தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

பௌத்த தேரர் ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள்

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மீது இனந்தெரியாதநபர் தாக்குதல்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 11:44.44 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா, இனந்தெரியாத நபரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் மாலக்க சில்வாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்கேன் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பில் உள்ள பிரதான வர்த்தக நிலையம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றிலேயே மாலக்க சில்வா காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளது என பொலிஸார் கூறினர்.
பௌத்த தேரர் ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 11:25.07 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வருவதில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கெவிலியா மடுக்கிராமத்தில் அம்பாரை மாவட்டத்தினைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களை அத்து மீறிக் குடியேற்றியுள்ளமையினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அக்கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவருகின்ற தமிழ், சிங்கள மக்களையும் சந்தித்த பின்னர் அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தெடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கெவிலியா மடுக்கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு கிராமம் என்பதுடன் பூர்வீகமான தமிழ்க் கிராமமும் ஆகும். இவர்கள் 1970 ம் ஆண்டு பகுதியில் குடியேறி சேனைப்பயிர் மற்றும் வேளாண்மை பயிர்களைச் செய்து வந்த நிலையில் யுத்த சூழ்நிலையினால் பலதடவைகள் இடம் பெயர்ந்து இன்று குடியேறியுள்ளனர்.
தற்போது போர் முடிந்தாலும் அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்படாததனால் தற்போது அங்கு 21 குடும்பங்கள் மாத்திரந்தான் வசித்து வருகின்றனர். ஏனைய மக்கள் களுதாவளை, மண்டூர், தேற்றாத்தீவுப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கெவிலியா மடுவில் 227 பெரும்பான்மை இனத்தவர்கள் ஆரம்பத்தில் இருந்து வாழ்ந்து வரும் அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்காளர்களாகவும் பதியப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் வசித்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட பெரும்பாண்மைக் குடும்பங்கள் கெவிலியா மடுவில் குடியேற்றப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானவையாகும் இதனை தமிழ்க் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
இதனைத் தடுப்பதற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் நீதிமன்றம் சென்று அத்து மீறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வெளியேறக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டும் அவர்கள் வெளியேறவில்லை. இன்று நான் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் அங்குள்ள குடிசைகளை அவதானிக்க முடிந்தது. அதே வேளை கெவிலியா மடுவில் நிரந்தரமாக வசிக்கும் பெரும்பான்மை மக்களும் அத்துமீறியுள்ளமையினை உறுதி செய்தனர்.
அத்து மீறியவர்களையும், குடியேற்றத்தினையும் தடுப்பதற்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அத்து மீறியவர்களுக்கு பௌத்த மதகுரு ஒருவர் திரை மறைவில் உதவிகளைச் செய்து வருவதனை அறியமுடிகிறது.
அதேவேளை நீதிமன்றத்தினால் வெளியேற கட்டளையிடப்பட்ட பலருக்கு கல் வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளையும் அவரே கட்டிக் கொடுத்ததாக அறியமுடிகிறது.
இவ்வாறு சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு நாட்டினுடைய சட்டத்தினை குழிதோண்டிப் புதைக்கும் நிலையிலே செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும். ஆகையால் அரசாங்கம் இந்தவிடயத்தில் தலையிட்டு சட்டத்திற்கு முரணாக அத்து மீறிக் குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten