ராணுவம் இன்று காலை விடுத்த அவசர அறிவிப்பில், “மக்கள் யாருமே ராணுவ பில்டிங்குகளுக்கு அருகே வரவேண்டாம், முக்கியமாக ராணுவ உளவுத்துறை தலைமையக பில்டிங்குக்கு மிக அருகே வரவே வேண்டாம். நெருங்கி வந்தால், விளைவு விபரீதமாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் வெள்ளம் அந்த பில்டிங்குக்கு முன்னேதான் உள்ளது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இதே இடத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதுதான், ராணுவம் கண்மூடித்தனமாக மக்களை நோக்கிச் சுட்டது. அதில் 120 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என முதலில் செய்திகள் வெளியாகின.
எகிப்திய அரசு, 65 பேர் உயிரிழந்தனர், 750 பேர் காயமடைந்தனர் என்றது. அதே நேரத்தில், எகிப்தில் இருந்து ஒளிபரப்பாகும் அல்-ஜசீரா சேனல், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,500 வரை இருக்கலாம் என செய்தி வெளியிட்டது. “ராணுவம் மக்கள் கலைந்து போக வேண்டும் என்பதற்காக சுடவில்லை. மக்களை கொல்ல வேண்டும் என்ற வெறியுடன் சுட்டது” என்றும் அல்-ஜசீராவில் ஒருவர் தெரிவித்தார். மக்கள் வீதிகளில் நகராமல் இருப்பதற்காக வீதிகளின் நடுவே செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. ராணுவம் சுடத் தொடங்கவே, அந்த செங்கற்களே மக்களின் கைகளில் கிடைத்த ஆயுதங்களாகின. வீதிகளில் கொல்லப்பட்டவர்களின் ரத்தம் வீதியில் காய்ந்த நிலையில் இருக்க, அந்த ரத்தக் கறைக்கு பூவைத்து அஞ்சலி செய்தனர் மக்கள்.
தலைநகரில் வீதிகளில் திரண்டுள்ள மக்கள் வெள்ளத்தை வானில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவில் பாருங்கள். இவ்வளவு திரளாக மக்கள் வீதிக்கு வந்தது, இதுவே முதல் தடவை.
ராணுவத்தால் ஆட்சி கைப்பற்றப்பட்டபோது கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மொஹமெட் மோர்சியை உடனடியாக விடுவிக்க வேண்டும், அவரது கையில் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என மக்கள் கோஷமிடுகிறார்கள். மோர்சிக்கு ஆதரவு பெருகியவண்ணம் உள்ளது. மக்கள் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் அனைவருமே சீருடையில் இல்லை. சிலர் சிவில் உடைகளில் வந்தும் தாக்குதல் நடத்தினார்கள்
எகிப்தில் ராணுவத்துக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி எதுவரை செல்லும் என்று தெரியவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten