தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

மட். மங்களராமய விகாராதிபதியின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு இன ஐக்கியத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகவே உள்ளது!-பா.அரியநேத்திரன் எம்.பி!


மட்டக்களப்பில் மங்களராமய விகாராதிபதியின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடானது சிங்கள மக்கள் மீதும் பேரினவாத அரசின் மீதும் தமிழ் மக்களுக்கு இருக்கும் சிறிய அளவு நம்பிக்கையையும் இல்லாது செய்வதுடன் இன ஐக்கியத்துக்கும் குந்தகம் விளைவிப்பதாக அமைவதாகத் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பு கல்லடி ரிவேரா விடுதியில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கற்றறிந்த பாடங்கள் நல்லினக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கான வழிமுறைகளும் எனும் தலைப்பில் இடம்பெற்ற செயலமர்விற்கு குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து இடம்பெற்ற பதட்ட நிலையினை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விகாராதிபதியின் மட்டக்களப்பு மக்களுக்கு எதிரான அண்மைக்கால நடவடிக்கைகள் இன்றைய செயற்பாடுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்த கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் செயற்பாடானது ஆரோக்கியமாகத் தென்படவில்லை. இவரது காட்டுமிராண்டித்தனமான செயற்பாடானது சிங்கள மக்கள் மீதும் சிங்கள பேரினவாத அரசின் மீதும் தமிழ் மக்களுக்கு உள்ள சிறிய நம்பிக்கையினையும் கூட இல்லாது செய்யும் செயற்பாடாகவே உள்ளது.
எந்த இடத்திலும் ஒன்று கூடுவதற்கும் கருத்துத் தெரிவிப்பதற்கும் ஒவ்வொரு மக்களுக்கும் உரிமையுள்ள நிலையில் இந்த நாட்டின் சமாதானத்துக்காக உழைக்கும் ஒரு தேசிய சமாதானப் பேரவை என்ற சமாதானத்துக்கான அமைப்பு ஒன்று கூட முடியாத நிலையை ஒரு மதத் தலைவராக இருந்து கொண்டு குழப்பி அங்கு ஏற்பாட்டாளர்களையும் பங்கு பற்றுனர்களையும் தாக்கியமையானது கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டிய செயலுமாகும்.
அண்மைக் காலமாக இவரது செயற்பாடானது தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்து வருகின்றது. விகாரைக்கு பக்கத்தில் இருந்த வீடுகளை உடைத்தது முதல் தேவையற்ற இடங்களில் புத்த சிலைகளை வைக்க முற்படுவது முதல் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளில் தலையிடுவது வரை நீண்டு கொண்டு செல்கின்றது.
அவ்வப்போது பொலிஸார் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவுக்குச் சென்றிருக்காது.
மட்டக்களப்பிலேயே மட்டக்களப்பு மக்களுக்கு ஒன்று கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் இந்த நாட்டில் அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய நிலையினை தாம் ஏற்படுத்தியுள்ளோம் என இந்த அரசால் எவ்வாறு சொல்ல முடியும்.
காவி உடையினை அணிந்தால் எதனையும் செய்யலாம் என்ற நிலை சிங்கள பேரினவாத பிக்குகள் மத்தியில் காணப்படுகின்றது. இதற்கு தமிழ் முஸ்லிம் மக்களை அடிமையாக்க முடியாது.
பொலிஸாரின் செயற்பாடும் தேரர் இந்தளவு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
சாதாரணமாக பிக்கு செய்த செயலை இந்துக் குருவோ இஸ்லாமிய மௌலவியோ செய்திருந்தால் என்ன நடந்திருக்கும். பொலிஸார் சும்மா விட்டிருப்பார்களா?
ஆனால் சமாதானப் பேரவையின் அரசின் சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் தெளிவுபடுத்தும் மூவின மக்களும் கலந்து கொண்ட செயலமர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி, தமக்கு உதவிக்கு உள்ள காடையர்கள் சகிதம் காட்டு மிராண்டித்தனமாக தாக்கி விடுதியை பூட்டிவைத்த சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தேரரைக் கும்பிட்டு பொலிஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய் விடவா எனக் கேட்டால் தேரர் பயப்படுவாரா? மேலும் இவ்வாறான செயல்களை செய்ய முற்படாரா?.

பொலிஸார் சம்பவ இடத்தில் அவரை கும்பிட்டது, வழியனுப்பிய விதம் மேலும் ஒரு படி தேரருக்கு மேலே செல்ல வைத்துள்ளது.
தேரர் இத்துடன் அவரது செயற்பாட்டை நிறுத்தாவிட்டால் அவருக்கு எதிராக தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கான காலம் நெருங்கி வருவதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், எமது மாவட்ட மக்களின் வாழ்வுரிமையில் தேரர் தலையிடுவதை அனுமதிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten