[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 11:31.09 AM GMT ]
யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.
இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமைச் செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
36 பேரைக் கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 3 பெண்களும் அடங்கியுள்ளனர்.
தலைமுறை தாண்டும் தமிழீழப் போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 12:10.48 PM GMT ]
நமக்கென்று ஒரு நாடில்லை வீடில்லை அத்தோடு மொழி, கலை பண்பாட்டுச் சுதந்திரம் இல்லை. இவைகளெல்லாம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது நம் தேசத்தில். இப்போது இனவெறியால் எல்லாமே நாசமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழினத்திற்கு எதிரன இனப்படுகொலை எப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. நாமெல்லாம் பிறப்பதற்கு முன்பே திட்டமிடப்பட்டு இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த காலத்தை புரட்டிப் பார்ப்போமேயானால் 1958 /1977 என இனப்படுகொலைகள் எமக்கெதிராக அரங்கேற்றப்பட்டது. அந்தக் காலகட்டதில் தமிழர்கள் அஹிம்சை வழியில் உரிமைப் போராட்டங்களை நடத்தினார்கள். அவ் இனப்படுகொலைளின் தொடர்ச்சியின் உச்சகட்டம் 1983ம் ஆண்டு யூலை 23ல் இருந்து 27 வரை திட்டமிட்டு காட்டுமிராண்டி தனமாக நிறைவேற்றப்பட்டது.
24ம் திகதி தமிழர்கள் வாழ்வின் இருண்ட காலம் எனப்படும் கறுப்பு யூலையின் தொடக்க நாள். 25ம் திகதி வெலிக்கடை சிறையில் பெரும் கொடூரம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை இராணுவமும் சிங்கள இனவெறி காடையருமாக இணைந்து சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை ஈவிரக்கம் இன்றி கொன்றழித்தனர். இந்த யூலை மாதமானது தமிழ் மக்களின் ஆத்மாவில் என்றும் ஆறாத கடும் வடுவாக இன்றும் பதிவாகி உள்ளது.
1983 யூலை மாதக் காலப்பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது. 2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் நடந்தேறிய இனப்படுகொலையின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியில் இருந்தது. எனவே எந்த இனவாத சிங்கள கட்சிகளாக இருந்தாலும் அவர்கள் தமிழ் இனஅழிப்பு என்னும் கோட்பாட்டில் ஒன்றாகவும் நேர்த்தியாகவும் செயல் பட்டு வருகின்றனர்.
உலக நாடுகளோ அல்லது இந்தியாவோ சரி இன்றுவரை இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் வந்துவிடுமே என்ற அச்சத்திலும் அங்கு இரண்டு நாடுகள் உருவாகி விடும் என்ற அச்சத்திலுமே தான் எமது பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள் தவிர எமக்கு தனி நாடு பெற்றுத்தருவதற்காக அன்று. இதுவே தற்போதைய உலக சூழல்.
எனவே நாம் எல்லோரும் எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். எல்லோருமாக சேர்ந்து பாகுபாடின்றி அரசியல் வழியிலான போரட்டங்களை செய்ய வேண்டும். அந்த ரீதியில் நாம் முன்னெடுத்த தொடர் விழிப்புணர்வும் மற்றும் நடை பயணமும் லண்டனின் மிக முக்கிய இடங்களினூடாக சென்று கறுப்பு யூலையின் இறுதி நிகழ்வு இடம்பெற்ற மைதானத்தில் நிறைவேறியது. ஒரு தலைமுறையை கடந்து நிக்கும் போராட்டம் இளையோர்களின் கைகளில் கொடுக்கப்பட்டது.
அந்த வகையில் நமது நாட்டில் நாமே ஆட்சி செய்யும் நாள் மறுபடியும் வரும் வரை உலக தமிழ் இளையோர்களுடன் சேர்ந்து தொடர்ந்து உழைப்போம் என பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten