இந்திய மத்திய அமைச்சர், நிதின் கட்காரி வீட்டில் வெளிநாட்டு உளவு அமைப்புகளால் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த, அதிநவீன ஒட்டு கேட்கும் கருவிகள் அகற்றப்பட்டுள்ளன. அந்தக் கருவிகள், அமெரிக்க உளவு அமைப்புகள் பயன்படுத்துபவை என்பதால், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை, கண்காணிக்கும் சதிச் செயலில் அமெரிக்க உளவு அமைப்புகள் ஈடுபடுகின்றனவோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பின் கண்காணிப்பில், பா.ஜ., தலைவர்கள் உள்ளனர் என அந்த பத்திரிகை தெரிவித்தது. அப்போதே, அமெரிக்க உளவு மற்றும் கண்காணிப்பு வளையத்தில், கட்காரி, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் இருக்கலாம் என, பரவலாகக் கூறப்பட்டது. அதை உண்மை என தெரிவிப்பது போல், இப்போதைய தகவல் கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசில், நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளின் அமைச்சராக இருக்கும் நிதின் கட்காரியின் டில்லி வீடு, 13, தீன்மூர்த்தி சாலையில் உள்ளது.
அங்கு சமீபத்தில், அதிநவீன ஒட்டுகேட்பு கருவிகள் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்தக் கருவிகள், பொதுவாக இந்தியாவில் பயன்படுத்தும் கருவிகள் அல்ல. அமெரிக்க உளவு அமைப்புகளான, சி.ஐ.ஏ., மற்றும் என்.எஸ்.ஏ., பயன்படுத்தும் அந்த கருவிகள் பல, ஆங்காங்கே, கட்காரியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டு உளவு அமைப்புகள் தான் இந்த சதித் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என, கூறப்படுகிறது. அந்த அமைப்புகள், அமெரிக்க உளவு அமைப்புகளாகத் தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. கட்காரி மட்டுமின்றி, பிரதமர் மோடி உட்பட, பா.ஜ., அமைச்சர்கள் பலரும், இந்த ரகசிய நடவடிக்கையில் சிக்கியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. பிரதமர் அலுவலகம் தவிர்த்து, பிரதமர் அடிக்கடி செல்லும், பா.ஜ., அலுவலகம், அவர் அடிக்கடி சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆகியோரும், இந்த உளவு நடவடிக்கையில் அவர்களுக்கே தெரியாமல் சிக்கியிருக்கலாம் என்பது, விசாரணை அதிகாரிகளின் கருத்தாக உள்ளது. உலக அளவில் ஐந்து கட்சிகளின் செயல்பாட்டை, அமெரிக்க உளவு அமைப்பு கண்காணிக்க, 2010ல், அமெரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது என்ற தகவலையும், சில நாட்களுக்கு முன், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அம்பலப்படுத்தியது.
அதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை அழைத்து கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என தெரிவித்தது. இந்நிலையில், நிதின் கட்காரி வீட்டில் பொருத்தப்பட்டு அகற்றப்பட்ட உளவு கருவிகள் விவகாரம், பார்லிமென்டிலும் பெரும் அமளியை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஜூனில், இப்போதைய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சராக இருந்த போது, அவர் அலுவலகத்தில் ரகசிய கருவிகள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, 2012ல், ராணுவ அமைச்சர், அந்தோணியின் அலுவலகத்திலும் அது போன்ற கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்காரி வீட்டில் உளவு கருவி பொருத்தப்பட்டது, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் என, சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். இது முக்கியமான பிரச்னை என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசின் போது தான் இக்கருவிகள், கட்காரி வீட்டில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வில் கட்காரி முக்கியமான தலைவர். இந்த கருவிகள், கடந்த ஆண்டு, அக்டோபரில், காங்கிரஸ் ஆட்சியின் போது தான் பொருத்தப்பட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்க உளவு அமைப்பின் உளவு நடவடிக்கைக்கு, பா.ஜ., மற்றும் அதன் முன்னாள் தலைவர் கட்காரி இலக்காகியுள்ளது தெரிகிறது என்று அவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten