தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையா? அரியநேத்திரன் கேள்வி

மீண்டும் கலவரங்களை தூண்ட திட்டமிடும் பொதுபல சேனா
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 06:14.10 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பு ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மீண்டும் கூட்டங்களை நடத்தி நாட்டில் கலவரங்களை தூண்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆசியுடன் இயங்கி வருவதாக கூறப்படும் பொதுபல சேனா, அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளை தூண்டிய பின்னர் சற்று அமைதியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி, இனவாத வன்முறைகளை தூண்ட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது சம்பந்தமான இரகசியமான கூட்டம் ஒன்று கடந்த 28 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அதன் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே உட்பட சில பிக்குமாரும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ,  இராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, பொலிஸ் மா அதிபர் இலங்ககோன்,  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன, அரச புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஸ்ட ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்தை விமர்சித்து,  நாட்டை காப்பாற்றுவது பற்றி கூட்டங்களில் பேச வேண்டும் என இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர சர்வதேச விசாரணை மூலம் போர் குற்றங்களை சுமத்தி படையினரை பொறிக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி,  அமெரிக்கா ஊடாக இதற்கு உதவி வருவதாகவும் கூட்டங்களில் பேச வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டங்களில் பொதுபல சேனா அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மக்கள் இது அரசாங்கத்தின் வேலை என புரிந்து கொள்வார்கள் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ இதன் போது கூறியதாக தெரியவருகிறது.
ஊவா மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அளுத்கம சம்பவங்கள் குறித்து சர்வதேசம் அவதானித்து வரும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒன்றை செய்ய முடியுமா என பொலிஸ் மா அதிபர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுபல சேனாவுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குமாறும், முழுமையான பாதுகாப்பு என்பது 99.9 வீதம் அல்ல எனவும் 100 வீதமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபரிடம் கூறியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய ஞானசார தேரர், தான் கூறுவதை பொலிஸார் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ளார் , இதனையடுத்து ஒவ்வொரு கூட்டங்களுக்கு தலா 20 இராணுவத்தினரை அனுப்பி வைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர், இராணுவத்தின் தலைமை அதிகாரி ஜகத் ஜயசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றுள்ளது,  பாதுகாப்பு அமைச்சுக்கு செல்லும் நபர்கள் பற்றி குறிப்புகளில் பதிய வேண்டும் என்ற போதிலும் ஞானசார தேரர் உட்பட பொதுபல சேனாவினர் வந்து சென்றமை குறித்து எந்த பதிவுகளும் செய்யப்படவில்லை.
எவ்வாறாயினும் அளுத்கம சம்பவத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனக்கு பொதுபல சேனாவுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என கூறியிருந்ததுடன் அப்படி தொடர்பிருந்தால் நிரூபித்து காட்டுமாறும் சவால் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULcht6.html

30 ஆண்டுகளாக நாம் ஒரு புரட்சிகரமான தலைமையின் கீழ் வாழ்ந்தோம்: சி.சிறீதரன் எம்.பி
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 06:47.54 AM GMT ]
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தின் 49வது ஆண்டு நிறைவு விழாவும் வளர்மதி கல்விக்கழகத்தின் பரிசளிப்பு விழாவும் சிறப்புற நடைபெற்றுள்ளது.
வளர்மதி கலையரங்கில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினர்களாக பரந்தன் மக்கள் வங்கி முகாமையாளர் க.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்,
கௌரவ விருந்தினர்களாக யாழ். கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை அதிபர் ஆ.தங்கவேலு, நுணாவில் மத்தி கிராம சேவகர் திருமதி.பானுசா தவேஸ்வரன், சாவகச்சேரி பிரதேசபை உறுப்பினர் தங்கராசா மற்றும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தென்மராட்சி அமைப்பாளருமான அருந்தவபாலன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிலையத்தின் தலைவர் சி.டினேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வரவேற்புரையை உபசெயலாளர் செ.பரணிதரன் நிகழ்த்தினார்.
அறிக்கையை கல்விக்கழக பொறுப்பாசிரியர் ச.கிருஸ்ணன் வழங்கினார். சிறப்புற நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்களாக இருந்து ஆசிரிய ஆலோசகர்களாக சமாதான நீதவான்களாக உயர்வுபெறும் செ.பரணிதரன் சி.சிவதாசன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.
நடனம் பட்டிமன்றம் உரைகள் என பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தேறின.
இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் தனது சிறப்புரையில்,
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் இந்த ஊரின் உறவுகளும் கலந்து சிறப்பிக்க கூடிய இந்த சனசமூக விழாவில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இத்தகைய முன்னோடியான சனசமூக நிலையங்களின் செயற்பாடு மனதுக்கு நிறைவு தருகின்றது.
நமது பண்பாட்டோடு வாழ்ந்த சமுகத்தில் வாள்வெட்டும் பாலியல் வன்முறைகளும் கொலை, கொள்ளையும் போதைப் பொருள் பாவனையும் விதைக்கப்படும் இந்த காலத்தில் அறிவு நோக்கியும் கடந்த கால எமது வரலாறு நோக்கியும் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
நம் சமூகத்தை எப்போதும் நிம்மதியாக வாழவிடாத நிலைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். ஆனால் இத்தகைய நிலையில் இருந்த மீண்டெழ நாம் கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் ஒரு புரட்சிகரமான தலைமையின் கீழ் வாழந்தோம்.
நாம் வியக்கத்தக்க வகையில் எல்லா வல்லமைகளோடும் வாழ்ந்தோம். ஆனால் அந்த வரலாற்று உண்மையை நாம் எம் பிள்ளைகளுக்கு சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchuy.html
ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையா? அரியநேத்திரன் கேள்வி
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 06:56.49 AM GMT ]
ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் மிக முக்கியம் ஆனால் இலங்கையைப் பொறுத்த வரை ஜனநாயக நாடு என்று கூறும் இந்த அரசாங்கம் வடகிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை அடக்கியாள நினைப்பது எந்த வகையில் பொருந்தும் என கேள்வி எழுப்புகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.
அண்மையில் யாழ்ப்பணத்தில் இருந்து கொழும்பிற்கு கருத்தரங்கொன்றிற்கு கலந்து கொள்வதற்காக சென்ற ஊடகவியலாளர்களை வழிமறித்து போதைப்பொருள்(கஞ்சா) கடத்திச்செல்வதாக குற்றம் சுமத்தி அவர்களை கைது செய்தமை தொடர்பாக கருத்துக்கூறும்போதே இதனைத்தெரிவித்தார்.
மேலும் இவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,
குறிப்பாக வடகிழக்கு ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் அரசாங்கம் கூறும் சமாதான காலத்திலும் தொடர்ந்து கொண்டே செல்கின்றதனை தற்போது காணமுடிகின்றது.
ஏற்கனவே யுத்தம் நடைபெற்றகாலத்தில் வெள்ளை வானில் கடத்தியும்,  குண்டுகளை வைத்தும் கொலை செய்தவர்கள் தற்போது கஞ்சாவினை வைத்து ஊடகவியலாளர்களை கைது செய்ய முனைகின்றார்கள்.
இந்த அரசாங்கம் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது என்று கூறிக் கொண்டே வருகின்றது அரசாங்கம் கூறும் ஊடக சுதந்திரம் என்னவென்றால் ஜனாதிபதியையும், அமைச்சர்களையும் புகழ்ந்து பாடுவதுதான் ஊடக சுதந்திரம் என்று கூறுகின்றது.
நடுநிலையான கருத்துக்களையும் ஒரு நாட்டில் வாழும் இன்னுமொரு இனம் பட்ட அவலங்களையும் அந்த இனம் சார்ந்த ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வரும்போது அதனை தடுப்பதா இந்த நாட்டின் ஊடக சுதந்திரம்.
வடக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் கொழும்பிற்கு சென்றது வெறும் பிறந்தநாள் விழாவிற்கோ, களியாட்ட விழாக்களுக்கோ அல்ல ஊடக தர்மம் சார்ந்த பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளவே இவர்கள் சென்றிருந்தார்கள்.
அவர்களை அந்த நிகழ்வில் கலந்து கொள்ள விடக்கூடாது என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் குறியாக இருந்தார்கள் அதில் ஒன்று திட்டமிட்ட முறையில் அவர்கள் சென்ற வாகனத்திற்குள் போதைப்பொருளான கஞ்சாவினை வைத்து தடுக்க முற்பட்டமை, மற்றயது ஆர்ப்பாட்டக்காரர்களை ஏவிவிட்டு அதில் கழந்து கொள்ளாமல் தடுத்தமை.
இப்போது யுத்தகாலமாக இருந்திருந்தால் கஞ்சாவினை வைத்ததற்கு பதிலாக குண்டுகளை வைத்திருப்பார்கள் இவ்வாறுதான் திட்டமிட்ட வகையில் ஊடகவியலாளர்கள் காலாகாலமாக அழித்தொழிக்கப்பட்டார்கள்.
இவ்வாறான நிலைமைகளை சர்வதேச நாடுகளும்,  சர்வதேச சமூகமும் புரிந்து கொண்டு உண்மையை கண்டறிந்து வடகிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு துணைபுரிவதோடு இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை இனிமேலும் செய்யாது தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
இந்த நாட்டிலே மூன்று இனமும் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றார் ஆனால் தமிழர்கள் சுதந்திரமாக வாழவில்லை என்பதனை தமிழ் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தியதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என அரியநேத்திரன் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchuz.html

Geen opmerkingen:

Een reactie posten