தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

13 வது திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்! இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக சத்தியாகிரகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு பிரதிநிதியை தெரிவு செய்யும் அதிகாரம் உயர்கல்வி அமைச்சருக்கு இல்லை: சஞ்ஜீவ பண்டார
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 02:50.33 PM GMT ]
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது வெகுஜன அமைப்பு என்பதால், அதற்கான பிரதிநிதியை நியமிக்கும் அதிகாரம் உயர்க்கல்வி அமைச்சருக்கோ, பல்கலைக்கழக உபவேந்தருக்கோ, பொலிஸூக்கோ கிடையாது என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார்.
கங்கொடவில நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்ட பிறகு கொழும்பு மருதனையில் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெகுஜன அமைப்பின் பிரதிநிதியை நியமிப்பது அந்த அமைப்பில் இருக்கும் அங்கத்தினரேயன்றி வேறு தரப்பினரல்ல.
தற்பொழுது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறி, அவர்களிடம் விசாரணை நடத்தும் அளவுக்கு சட்டம் செயற்படுத்தப்படுகிறது.
எந்த தடைகள் வந்தாலும் இந்த அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் என்றார்
13 வது திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்! இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக சத்தியாகிரகம்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 04:26.13 PM GMT ]
இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் அதற்கு தற்போது இலங்கையில் எதிர்ப்பு நிலவுகின்றது.
இதனையிட்டு தேசிய இயக்கங்களின் ஒன்றியம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது.
இன்று முற்பகல் தொடக்கம் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டம் காரணமாக காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த பண்டார கருத்து வெளியிடுகையில், 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை துரிதமாக ரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோன்று இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் விடுக்கப்படும் அழுத்தங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
'மாகாணசபை அதிகாரங்களை ஒழிப்பதற்கு இந்தியா தடை போட முடியாது'
26 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் (ஜுலை 29ம் திகதி) இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜயவர்தனவுக்கும் இடையே கைச்சாத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று நடந்துள்ளது.
தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் இந்தப் போராட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட கடும்போக்கு தேசியவாத அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் அமைத்திருக்கின்ற நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் முடிக்கப்படாவிட்டால் தேர்தலை பிற்போட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் தொடர்பில் இந்தியா இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணசபையின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முயற்சியில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, கண்டியிலும் தலதா மாளிகை வளாகத்தில் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனமும் பல்வேறு பௌத்த அமைப்புகளும் 13-ம் திருத்தத்துக்கு எதிராக வழிபாடு நடத்தியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten