தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

வடமாகாண சபை தேர்தல்! தயா மாஸ்டருக்கு ஏமாற்றம்!

மீன்பிடி நாட்களை பகிர்ந்து கொள்ள இந்திய இலங்கை மீனவர்களிடையே இணக்கம்?!
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:24.53 AM GMT ]
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த முயற்சியை வரவேற்றுள்ள இலங்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டிருந்த தலைவர்களை இந்தப் பேச்சுக்களில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றது.
இந்தியத் தரப்பினருடன் ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர் தலைவர்களை உள்ளடக்கிய பேச்சுக்களே அர்த்தமுள்ளவையாக இருக்க முடியும் என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
பல வருடங்கள் மீனவர்களுடன் நெருங்கிச் செயற்பட்டு வந்துள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பை, அரசாங்கம் தனக்கு எதிரான சக்தியாகப் பார்க்காமல், அந்த அமைப்பின் அனுபவம், இந்தப் பிரச்சினையில் அதற்கு உள்ள அக்கறை என்பவற்றைப் பயன்படுத்தி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருக்கின்றது.
இதேவேளை இந்திய இலங்கை மீனவர்களிடையே மீன்பிடிப்பது தொடர்பில் கொள்கையளவில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை செல்லவுள்ள இந்தியக் குழுவுக்கு தலைமையேற்கும் இராமேஸ்வரம் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான தேவதாஸ் கூறுகிறார்.
ஆண்டொன்றுக்கு இந்திய மீனவர்கள் இருநாட்டுக்கும் இடையேயான கடற்பரப்பில் 72 நாட்கள் மீன்பிடிப்பர் என்றும், எஞ்சிய நாட்களில் இலங்கை மீனவர்கள் அதேபோல செய்வார்கள் என்றும் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தேவதாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் இருநாட்டு அரசாங்களும் இதற்கு ஒரு சட்டபூர்வமான அங்கீரத்தை கொடுத்தால் மட்டுமே இதை செவ்வனே நிறைவேற்ற வழியேற்படும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கைக்கு செல்லவுள்ள இந்தியக் குழுவினர் அங்கு மீனவர்கள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தேவதாஸ் தெரிவித்தார்.
வாகரையில் டைனமைற் பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது
மட்டக்களப்பு வாகரை காயான்கேனி கடல் பரப்பில் சட்டவிரோதமான முறையில் டைனமெற் வெடிப்பொருளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனைக்காக எடுத்து வந்த விற்பனையாளர்களை தாம் கைப்பற்றியுள்ளதாக வாகரை பொலிஸ் பரிசோதகர் ரி.ஜெயசீலன் தெரிவித்தார்.
நேற்று ஓட்டமாவடிப் பகுதியைச் சேர்ந்த இருவர் முச்சக்கரவண்டியில் 190 கிலோ கிராம் அளவிலான மீன்களை சந்தைக்கு கொண்டு செல்லும் போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காயான்கேணி பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து முச்சக்கர வண்டியும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சந்தேக நபர்கள், முச்சக்கர வண்டி போன்றவற்றை இன்று திங்கள்கிழமையன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தல்! தயா மாஸ்டருக்கு ஏமாற்றம்!
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:12.27 AM GMT ]
இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தகைமை உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வாய்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
வடக்கே ஐந்து நிர்வாக மாவட்டங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும், எதிர்வரும் 31-ம் திகதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
யாழ் மாவட்டத்தில் 7 பேரைத் தான் சுதந்திரக்கட்சி களமிறக்குகிறது.
மற்றவர்கள் ஈபிடிபியிலிருந்தும் அகில இலங்கை முஸ்லிம் கட்சியிலிருந்தும் இடதுசாரி கட்சியிலிருந்தும் போட்டியிடுவார்கள்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும், வெற்றி பெறத் தகுதியானவர்களைத் தான் சுதந்திரக் கட்சி தேர்ந்தெடுத்திருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, தாம் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக சக வேட்பாளரான அங்கஜன்  என்பவரே தனக்கு அறிவித்ததாகவும், கட்சியின் தலைமைப்பீடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தமிழோசையிடம் கூறினார்.
இறுதி நேரம் வரை பட்டியலில் தமது பெயர் இடம்பெறுமென்றே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.
சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தாம் அக்கட்சியின் உறுப்புரிமையை பெற்று தேர்தலில் போட்டியிட முன்வந்ததாகவும், தற்போது தனது வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் அக்கட்சியில் இருக்கவே விரும்புவதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.
ஒரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ள நிலையில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தான் அக்கட்சியில் இருந்துகொண்டே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான உதவிகளை வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten