நாய்களுடன் உறங்கினால் உண்ணிகளுடன் எழவேண்டிய நிலைமை ஏற்படும்: தயா கமகே- காணிப் பிரச்சினையை தீர்க்குமாறு கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 10:35.53 AM GMT ]
நாய்களுடன் உறங்கினால் எழும் போது, உண்ணிகளுடன் எழு வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், நாய்களுடன் உறங்கியதே தான் செய்த பெரும் தவறு என கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் விடயங்கள் தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுகின்றேன்.
அப்போது, அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செய்தவற்றை நான் கூறுவேன். தயாசிறி ஜயசேகரவுக்கு அப்பாவித்தனமான முகமும், பேச்சாற்றலும், பாட்டு பாடும் திறமையும் இருந்ததால் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே தயாசிறிக்கு பெற்றுக் கொடுத்தார்.
வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசுக்கு இருக்கும் பெரும் அச்சம் காரணமாக பெருந்தொகை பணத்தை கொடுத்து, அவரை ஆளும் கட்சியில் இணைத்து கொண்டனர்.
எனினும் தற்போது அரசுக்குள் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் 58 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது தொடர்பில் என்னுடன் பேசினர். அவர்களுக்கு சரியான அடித்தளத்தை போட்டுக் கொடுத்தால் அவர்கள் கட்டாயம் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு தாவினாலும் 2014 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோற்று போகாது.
நாட்டில் தற்போது சட்டம் என்று எதுவுமில்லை. மாணவர்கள் போராட்டம் நடத்த முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாத காரணத்தினால் இப்படி நடக்கிறது.
அதேவேளை இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி சென்று விட்டது. திவிநெகும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாரியளவில் கொள்ளையடிப்புகள் நடைபெறுகிறது என்றார்.
காணிப் பிரச்சினையை தீர்க்குமாறு கோரிக்கை
மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஜ்.எம்.சார்ள்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பிhல் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதி, கட்டுப்பாடுகளற்ற பகுதியென இரண்டு பகுதிகளாக அரச நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
அக்காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்த அச்சம் காரணமாக இம்மக்கள் வாழ்ந்து வந்த பல கிராமங்களை இவர்களின் அருகில் உள்ள முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகள் ஊடாக, நிர்வகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்சமயம் இயல்பான சூழல் ஏற்பட்டுள்ள பின்பும் யுத்தகாலத்தைபோல் நிர்வாகத்தை தொடர்ந்தும் செய்து வருவது அரச நிர்வாகத்திற்கு உகந்ததல்ல. இச்சூழலில் இப்பிரிவுகளை முஸ்லிம் பகுதியுடன் தொடர்ற்சியாக இணைக்கச் சொல்லி கோருவது பொருத்தமற்றது.
இது இனங்களுக்கிடையே நல்லுறவை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே அமையும். எனவே பொது நிர்வாக அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின்படி குறித்த கிராமங்கள் எந்ந பிரதேச செயலகப் பிரிவுடன் வருகின்றதோ அதனுடாகவே நிர்வாகம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
மேலும் யுத்தகாலத்தில் பல பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி சபைகளின் பிரிவுகளில் காணி எல்லைகள் சீரமைக்கப்படுவதற்கு பதிலாக காணி எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் நடந்திருக்கலாமென தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர். இவைகள் சுற்று நிருபமாகவும் வர்தமானி வெளியீடு ஊடாகவும் வெளிவந்துள்ளன.
எனவே எமது மாவட்டத்தில் காணி தொடர்பான பின்வரும் பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதால் இருசமூகத்தின் மத்தியில் குழப்பநிலை தோன்றியுள்ளன. பல தடவைகள் தீர்வுகாண முயற்ச்சிக்கும் போது பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இருந்தாலும் இருசாராரின் சம்மதத்துடன் பல காணி தொடர்பான விடயங்களை தீர்த்துக் கொள்ளமுடியும். சில காணிப் பிரச்சினைகள் சட்டரீதியாக நீதிமன்றம் ஊடாக, தீர்க்க முடியும். எனவே கீழ்குறிப்பிடப்படும் சிலகாணி விடயங்களுக்கு, தீர்வுகாண முயற்சிப்பது சாலச்சிறந்தது.
1- மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பெரியகல்லாறு, பெரிய நீலாவணை பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் செய்வதில் பிரச்சினை உள்ளது.
2- மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசசபை, பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட எல்லையில், காத்தான்குடி நகரசபை பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்றது. குறிப்பாக ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோத்தர் பிரிவின் எல்லைக்குள் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
3- மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நொச்சிமுனை, நாவற்குடா கிழக்கு, மஞ்சந்தொடுவாய் மூன்று பிரிவுகளில் ஒருபகுதியை 1987ஆம் ஆண்டு காத்தான்குடி நகரசபையுடன் இணைத்து வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இவ்எல்லையிலுள்ள எல்லைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
4- கோறளைபற்று (வாழைச்சேனை) பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை தமிழ் பகுதி காணிகளில் பெரும்பகுதி ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. இவ் எல்லையிலும் முரண்பாடுகள் உள்ளன.
5- பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கச்சைக்கொடிசுவாமிமலை கிராம சேவையாளர் பகுதியில் இனப்பரம்பலை அதிகரிக்க சிங்களக் குடியேற்றம் நடப்பதோடு, எல்லைப் பகுதியான செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மங்களகம பகுதியுடன் இப்பகுதியை சேர்க்க முயற்சிகள் நடக்கின்றன.
6- பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு எல்லைப் பிரச்சினை வரையறை இல்லை. கெமுனுபுர, கெவிளியாமடு பகுதிக்கு எல்லை நிர்ணயம் சரியாக செய்யப்பட வேண்டும்.
7- கோறளைமத்தி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி, முறுத்தானை, வடமுனை, ஊத்துச்சேனை பகுதிக்குள் அத்துமீறிய குடியேற்றம் நடக்கின்றன.
8- செங்கலடி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட மிச்நகர், மீராக்கேணி, ஐயங்கேணி, முஸ்லீம் ஆகிய மூன்று முஸ்லீம் கிராமங்கள் அங்கீகரிக்கப் படாத கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
9- வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை கிழக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவைச் சேர்ந்த றிதிதென்ன, ஜெயந்தியாய ஆகிய கிராமங்கள் அங்கீரிக்கப்படாத கிராம உத்தியோகஸ்தர் பிரிவாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவால் நிர்வகிக்கப்படுகின்றன.
இதே நேரம், மாவட்டத்திலுள்ள பொதுவான காணிப் பிரச்சினைகளாக,
1) வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் 1960ம் ஆண்டுகளிலிருந்து வழங்கப்பட்ட காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழான அனுமதிப் பத்திரங்கள் பல ஆயிரக்கணக்கானவற்றிற்கு இதுவரை உறுதிகள் (அளிப்புகள்) வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
2) மேற்குறிப்பிட்ட பிரிதேச செயலகப் பிரிவுகளில் 1979,80ம் ஆண்டுகளிலிருந்து வழங்கப்பட்ட வருடாந்த காணி அனுமதிப் பத்திரங்கள் சீரமைக்கப்பட்டு காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரமோ, அளிப்போ வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
3) மேற்படி நடவடிக்கைகள் எடுக்கபடாமைக்குரிய முக்கிய காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்கள் இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசங்களாக காணப்பட்டமையால் அரச உத்தியோகத்தர்கள் சுதந்திரமாகச் சென்று கடமையாற்றாமல் போனதும் நிளஅளவை செய்யப்படாததும் ஆகும்.
4) மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காணியற்ற, வருமானம் குறைந்த மக்கள் வாழ்ந்து வருகின்ற போதும் வசதி படைத்தவர்கள் பெருமளவிலான அரச காணிகளை அத்துமீறி ஆட்சி செய்து வருவதிற்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்க் கொள்ளப்படவில்லை.
5) குளங்கள், வாவிகள், வாய்க்கால்கள், வீதிகளுக்குரிய ஓதுக்குக் காணிகள் சரியாக வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்படாமையாலும் இக்காணிகளை அத்துமீறி ஆட்சி செய்பவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமையாலும் விவசாயிகளும், மீனவர்களும் அதிக சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
6) யுத்த சூழ்நிலை நிலவிய காலத்தில் பயிர்ச் செய்கை செய்யப்பட்ட காணிகளுக்கு தற்போது மீண்டும் விவசாய நடவடிக்கைக்குச் செல்லும் போது அவை காடுகளாக காணப்படுவதால் வனதிணைக்களத்தினால் விவசாயிகள் தடுத்து வெளியேற்றப் படுகின்றனர்.
7) வாய்க்கால்களிலிருந்து அனுதியற்ற முறையில் பெரும்ளவு மணல் அகழப்படுவதனால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு அவற்றின் பரப்பளவு குறைவடைவதோடு, நீர்ப்பாசனம் செய்வதிலும் தடங்கல் ஏற்ப்பட்டு பெருமளவு நீர் விரயமாகின்றது. என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பு கவசம் அணிவது கட்டாயம்- மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு - ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 11:00.07 AM GMT ]
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது, அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பு கருதி இந்த திட்டத்தை அமுல்படுத்த உள்ளோம் என்றார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
எனினும் முன்னர் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ராஜித, பாதுகாப்பு கவசங்களை அணிவதை மீனவர்களுக்கு கட்டாயமாக்குவது செயற்பாட்டு ரீதியானதல்ல என்று தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பில் வெளிமாவட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாவட்ட கடல் பிரதேசத்தில் வெளிமாவட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த இரு வாரங்களாக படகுகளில் வந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து செல்வதாக மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யூன் தொடக்கம் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதி கரை வலையில் மீன்கள் பிடிபடுதுண்டு வழமை. இத்தகைய சூழ்நிலையிலே வெளி மாவட்ட மீனவர்கள் மட்டக்களப்பு கடலுக்குள் பிரவேசித்து சட்ட விரோத மீன்பிடித்தலில் ஈடுபடுவதாக மாவட்ட கரைவலை உரிமையாளர்கள் சங்கம் கூறுகின்றது.
இந்த சட்டவிரோத செயல்பாடுகளினால் குறிப்பாக கரைவலை மீன் பிடித்தலே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை குகதாசன் சுட்டிக்காட்டுகின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்ட விரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் தடை செய்யப்பட்ட சிறிய வலைக்கண்கள் உள்ள வலைகள் மூலம் அரலிய மீன்களை பிடித்து விடுகின்றார்கள். அத்துடன் அந்த அரலிய எனப்படும் சிறிய ரக மீன்களை குறிப்பிட்ட இடங்களில் பெரிய மீன்களுக்கு இரையாகப் பாவித்து பெரிய மீன்களைப் பிடித்துச் செல்கின்றார்கள். இதனால் கரை வலையில் மீன்கள் பிடிபடுவது மிக மிக குறைவாகவே உள்ளது.
வெளிமாவட்ட மீனவர்கள் என்பதற்காகவோ அல்லது வேறு இனத்தவர்கள் என்பதற்காகவோ இதனைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்களது சட்ட விரோத செயல்பாடுகளையே தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட வெளிமாவட்ட மீனவர் பிரதிநிதிகளுக்குமிடையிலான இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று மாவட்ட மீன்பிடி இலாகாவில் அவசர கூட்டமொன்று கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக வெளியேற இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட மீன்பிடி உதவி இயக்குநர் எஸ்.ரி ஜோர்ஜ் தெரிவித்தார்.
தொடர்ந்தும் சட்ட விரோத மீன்பிடித்தலில் அவர்கள் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்களின் மீன்பிடி உபகரணங்கள் தடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட மீன்பிடி உதவி இயக்குநர் எஸ்.ரி ஜோர்ஜ் தெரிவித்தார்.
ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப் பொருளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மன்னார் – வவுனியா காட்டுப் பகுதியிலும், மன்னார் பழைய வீதியிலும் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 80 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப் பொருளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள், செல்லிடப்பேசி உள்ளிட்ட சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் மன்னார் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten