தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் இலஞ்சம் பெற்ற இரு பொலிஸார் கைது - சிறுவர் பாதுகாப்பு ஓய்வூதியம் அறிமுகம்

உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஓய்வூதியம் வரை மாதாந்த சம்பளம் வழங்க கோரிக்கை - வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 05:18.29 AM GMT ]
கடமை நிமித்தம் சென்று உயிரிழந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய வயதெல்லை வரை மாதாந்த சம்பளத்தினை தொடர்ந்து வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர்களின் குடும்பத்தின் கஷ்ட நிலையினை போக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினாலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடமை நிமித்தம் கொழும்பில் இடம்பெற்ற 'ரட்ட விருவோ' பயிற்சிப் பட்டறைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனம் கடந்த ஜுலை 12ஆம் திகதி மன்னம்பிட்டியில் வைத்து விபத்துக்குள்ளானது.
இதனால் மூன்று பேர் உயரிழந்தனர். இவர்களுக்கான மதாந்த சம்பளம் தொடர்ந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் சமுர்த்தி உத்தியோகத்தர்களை திவிநெகும திட்டத்தினுள் உள்வாங்கும் திட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது மாதாந்த சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்படுவதாலும் கடமை நிமித்தம் சென்று உரிழந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஓய்வூதிய வயதெல்லை வரை அவர்களுக்குரிய மாதாந்த சம்பளத்தினை வழங்கவும்.
இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களின் கஷ்ட நிலையினை போக்குமாறும்" அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய தலைவர், செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர், வாழைச்சேனை மற்றும் கிரான் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாகரைப் பிரதேச வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்
வாகரைப் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு ஆர்வமுள்ள வறுமை நிலையில் கல்வி பயிலும் மாணவர்களில் 25 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான புலமை பரிசில் வழங்கும் திட்டம் வாகரை பொலிஸ் பரிசோதகர் பாலித்த ஜெயரட்னாவின் தலைமையில் நேற்று திங்கள்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரி மெவன் சில்வா, பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுலநாயகி, வாகரைக் கல்வி வலய கோட்டக்கல்வி அதிகாரி ச.பரமேஸ்வரன், 233ஆவது படைப்பிரிவின் தளபதி கேர்ணல் தம்மிக ஹேவகே, வாழைச்சேனை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன. எம்.ஆர்.ஓ. நிறுவன பணிப்பாளர் ரசல் ஜயதிலக மற்றும் அரச சமூக நிறுவன உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பல்கலைக் கழகம் சென்று கல்வி பயிலும் காலம் வரை அவர்களுக்கான உதவி வழங்கப்படும். எதிர்காலத்தில் மேலும் பல மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு மேற்படி உதவி வழங்கப்படும் என்று வாகரை பொலிஸ் பரிசோதகர் பாலித்த ஜெயரட்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் இலஞ்சம் பெற்ற இரு பொலிஸார் கைது - சிறுவர் பாதுகாப்பு ஓய்வூதியம் அறிமுகம்
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 05:48.39 AM GMT ]
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி நடத்துனரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ் நடத்துனரிடம் 3 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற புத்தளம் மாவட்டம் முந்தல் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12.30 அளவில் புத்தளம் - சிலாபம் வீதியில் பந்துலுஓய சந்தியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள்கள் முந்தல் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் சேவையாற்றி வந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இரவில் செல்லும் பஸ்களிடம் இருந்து இலஞ்சம் பெற்று வருவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
சிறுவர் பாதுகாப்பு ஓய்வூதியம் யாழ்ப்பாணத்தில் அறிமுகம்
யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு சபையின் யாழ் மாவட்ட அதிகாரி ச.பிரதீபன் தெரிவித்தார்.
1 முதல் 18 வயது வரையான சிறுவர்களுக்கான இவ் ஓய்வூதிய திட்டத்தில் தேசிய சேமிப்பு வங்கியில் சுமார் சிறுதொகை பணத்தினை மாதாந்தம் வைப்பிலிடப்பட வேண்டும். அவ்வாறு வைப்பிலிடும் பணத்திற்கான வட்டி வீதம் மற்றும் பணத்தினை இலங்கை பாதுகாப்புச் சபை மாற்றி அதை சிறுவர்களுக்கான ஓய்வுதிய திட்டமாக நடை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இத்திட்டத்தில் சிறுவர்கள் தமது ஓய்வு நிலை வயதினை எட்டியவுடன், தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பிலிட்ட பணத்தினையும், வட்டி வீதத்தினையும், மாதாந்த ஓய்வுதியமாக 40 ஆயிரம் ரூபாவரை இலங்கை சமூக பாதுகாப்பு சபை வழங்கும்.
இந்த ஓய்வூதியம், வயோதிப நிலையை அடைந்து இறக்கும் காலம் வரைக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஓய்வூதியம் போன்று வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten