தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

சர்ச்சைக்குரிய களத்தில் நுழையும் இராணுவம்!


காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஏற்பாடுகள்- வேம்பிராய் குடிநீர் விநியோகத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 09:22.15 AM GMT ]
யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க சொத்துக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் பொருட்டு 1.5 பில்லியன் ரூபாய் நிதி முதலிடப்படவுள்ளது. குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலப் பகுதியில் தொழிற்சாலையை இயக்கப்படும்.
தொழிற்சாலையில், நாள் ஒன்றுக்கு 50 கிலோகிராம் எடை கொண்ட 12 ஆயிரம் சீமெந்து மூடைகளை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னர், இலங்கையில் சீமெந்தின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் எதிர்பாக்கப்படுகின்றது.
வேம்பிராய் குடிநீர் விநியோகத்தை வரணி வடக்குவரை விரிவுபடுத்தக் கோரிக்கை
சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட வரணி கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வரணி வடக்கு மாசேரி இடைக்குறுச்சி போன்ற பகுதி மக்கள் குடிநீர் பெறுவதற்கு பல் வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இப்பகுதிகளில் காணப்படும் நன்னீர்க் கிணறுகள் நீர் வற்றி விடுவதும், சில நீர்க் கிணறுகள் பழுதடைந்து பாவிக்க முடியாமல் இருப்பதனாலும் இப்பகுதி மக்கள் நன்னீர் பெறுவதற்கு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும் வேம்பிராயில் இருந்து மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகமானது வரணி மகா வித்தியாலம் மட்டும் வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தினை வரணி வடக்கு வரை குழாய் பொருத்தி நீர் பெற வசதியேற்படுத்தித் தரவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் பெறுவதற்கு நீண்ட தூரம் சென்றே நீரினைப்பெற வேண்டியுள்ளது.
எனவே வேம்பிராயில் இருந்து குழாய் மூலம் குடிநீர் பெறும் திட்டத்தினை வரணி வடக்கு வரை நீடித்தால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிதும் நன்மையடைவார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து குடிநீர் பெற வசதியேற்படுத்தித்தர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய களத்தில் நுழையும் இராணுவம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 06:20.05 AM GMT ]
இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அடுத்த மாதம் முதலாம் திகதி கூட்டுப்படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார். போர் முடிவுக்கு வந்த இரண்டே மாதங்களில் 2009 யூலை 15ல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட இவர் இலங்கை இராணுவத் தளபதி பதவியை நெடுங்காலம் வகித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இலங்கை இராணுவத்திலிருந்த இப்போதும் இருக்கின்ற போர்முனைச் செயற்பாடுகளில் பிரபலம் வாயந்த தளபதிகள் மத்தியில் இவர் ஒன்றும் அந்தளவுக்கு வல்லமையானவர் அல்ல.
ஆனால் அரசாங்கத்துடன் சரத் பொன்சேகா முரண்பட்டுக் கொண்டதாலும் அவருடன் கணிசமான அதிகாரிகள் இராணுவத்தை விட்டு வெளியேறியதாலும் வெளியேற்றப்பட்டதாலும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவுக்கு இராணுவத் தளபதி பதவி கிடைத்தது.
அதுமட்டுமன்றி இந்தப் பதவியை சுமார் நான்கு ஆண்டுகள் வகிக்கும் சந்தர்ப்பமும் அவருக்குக் கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான்.
இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் இதுவரை தளபதிகளாக இருந்த மூன்று பேர் தான் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பதவியை வகித்துள்ளனர்.
1967ம் ஆண்டு தொடக்கம் 1977ம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் இராணுவத் தளபதியாக இருந்தவர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல.
இராணுவத் தனபதி பதவியை வகித்த முதல் இலங்கையரான மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துக்குமார் 1955ம் ஆண்டு தொடக்கம் 1959ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் 10 மாதங்கள் இந்தப் பதவியில் இருந்தார்.
இவர்களையடுத்து ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தான் நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக இராணுவத் தளபதியாக இருந்தவர்.
இந்தப் பதவியில் இருக்கும் போதே சரத் பொன்சேகாவுக்கு நிகரான ஜெனரல் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டு விட்டது.
போரில் வெற்றி பெற்றதும் சரத் பொன்சேகாவுக்கு ஜெனரல் பட்டம் அளிக்கப்பட்டது.
அப்போது இராணுவத் தளபதியாகப் பதவியில் இருக்கும் போதே ஜெனரல் பட்டத்தைப் பெற்ற ஒரேயொருவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.
அந்தப் பெருமையை நீக்க வேண்டும் என்பதால் ஜெகத் ஜெயசூரிய இராணுவத் தளபதியாக இருக்கும் போது அவருக்கும் ஜெனரல் பட்டம் அளிக்கப்பட்டது.
அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் தலைவலி கொடுக்கக் கூடியவராக இல்லாத இவரது இயல்பினால் கூட்டுப்படைகளின் தளபதி பதவியும் இவரைத் தேடி வந்தது.
இம்மாத இறுதியுடன் இராணுவத் தளபதி பொறுப்பிலிருந்து அவர் விலகிக் கொண்டதும் அடுத்த இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க அந்தப் பதவியைப் பொறுப்பேற்பார்.
புதிய இராணுவத் தளபதி பதவியேற்புடன் இலங்கை இராணுவத்தின் உயர்மட்டக் கட்டளை அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தநிலையில் இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகவுள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அண்மையில் வெளியிட்ட தகவல் ஒன்று பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளில் உள்ளது போன்று இலங்கை இராணுவமும் லாபமீட்டும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான அமைச்சரவை அனுமதிக்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை இராணுவம் லாபமீட்டும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது என்பது வேறு விடயம்.
ஈரான், ரஷ்யா, சீனா இராணுவங்களைப் போன்று செயற்பட நினைப்பதென்பதும் வேறு விடயம்.
இந்த நாடுகளின் இராணுவங்களில் ஏனைய நாடுகளினது இராணுவங்கள் அழைக்கப்படுவது போன்று அழைக்கப்படுவதில்லை.
ஈரானில் புரட்சிக் காவல் படை என்றும் சோவியத் ரஷ்யாவில் செஞ்சேனை என்றும் சீனாவில் மக்கள் விடுதலைப் படை என்றும் அழைக்கப்படும் வழக்கம் உள்ளது.
இந்த நாடுகள் அனைத்துமே மேற்கு நாடுகளுக்கு எதிரான போக்கையும் கடும்போக்கு இராணுவ வாதக் கொள்கையையும் கடைப்பிடிப்பவை.
இந்த நாடுகளின் முன்னுதாரணத்தை பின்பற்ற இலங்கை முற்படுவதுதான் பல்வேறு தரப்பினரிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
லாபமீட்டும் தொழில் முயற்சிகளில் இராணுவம் ஈடுபடுவதற்கு அளிக்கப்படும் அனுமதியானது எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையையே இலங்கையிலும் ஏற்படுத்தும் என்று ஐதேக எச்சரித்துள்ளது. ஏற்கனவே இராணுவத்தில் சேவையிலுள்ள அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளே அரசாங்க சேவைகளில் கணிசமாக புகுத்தப்பட்டுள்ளனர்.
எந்தத்துறையை எடுத்துக் கொண்டாலும் அதற்குள் இராணுவ சேவையில் இருந்தவர்கள் இருப்பவர்களின் ஆதிக்கமே உள்ளது. வெளிவிவகாரச் சேவையில் கூட இராணுவச் செல்வாக்கே மேலோங்கி வருகிறது.
இரண்டு லட்சம் பேரைக் கொண்ட இராணுவத்தைக் கட்டிக்காப்பதில் அரசாங்கத்துக்கு நெருக்கடி உள்ளது என்பதற்காக அவர்களை லாபமீட்டும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்தப்படுவது ஆபத்தானது என்கிறது ஐதேக. இலங்கையைப் பொறுத்தவரையில் போர்க்காலத்தில் 2 லட்சம் படையினர் தேவைப்பட்டது உண்மை.
ஆனால் இப்போது அந்தத் தேவை இல்லை. ஆனாலும் இராணுவத்தை நிலையாகப் பராமரிக்கத் திட்டமிட்டுள்ளது அரசாங்கம். 2 லட்சம் படையினரை கட்டியாள்வது ஒன்றும் சுலபமான விடயமல்ல. இந்தப் பிரச்சினையை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று படைக்குறைப்புச் செய்வது.
பொருளாதார நெருக்கடியால் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த வழியை இப்போது பின்பற்றுகின்றன.
இரண்டாவது அவர்களை இராணுவத்தில் வைத்துக் கொண்டே வேறு பணிகளில் ஈடுபடுத்துவது. இரண்டாவது வழியைத்தான் அரசாங்கம் கையாள முனைகிறது.
இந்த வழிமுறையை சீனா, ஈரான் போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன.
அங்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும் இராணுவத்துக்கான வளங்கள் ஒதுக்கப்பட்டு படைபலம் பாதுகாக்கப்படும்.
அதேவேளை படையினர் உற்பத்தி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
இலங்கை அரசாங்கத்துக்கு 2லட்சம் படையினரை பராமரிக்க வேண்டிய தேவை இல்லாத போதிலும் உடனடியாகப் படைக்குறைப்புச் செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் சிக்கலானது.
அதனால்தான் சீனா, ஈரான் போன்று லாபமீட்டும் தொழில்களில் ஈடுபடும் ஆர்வத்தை அது கொண்டுள்ளது. சீனாவைப் பொறுத்தவரையில் ரியல் எஸ்டேட் துறையில் சீன இராணுவ நிறுவனங்கள் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகின்றன.
ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளிலும் பல்வேறு பாதுகாப்பு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. ஒருவகையில் இது இந்த நாடுகளின் அபிவிருத்திக்கான பங்களிப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் அந்த நாடுகளில் தேசிய பாதுகாப்பு நலன்களை பாதுகாக்கவும் பலத்தை அதிகரிக்கவும் பெருமளவிலான நிறுனங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்று இராணுவத் தனபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவே குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. தேசிய பாதுகாப்பு நலன்களை காரணம் காட்டி பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக நிமிர்ந்து கொள்ள இராணுவம் விரும்புகிறது என்பது இதன் மறைப்பொருள்.
இது ஜனநாயக நாடுகளைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளப்படாத செயன்முறை.
ஏனென்றால் பாதுகாப்புத்துறை முக்கிய சக்தியாக இருந்தாலும் அது அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக வளர்வதற்கு இடமளித்து விடும் என்று ஜனநாயக நாடுகள் கருதுகின்றன.
இலங்கை அவ்வாறு கருதியிருந்தால் இத்தகைய யோசனை ஒன்றை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கும் அளவுக்குச் சென்றிராது.
இராணுவத்தைச் சார்ந்த கடும்போக்கு இராணுவ நிலைப்பாட்டைக் கொண்ட பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு அரசாங்கத்தில் அதிகமாக இருப்பதால் இதனைச் சுலபமாகவே கையாள முடிகிறது.
ஆனால் இந்தப் பதவிக்கு ஒரு சிவில் அதிகாரி நியமிக்கப்பட்டாலோ அல்லது வேறொரு அரசாங்கம் பதவிக்கு வந்தாலோ இராணுவத்துக்கு இந்தளவுக்கு இடமளிக்க அனுமதிக்கப்படும் என்று கருதுவதற்கு இல்லை.
இன்னொரு பக்கத்தில் பொருளாதார ரீதியாக லாபமீட்டும் தொழில்களில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டால் அது ஏனைய நிறுவனங்களுடனான தொழில் போட்டியை சாதாரணமான முறையில் அணுகுவதற்கும் வாய்ப்புகள் குறைவு.
இதனால் நிறுவனங்களின் தொழில் சுதந்திரம் பாதிக்கப்படும்.
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு வடக்கில் பொருளாதார முயற்சிகளில் இராணுவத்தின் தலையீட்டை கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தப் பொருளாதார செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடுவதால் சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை இலங்கை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஜீன் லம்பேர்ட தெரிவித்திருந்தார்.
இலங்கை இராணுவம் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற சூழலில் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொழில் முயற்சிகளுக்கு வருவதை மேற்குலக நாடுகள் விரும்பாது என்பது இவரது கருத்தில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
பங்களாதேஸில் தொழிலாளர் உரிமைகள் மீற்ப்படுவதால் தான் அந்த நாட்டுக்கான வர்த்தக சலுகைகள் நிறுத்தப்பட்டன.
இலங்கைக்கும் கூட அத்தகைபய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் போருடன் தொடர்புபட்டிருந்த படையினரைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் தொழில் முயற்சிகளுக்கு வருவதை தம்முடனான உடன்பாடுகளுக்கு முரணானது என்று மேற்கு நாடுகள் கருதலாம்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எதிர்ப்பை மீறி இலங்கை இராணுவத்துக்கு லாபமீட்டும் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கலாம்.
ஆனால் அது நாட்டின் அபிவிருத்திக்கான பொருளாதார பங்களிப்புக்கான முயற்சி என்று கூறப்பட்டாலும் கூட சீன, ஈரானிய முன்னுதாரணங்களே சர்வதேச அரங்கில் முதனமைப்படுத்தப்படும்.
அதுவும் இந்த இரு நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ள இலங்கைக்கு சர்வதேச அரங்கில் புதிய பிம்பம் ஒன்றையே காண்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten