தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் 80 வீதமானவர்களுக்கு மன அழுத்தம்!



இரணைமடுத் திட்டத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளது: வடக்கு முதல்வர்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 06:51.55 AM GMT ]
மக்களின் மனோநிலை அறியப்படாமல், வட மாகாண சபை வர முன்னரே  இரணைமடுத் திட்டம் அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கைத்தொழில் கண்காட்சி இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இந்தக் கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,
எமது சுற்றுச் சூழலையும், பண்பாட்டு விழுமியங்களையும் மனதில் வைத்துக் கைத்தொழில்களை உருவாக்குவது அத்தியவசியமாகின்றது. அதனால்தான் நாம் மீண்டும், மீண்டும் வட கிழக்கு மாகாணங்களை இந் நாட்டின் மற்றைய மாகாணங்களைப் போல் கருதாமல் அவற்றின் விசேட தேவைகளை மனதில் எடுத்து அதற்கேற்றால்போல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றேன்.
அண்மையில் அரசாங்கம் வடக்கிற்கு எந்த வித தனிப்பட்ட சிறப்பையோ தனித் தன்மையையோ வழங்க முடியாது என்று கூறியிருந்தது.
முழு நாட்டின் திட்டமிடலுக்கு அமைவாக வடமாகாணமும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. இதை அறிவற்ற ஆணவத்தின் ஆர்ப்பரிப்பாக வெளிவந்த கருத்தென்றே எண்ணுகின்றேன்.
இரணைமடுத் திட்டத்தை எடுத்தோமானால் மத்திய அரசாங்கம் பாரிய திட்டங்களின் மேலேயே கண் வைத்துள்ளது என்பதை நாங்கள் கண்கூடாகக் காணலாம். அவை அரசாங்கத்தின் சிலருக்கு அல்லது அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட பலருக்கு நல்ல பொருளாதார விருத்தியை ஏற்படுத்தும் என்பது எமக்குத் தெரியாததல்ல.
ஆனால் வட மாகாணத்தின் தேவைகளை மனதில் கொண்டு திட்டம் தீட்டப் பட்டதா அல்லது தான் தோன்றித் தனமாக அரச தேவைக்கேற்ப திட்டம் வகுக்கப்பட்டதா? மக்களின் மனோ நிலை அறியப் படாமலேயே வட மாகாண சபை வர முன்னரே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது.
இப்பொழுது “விடாதீர்கள், விடாதீர்கள்! வெளியுலகப் பணம் வீணாகி விடும்” என்கின்றார்கள். அதனால்த் தான் நாம் எமது உள்நாட்டுத் தேவைகளை உள்வாங்கி உங்கள் திட்டங்களை அமுல்படுத்துங்கள் என்று கூறியுள்ளளோம்.
எமது குடாநாடு நீர்வளத்தை ஏரிகளிலும், குளங்களிலும், கிணறுகளிலும் இருந்து தான் பெற்று வந்துள்ளது.
எமது கைத்தொழில்களும் அப்படித்தான். எமது சூழலுக்கு ஏற்றவாறு அவை எடுத்தாளப் பட வேண்டும். உதாரணத்திற்கு எமக்கு நீர் அவசியம். அண்மையில் நீரைப் போத்தலில் அடைக்கும் கைத்தொழில் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவ எத்தனிக்கப்பட்டது.
எமது நீரைப் போத்தல்களில் அடைத்தால் மழையற்ற நாட்களில் எமது நிலை என்னாவது? அதிக நீரை நிலத்திற்கு வெளியெடுப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்பைப் பற்றிச் சிந்தித்தார்களா கைத்தொழிலைத் தொடக்க ஆர்வம் கொண்டவர்கள்?
இந்தக் கைத்தொழில் எமக்குப் பொருந்தாத ஒரு கைத்தொழில் என்பது எடுத்துக் காட்டப்பட்டது.
எனவே எமது கைத்தொழில்களை வளர்ப்பது அவசியம் என்பதில் எமக்கு எந்தவித மயக்கமும் இல்லை என்று கூறும் அதே வேளை, எமது சுற்றுச் சூழல், மண்ணியல், தட்பவெட்ப நிலை, பாரம்பரியம், விழுமியங்கள் ஆகியவற்றை அனுசரித்தே எமது கைத்தொழில்கள் உருவாக வேண்டும். மேம்படுத்தப்பட வேண்டும். மேலான சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgpz.html
புலிகளின் தகவல்களை அறியப் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அரசியல்வாதிகளின் தரவுகள் சேகரிப்பு
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 07:20.12 AM GMT ]
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் பற்றி தகவல்களை சேகரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தகவல்களை அறிய அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்ப கருவிகள் அரசியல் நோக்கங்களுக்காகவும் பொருளாதார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றை பயன்படுத்தி அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதுடன் கணனிகளின் தரவுகளும் பெறப்படுகின்றன.
பண்பற்ற இந்த நடவடிக்கை காரணமாக அரசியல்வாதிகள் தொடர்பாடல்களுக்காக மாற்று தொழிற்நுட்பங்களை பயன்படுத்தத வேண்டியுள்ளது.
இதற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில பகுதிகள் பல வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதே அதற்கு காரணம்.
பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை கண்டறியவே ஒட்டு கேட்கும் தொழிற்நுட்பம் கண்டறியப்பட்டது.
எனினும் தற்போது இந்த தொழிற்நுட்பம் பண்பற்ற வகையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தகவல்களை அறிய பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgp0.html

முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் 80 வீதமானவர்களுக்கு மன அழுத்தம்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 07:28.46 AM GMT ]
ஒரு மாத காலமாக நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் தற்போது அவுஸ்திரேலிய கேர்ட்டின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 153 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் 80 வீதமானவர்கள் மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறீன் கட்சியின் செனெட்டர் சரா யங் இதனை உறுதிசெய்துள்ளார். மன நல மருத்துவர்கள் தாங்கள் மதிப்பீடு செய்த 5 புகலிடக்கோரிக்கையாளர்களில் நால்வருக்கு மன அழுத்தங்களும் உடற்காயங்களும் காணப்பட்டதாக தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக இவர்களின் பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வினை மொரிசன் வழங்க வேண்டும் இல்லை என்றால் இவர்களின் நிலைமை மிகவும் பாதிப்படையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கேர்ட்டின் முகாம், சிறுவர்களுக்கு மிகவும் உகந்ததல்ல என்றும் அங்கு போதிய வசதிகளும் இல்லை அதனால் இவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய ஊடகமொன்று நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை கிறீன் கட்சியின் செனெட்டர் சரா யங் புகலிடக்கோரிக்கையாளர்களை சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgp1.html

Geen opmerkingen:

Een reactie posten