[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 03:54.24 AM GMT ]
இனவாத சிந்தனை கொண்டவர்களுக்கு ஆளுங்கட்சியின் பட்டியலில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கக் கூடாது என்று ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பலை தோன்றியுள்ளது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவங்க தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கே ஆளுங்கட்சியின் பட்டியலில் தேர்தலில் போட்டியிட இடமளிக்கக் கூடாது என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தென்மாகாண சபையின் ஆளுங்கட்சி முக்கிய உறுப்பினரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் அஜித் பிரசன்ன இது தொடர்பில் பகிரங்கமாகவே தனது எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்தியுள்ளார்.
மாகாண சபையின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசின் முயற்சிகளை எதிர்த்து பகிரங்கமாக குரல் கொடுத்த இவர், பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கடுமையான எச்சரிக்கையை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவத்தினரின் வாக்குகளை ஆளுங்கட்சிக்குப் பெற்றுக் கொடுப்பதில் இவர் முன்னின்று செயற்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக இவர் குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள மேஜர் அஜித் பிரசன்ன, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. அவ்வாறான நிலையில் இவர்கள் ஆளுங்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்து வெற்றி பெறுவார்கள். பின்னர் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.
அவ்வாறானவர்களுக்கு ஆளுங்கட்சியின் பட்டியலில் போட்டியிட இடமளித்தால் சிறுபான்மை வாக்கு வங்கியை இழக்க நேரிடும். எனவே இனவாதிகளுக்கு ஆளுங்கட்சியின் பட்டியலில் போட்டியிட இடமளிக்கவே கூடாது என்றும் இவர் பகிரங்கமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்னவின் குரலுக்கு அமைச்சர்களான ராஜித சேனாரத்தின மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும் ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் இனவாதிகளின் கட்சி வேட்பாளர்களை ஆளுங்கட்சி பட்டியலில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றவாளிகளுக்கு உயர் விருதுகளை வழங்கினார் மகிந்த
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 05:08.58 AM GMT ]
வடக்கு, கிழக்கில் மனிதாபிமானப் போர் நடவடிக்கை என்று இலங்கை அரசாங்கத்தினால் குறிப்பிடப்படும் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற, உயிரிழந்த படையினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 216 படை அதிகாரிகளுக்கு வீர விக்ரம விபூசணய விருது, ரணவிக்கிரம பதக்கம் என்பன வழங்கப்பட்டன.
வீர விக்ரம விபூசணய விருது இராணுவத்தைச் சேர்ந்த, மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மற்றும் பிரிகேடியர் ரவிப்பிரிய ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீரவிக்ரம விபூசணய விருது சிறிலங்கா படையினருக்கு வழங்கப்படும், மூன்றாவது உயர் விருதாகும்.
இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரம, ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோருக்கு ரண விக்ரம பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நேற்றைய நிகழ்வில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 147 அதிகாரிகளுக்கும், கடற்படையைச் சேர்ந்த 43 அதிகாரிகளுக்கும், விமானப்படையைச் சேர்ந்த 26 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இறுதிப் போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரில், 19,158 பேருக்கு கௌரவ விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இவர்களில், 156 படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு வீர விக்ரம விபூசணய விருதும், 2232 படையினருக்கு ரணவிக்ரம பதக்கமும், 16,770 படையினருக்கு ரணசூர பதக்கமும் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன , பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு படைத் தளபதிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten