தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

நாங்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல: பிரசன்னா இந்திரகுமார்

பாடசாலைகளில் வாக்கு எண்ணும் நிலையங்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு - உள்ளூராட்சி சபைகளைப் பாராட்டிய தென்னிலங்கை குழுவிற்கு அச்சுறுத்தல்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:17.39 AM GMT ]
வடக்கு மாகாணசபை தேர்தல், வாக்கு எண்ணும் நிலையங்களை யாழ்.மாவட்டத்தில் இம்முறை பாடசாலைகளில் அமைப்பதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந் நடவடிக்கைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், அரசாங்க அதிபர் இதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாநகரசபை, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அனைத்திற்கும் வாக்கு எண்ணும் நிலையம் யாழ்.மாவட்டச் செயலகத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வாண்டு வடக்கு மாகாணசபை தேர்தல் வாக்குகளை எண்ணும் நிலையத்தை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் அமைக்கவுள்ளதாக மாவட்டச் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருக்கின்றது.
விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
விடயம் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். அதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனாலேயே பாடசாலைகளில் வாக்கு எண்ணும் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாங்கள் அரசாங்க அதிபருக்கு திட்டவட்டமாக கூறியிருக்கின்றோம். வாக்கு எண்ணும் நிலையங்களை அமைப்பதாயின் ஒரு பாடசாலையில் அமைக்க வேண்டும். பல பாடசாலைகளில் அமைக்க முடியாது. அவ்வாறு அமைக்கப்பட்டால் விருப்பு வாக்கு எண்ணும்போது பல அசெளகரியங்கள் ஏற்படும்.
இதனை விடவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். என்பதை தெளிவாக கூறியிருக்கின்றோம். அனை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகத்திற்குள் இடப்பற்றாக்குறை நிலவுவதாலேயே மாற்று திட்டம் குறித்து பரிசீலித்ததாக கூறியுள்ளார்.
ஆனால் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்க அதிபர் உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறான நடவடிக்கையினால் அரசாங்க அதிகாரிகளுக்கும் பிரச்சினை, அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினை.
எனவே அரசாங்க அதிபர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை காணாத பட்சத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மட்டத்திற்கு இந்தப் பிரச்சினையை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துச் செல்லும், என அரசாங்க அதிபருக்கு நாம் கூறியுள்ளோம்.
எனவே அரசாங்க அதிபர் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார் என நாம் நம்புகிறோம். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும், ஜனாதிபதி தேர்தலின்போதும் மாவட்டச் செயலகத்திலேயே வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் இவ்வாண்டு மாற்றிடம் தேடப்படுவதன் நோக்கம் குறித்து எமக்கு சரியாக தெரியவில்லை, இந்நிலையில் பாடசாலைகளில் வாக்கு எண்ணும் நிலையம் அமைக்கப்படுகின்ற போது போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவோம்.
அது குறித்தும் கூட்டமைப்பு அதிக கண்காணிப்புடன் இருக்கின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.
  • கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளைப் பாராட்டிய தென்னிலங்கை குழுவிற்கு அச்சுறுத்தல்
வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகள் சுதந்திரமாகவும், மிகவும் தி றம்படவும் செயற்படுவதாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தென்னிலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் குழு பயணத்தை நிறுத்திக் கொண்டு உடனடியாக திருப்பியழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.வந்த மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகள் சிலவற்றைச் சென்று பர்வையிட்டுள்ளனர்.
இதன் பின்னர் உள்ளூர் ஊடகமொன்றுக்கு அவர்கள் கருத்து தெரிவித்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள, உள்ளுராட்சி மன்றங்கள் சுதந்திரமாகவும், வளங்கள் எதுவுமற்ற நிலையிலும் மிகவும் திறம்பட இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மேற்படி குழுவினர் உடனடியாக தத்தமது பிரதேசங்களுக்கு திரும்பிவிட வேண்டும் எனவும் அல்லாதுபோனால் பதவிகள் பறிக்கப்படும் எனவும் அரசு அச்சுறுத்தியுள்ளது.
இதனையடுத்து குழுவினர் உடுவில், வலி,கிழக்கு, பருத்துறை பிரதேச சபைகளுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை முடித்துக் கொண்டு குறித்த பிரதேச சபைகளில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றுக்கும் சொல்லாமல் திரும்பிச் சென்றிருக்கின்றனர்.

நாங்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல: பிரசன்னா இந்திரகுமார்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:27.28 AM GMT ]
நாங்கள் வன்முறைமீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல என்று எங்களின் தளபதி குட்டிமணி அவர்கள் சொன்ன பாதையிலேயே இன்று மீண்டும் தமிழினம் பயணித்துக் கொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறையில் வைத்து கொலை செய்யப்பட்ட தளபதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட போராளிகளின் 30வது ஆண்டு நினைவுநாளில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை என்றுமே அகிம்சை வழியில் வென்றெடுக்க வேண்டும் என்றே விரும்பினர். அதற்காக சுமார் 30 ஆண்டுகாலம் அறவழிப் போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.
ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களின் அறவழிப் போராட்டங்களை புரிந்துகொள்ளாமல் அவர்களது போராட்டங்களை மதிக்காமல், அறவழியில் போராடியவர்கள் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். அதன் விளைவாகவே இன்று இலங்கை மிகப்பெரிய அழிவுகளுக்கும், அந்நிய நாடுகளின் ஆதிக்கத்திற்கும் உள்ளாகியுள்ளது.
குறிப்பாக எங்களது தலைவர்களான குட்டிமணி போன்றவர்கள் சிறைச்சாலையில் வைத்து துன்புறுத்தப்பட்டபோதும் அவர் ஒரு விடயத்தை தெளிவாக கூறியிருந்தார். அதாவது நாங்கள் வன்முறைமீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல என்று. ஆனால் இன்று அவர்கள் கொலை செய்யப்பட்ட முப்பதாவது ஆண்டில் நாங்கள் அதே வார்த்தையை ஒரு அரசியல் கட்சியாக, தமிழர்களின் தேசியக் கூட்டமைப்பாக நின்றுகொண்டு மீண்டும் சொல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் போராட்டம் இன்று மீண்டும் முப்பதாண்டுகள் பின்தள்ளப்பட்டதாகவே எங்களால் உணரமுடிகின்றது. நாங்கள் மீண்டும் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்களின் காலத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளோம் இவர்களின் காலத்திற்கு பிறகு உருவாகியதுதான் பிரபாகரனின் காலம் அதை உருவாக்கியவர்களும் சிங்கள ஆட்சியாளர்கள்தான்.
ஆனால் இன்று மிகப்பெரிய உயிர் இழப்புகள், சொத்தழிவுகளை சந்தித்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களை விலையாகக்கொடுத்த தமிழினம் மீண்டும் சர்வதேசத்தின் ஆதரவுடன் தன்னுடைய கொள்கையைத் தவிர வேறெந்த பேரம்பேசும் சக்தியின்றி அரசாங்கத்தை நோக்கி வந்துள்ளது.
இந்த நிலமையைப் புரிந்துகொண்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்குமாகவிருந்தால் மீண்டும் பிரபாகரனின் காலத்திற்கு எதிர்கால தமிழ் சமூகம் செல்வதை தடுத்துநிறுத்த முடியும்.
எனவே இந்த புனிதமான நாளில் நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் தமிழினமாக இருந்தாலும் சரி ஏனைய இனங்களாக இருந்தாலும் சரி மீண்டுமொரு வன்முறை உருவாகுவதை யாரும் விரும்பவில்லை எனவே எல்லா இனங்களுக்குமான உரிமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வடகிழக்கு மண்ணில் தமிழர்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு வழி விடவேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten