தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

திண்டுக்கல்லுக்கு வந்த விடுதலைப் புலிகள் கடிதம்!

 [ விகடன் ]
திண்டுக்கல்லில் உள்ள சிறுமலையில்தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பெண் புலிகளுக்கு முதன்முதலில் பயிற்சி வகுப்பு நடந்தது.
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நேரடிப் பார்வையில் நடந்த அந்தப் பயிற்சிக்கு, இடம் கொடுத்து உதவியவர், திண்டுக்கல் அழகிரிசாமி. கடந்த 15-ம் தேதி தனது 74-வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அமெரிக்காவில் மகள் வீட்டில் இறந்த அவரது உடல் திண்டுக்கல்லுக்குக் கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரான வடுகபட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.
புலிகள் இயக்கத்துக்காகக் கடைசி வரை பாடுபட்ட அழகிரிசாமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, அவருடைய உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில், 'ஈழத் துணை' என்ற பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த மதிப்பளிப்பைப் பெறும் முதல் தமிழர் அழகிரிசாமி.
அகிரிசாமியுடனான தனது நினைவுகளை பகிர்ந்து ​கொண்டார் பழ.நெடுமாறன். ''1957ம் ஆண்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதன்​முதலாக அழகிரிசாமியைச் சந்தித்தேன்.
அன்று தொடங்கிய நட்பு 56 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. 1984-ம் ஆண்டு, 'புலிகள் இயக்கத்தினருக்குப் பயிற்சி அளிக்க இடம் தேவைப்படுகிறது என, தலைவர் பிரபாகரன் எனக்குக் கடிதம் எழுதினார்.
அப்போது, திண்டுக்கல் சிறுமலையில் இருந்த தனது தோட்டத்தைப் பயிற்சிக் களமாக அளித்தார் அழகிரி.
தொடர்ந்து, தலைவர் பிரபாகரனின் நேரடிப் பார்வையில் பல்லாயிரக்​கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு தாயகம் திரும்பி, போர்களில் ஈடுபட்டனர்.
அரசின் அச்சுறுத்துதலுக்குப் பயப்படாமல், பயிற்சிக்கு இடம் கொடுத்ததுடன் கடைசி வரை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அங்கு வாழும் தமிழர்களிடம் எல்லாம் புலிகளுக்கு ஆதரவு திரட்டியவர் அழகிரி.
இறுதி வரை இயக்கத்துக்காகப் பாடுபட்டவரை, எனக்கு எல்லா வகையிலும் தோள் கொடுத்து நின்ற ஒரு நல்ல நண்பனை, உடன் பிறவா சகோதரனை, எனது நிழலை இழந்து தவிக்கிறேன்'' என்றார் பெரும் சோகத்துடன்.
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...! என்ற வாலியின் வரிகள் அழகிரிசாமிக்கும் பொருந்​தும்.

Geen opmerkingen:

Een reactie posten