற போர்வையில் சீனக்குடா விமான நிலையம் சீனாவிடம் இலங்கை கையளித்த பின்பு சீனாவின் யுத்த விமானங்கள் மற்றும் சீனாவின் உளவு விமானங்கள் நேரடியாக சீனக்குடாவில் வந்திறங்கும்.
சீனக்குடாவில் அமையவுள்ள சீனாவின் விமானத்தளம் இந்தியாவுக்கு பெருத்த அச்சுறுத்தல் என்பதுடன் இந்தியாவை குறி வைத்து சீனாவின் உளவு நடவடிக்கைகள் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை எனலாம்.
இந்தியாவுக்கு எதிரான எதிரிகள் இலங்கையில் பெருகி விட்டார்கள். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருகி விட்டது.
சீனாவின் போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் நேரடியாக சீனாக்குடாவில் மட்டுமல்லாது பாலாலி மற்றும் இரத்மலானை ஆகிய விமான நிலையங்களிலும் வந்திறங்கும். சீனா நேராக தென் இந்தியாவின் கரையோரப் பகுதிகளை கண்காணித்து தனது உளவு வேலைகளைப் பார்க்கும்.
இப்படியாக இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே இந்த சீனக்குடா விமான நிலையம் அமையப் போகின்றது. இந்தியாவின் புதிய அரசு தனது உள்நாட்டுப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திவருகின்றது.
ஆதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு புதிய உள்நாட்டுப் பாதுகாப்புக் கருதி ஆயிரம் கோடி ரூபாவை உள்நாட்டுப் பாதுகாப்புக்காக ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை சீனாவுக்குத் தளம் அமைத்துக் கொடுத்துள்ளதானது இலங்கை இந்தியாவை ஒரு விதமான அச்சுறுத்தல் பாணியிலான நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது. காரணம் இலங்கை அரசு உள்நோக்கம் கொண்டு சீனாவுக்குத் தளம் அமைத்துக் கொடுத்துள்ளதானது நரேந்திர மோடிக்கும் ஒரு சவாலான விடயமாகவே மாறியுள்ளது.
நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின் போது இந்தியா என்ற வலிமை மிக்க நாட்டை காங்கிரஸ் கட்சி பலவீனமான நாடாக மாற்றி விட்டது என்று தனது சகல தேர்தல் மேடைகளிலும் முழங்கி வந்தார். ஆனால் இப்போது மோடியின் ஆட்சியின் கீழ் மேலும் பலவீனமாக மாறி விட்டதே.
சீனா சகல வழிகளிலும் இந்தியாவைச் சுற்றி பலமான பாதுகாப்பையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தியா கைகட்டிப் பாத்துக் கொண்டிருப்பது மேலும் மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலான விடயம் என்பதை உறுதிபடச் சொல்ல முடியும்.
இந்தியா சீற்றம்
சீனாவுக்கு சீனக்குடா விமான நிலையம் வழங்கியதனால் இந்தியா, இலங்கை மீது சீற்றம் கொண்டுள்ளது. இந்தியா தனது கண்டனத்தையும் கவலையையும் இந்தியா இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கண்டனத்தை தெரிவிப்பதற்காக இந்தியாவின் விமானப் படைத் தளபதியே கொழும்பு வந்து ஜனாதிபதியிடம் இந்தியாவின் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துளார்.
இந்தியாவின் விமானப்படைத் தளபதி எயார் சிப் மார்ஷல் அருப் ராஹா கடந்த வாரம் கொழும்பு வந்து ஜனாதிபதி மஹிந்தர், பாதுகாப்பச் செயலர் கோத்தபாய, வெளிநாட்டமைச்சர் பீரிஸ், இலங்கை விமானப்படைத் தளபதி மார்ஷல் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் தயா ரத்நாயக்க ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க மாட்டோம் என்று இலங்கைத் தரப்பால் இந்திய விமானப் படைத் தளபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டுப் பாதுகாப்பு தொடர்பிலும் இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்துள்ளதாக இந்திய தரப்பால் சொல்லப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் புதிய விமானப் படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள அருப் ராஹா தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இலங்கைக்கே வந்து போயுள்ளார். இவரது இலங்கைப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே இந்திய தரப்பால் பார்க்கப்படுகின்றது.
தற்போது இந்தியாவின் சீற்றத்தைத் தணிப்பதற்காக இலங்கை அரசு வடக்கில் பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கும் பயிற்சி வழங்கும் ஒரு தளமாக வழங்குவதற்கான பேச்சளவிலான பேச்சு வார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக சில இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பதற்கு இந்திய தரப்பில் நம்பிக்கையில்லை என்பது எமது கணிப்பு. காரணம் இலங்கை மீது இந்தியா நாட்டமை காட்டக் கூடிய காலம் கைநழுவி விட்டது.
ஏனென்றால் சீனர்களும் இலங்கைப் பௌத்தர்களும் மதத்தால் ஒன்று அதனால் என்னதான் இந்தியா இலங்கைக்கு வாரி வழங்கினாலும் இலங்கை சீனாவின் பக்கம்தான் நிற்கும்.அந்தளவு இலங்கை சீனாவின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளது.
இலங்கை- இந்திய ஒப்பந்தம் மீறல்
சீனக்குடாவில் சீனாவின் தளம் அமைப்பது சம்மந்தமான தகவல்களை இந்தியாவுக்கு வழங்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிசிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டுள்ளார்.
சீனக்குடாவில் சீனாவின் விமானத் தளம் அமைப்பதோ அல்லது சீனாவின் களம் அமைப்பதோ 1987 ஆம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று இந்தியா இலங்கையிடம் தனது கண்டனம் மூலமாகத் தெரிவித்துள்ளது.
1987 ஆம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கையின் எந்தவொரு துறைமுகங்களும் இந்தியாவுக்குத் தெரியாமல் வெளிநாடுகளுக்கு எந்தவொரு தேவைக்கும் பயன்பாட்டுக்கும் வழங்கக் கூடாது பாவிக்கக்கூடாது என்று உள்ளது.
இந்த ஒப்பந்தமானது அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தை தன்வசம் எடுப்பதற்கான முயற்சியொன்றை மேற்கொண்ட போது இந்தியா என்ற ஆசியச் சண்டியன் இலங்கைக்கு இந்த ஒப்பந்தம் என்ற கடிவாளத்தையிட்டது. ஆனால் இலங்கையின் வாதம் என்பது துறைமுகம்தானேயொழிய விமான நிலையம் அல்ல என்ற வாதத்தை இலங்கை இந்தியாவிடம் முன்வைத்தள்ளது.
ஆனால் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை எப்பவோ இலங்கை மீறி விட்டது.அதாவது ஹம்பாந்தோட்டையில் சீனாவின் உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கபட்டதோ அப்போதே இலங்கை, இந்திய ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. இப்போது இரண்டாவது மீறலாக சீனக்குடா விமான நிலைய சம்பவம் மாறியுள்ளது.
தமிழர்களைப் பழிவாங்கப் போய் பாதுகாப்பைக் கோட்டைவிட்ட இந்தியா
இலங்கையின் வடகிழக்குப் பகுதி என்பது இந்தியாவின் பாதுகாப்புப் பிரதேசம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இந்தியா எப்போதும் தனது உள்நாட்டுப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
விசேடமாக பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் தாக்குதல் முயற்சிகளை முறியடிப்பதில் எப்போதும் கண்ணாகவே உள்ளது. ஆனால் இலங்கையில் மிகவும் முக்கியமான அச்சுறுத்தல் வரப்போகின்றதே என்ற விடயத்தில் இந்தியா இன்னும் கோட்டை விட்டுக் கொண்டே வருகின்றது.
ஒரு ராஜீவ் காந்தியின் உயிருக்காக ஒரு இனத்தையே அழித்த அன்னை சோனியா காந்தி, தனது ஆட்சியில் கணவரைக் கொலை செய்த புலிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் 150 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஈழத் தமிழர்களைப் பழிவாங்கினாரே தவிர இந்தியாவின் பாதுகாப்பில் பின்விளைவுகள் பற்றிச் சிந்திக்காமல் விட்டது இந்தியா.
இப்போது சீனா இலங்கையை தனது கைக்குள் போட்டுக் கொண்டு கடல் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாகவும் இந்தியாவை சீனா நெருங்கி விட்டது.
சீனாவுடன் நெருங்கி வரும் இலங்கை
சீனாவுடன் இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடன் கடல்வழிப் பட்டுப் பாதை வர்த்தக உடன்பாட்டிலும் இலங்கை சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில்தான் சீனாவின் மீன்பிடி டோலர்கள் இலங்கையின் கடல் எல்லைகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றது.
இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் இலங்கை சீனாவிடம் பல வகையான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. சீனாவுடன் கூட்டு இராணுவப் பயிற்சி. கூட்டு பயங்கரவாத அழிப்பு, கூட்டு இராணுவ நடவடிக்கை, இலங்கைக்கான இராணுவ உதவிகள் என்று பாதுகாப்பு சம்மந்தமாக பல வகையான உடன்படிக்கைகளில் இலங்கை சீனாவுடன் இணைந்துள்ளது.
அந்த வகையில்தான் அண்மையில் சீன இராணுவத் தளபதி தனது சீருடையுடன் இலங்கை வந்து ஜனாதிபதி பாதுகாப்புச் செயலர். இலங்கை இராணுவத் தளபதி உட்பட இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்திவிட்டுச் சென்றார்.
சோனியாவின் ஆட்சியின் கீழ் இந்தியா, இலங்கை மீது தனது நாட்டாமைத் தனத்தைக் காட்டத் தவறி விட்டது. காரணம் இந்தியா, இலங்கையுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத் தமிழர்களை கொத்தணிக் குண்டுகள் போட்டு அளித்த பெருமை இந்தியாவையே சாரும்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இந்தியாவின் அத்தனை ஆதாரங்களையும் இலங்கை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டி வருகின்றது.
இந்த வகையில்தான் இந்தியா, இலங்கைக்கு அடங்கி வருகின்றது. ஆனால் இந்தியா, இலங்கையுடன் ஈழத் தமிழர்களை அளிக்கும் கூட்டில் இணையா விட்டிருந்தால் இன்று இந்தியா தனது நாட்டமைத் தனத்தை இலங்கை மீது காட்டியிருக்கலாம். அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இப்போது நக்குண்டவர் நாவிழந்தவர் போன்று சீனா மற்றும் பாகிஸ்தான் ஈழத் தமிழர்களை அளித்த கூட்டில் இணைந்து கொண்டு இலங்கை மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகள் அதிகரித்துள்ளது.
அதனால்தான் வடமராட்சியில் இந்தியா உணவுப் போட்டலங்களைப் போட்டது போன்று இந்தியாவால் செயல்பட முடியாமல் போய் விட்டது. ஈழத் தமிழர்கள் கொலையில் இந்தியா இணைந்து கொண்டதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டது.
சீனக்குடாவை சீனாவுக்கு வழங்குவதின் பின்னணி
சீனக்குடாவை சீனாவுக்குக் கையளிப்பதின் பின்னால் பல இரகசியத் தவல்கள் புதைந்துள்ளது. கடந்த வருடம் சீனாவுக்கு ஜனாதிபதி மஹிந்தர் சென்று சீனாக்குடா விமான நிலையக் கையளிப்பு பற்றி பேசியதாக இப்போது தகவல் வெளியாகின்றது. ஆனால் அந்தத் தகவலில் எவ்விதமான உண்மையுமில்லை என்பதே உண்மை.
ஜனாதிபதி மஹிந்தரின் விசேட தூதுவராக கடந்த 5 ஆம் திகதி சீனாவுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ச சென்றார். அவர் அங்கு சீனாவின் உதவிப் பிரதமரைச் சந்தித்து சீனக்குடா விமான நிலையக் கையளிப்பு சம்மந்தமான உறுதிமொழி உட்பட இலங்கையின் உத்தியோகபூர்வ அனுமதியையும் வழங்கியுள்ளார்.
இது திடீரென்று இலங்கையால் எடுக்கப்பட்ட முடிவு என்பதில் மாற்றமில்லை. காரணம் இலங்கை தற்போது சர்வதேச நெருக்கடியொன்றில் சிக்கித் தவிக்கின்றது. அதாவது இலங்கை ஜெனிவாவின் பிடியில் இருந்து நாளாந்தம் இறுகி வருகின்றது.
இந்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக இலங்கை சீனாவைக் குஷிப்படுத்துவதன் மூலமாக சீனாவின் செல்லப் பிள்ளையாக இலங்கை மாறி வருகின்றது.
சீனாக்குடா விமான நிலையத்தை சீனாவுக்கு கையளிப்பதன் மூலமாக இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இலங்கை முயற்சிக்கின்றது. அதாவது சீனாவுடன் இலங்கை அதிகளவு நெருங்குவதன் மூலமாக இந்தியா, இலங்கையுடன் நெருங்க வேண்டும் அல்லது பணிய வேண்டும் என்று இலங்கை பெருமளவு எதிர்பார்க்கின்றது.அதன் மூலமாக ஜெனிவாவின் பிடியில் இருந்து இலங்கையை இந்தியாவின் புதிய அரசு காப்பாற்ற வேண்டும் என்று இலங்கை அதிகளவு எதிர்பார்க்கின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு வைபவத்திற்கு இந்தியா சென்ற மஹிந்தர் மோடியிடம் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தி காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கி தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று மோடி கொஞ்சம் உயர்த்திப் பேசியுள்ளர்.
அது மஹிந்தருக்குப் பிடிக்கவில்லை. அதன் பின்புதான் மஹிந்தர் சீனாக்குடாவை சீனாவிடம் கையளிப்பதற்கான முடிவுக்கு வந்துள்ளார். இப்போது இலங்கை அதிபர் மீது இந்தியா உச்ச கட்ட சீற்றத்தில் உள்ளது. அந்தச் சீற்றத்தின் வெளிப்படுதான் இந்திய விமானப் படைத் தளபதி அருப் ராஹா இலங்கை வந்து போயுள்ளார்.
இந்தியா எடுக்க வேண்டிய தீர்வு
இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று இந்தியா கருதுமானால், ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தானாக முன்வந்து நல்லதொரு தீர்வை வழங்கி இலங்கையின் வட கிழக்கு என்பது இந்தியாவின் பாதுகாப்புப் பிரதேசம் என்ற கோணத்தில் எப்போதும் இந்தியா வடகிழக்குப் பகுதியில் ஒரு கண்வைத்துக் கொண்டு வடகிழக்கு மகாண ஆட்சியாளர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
அதனால் இந்தியாவுக்கு ஆதரவான வடகிழக்கு ஆட்சியாளர்களை இந்தியா ஊக்குவிக்க வேண்டும். அதற்காக இந்தியா தனக்கு ஆதரவான ஆட்சியாளர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான சக்திகளையும் ஆதரவான சக்திகளையும் இந்தியா இனம் காண வேண்டும். இந்தியா ஈழத் தமிழர்களை ஓரம்கட்டிவிட்டு சிங்கள அரசுடன் இணைந்து கொண்டு தேனிலவு நடத்துவது இந்தியாவுக்கு இன்னும் இன்னும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
இந்தியா இனிமேலும் தாமதிக்கக் கூடாது. இலங்கையை இன்னும் நம்பக் கூடாது. இசீனக்குடா விமான நிலையம் சீனாவுக்கு வழங்கிய விடயம் தொடர்பாக இலங்கையிடம் விளக்கம் கேட்டாலும் இலங்கை சீனக்குடா தளத்தை சீனாவுக்கு வழங்கத்தான் போகின்றது.
இந்தியா பார்க்கத்தான் போகின்றது. அதன் பின்பு இந்தியா என்ன செய்யப் போகின்றது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை இலங்கை விடயத்தில் மிகவும் பாதாளம் நோக்கிச் சென்று விட்டது.
இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் என்று சொல்லப்படுகின்ற கேரளக்காரர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவைப் பிழையாக வழிநடத்தி வருகின்றார்கள்.
கடந்த 12 வருடங்களாக டெல்லி சவுத் புளக்கிலுள்ள வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர்கள் இந்திய மத்திய அரசைப் பிழையான வழிகளில் இட்டுச் செல்கின்றர்கள் கேரளக் சகோரர்களான சதீஷ் நம்பியார் மற்றும் விஜேய் நம்பியார் ஆகியோர்கள்தான் ஈழத் தமிழர் கொலைகளின் முக்கிய சூத்திரதாரர்கள்.
இறுதி யுத்தத்தின் வெள்ளைக் கொடிக்கும் இந்த சகோரர்களுக்கும் சம்மந்தம் உள்ளது. ஆக மொத்தத்தில் கேரளக்காரர்களின் பிழையான வழி நடத்தல்தான் இன்று இந்தியாவை பிழையாக இட்டுச் செல்கின்றது. அதனால்தான் இன்று சீனா இலங்கையின் சீனக்குடா விமானத் தளத்தையும் கைப்பற்றியுள்ளது.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyHQULchw1.html

Geen opmerkingen:

Een reactie posten