தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டவர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவங்கள்!- த.தே.கூட்டமைப்பு கண்டனம்

தமிழக மீனவர்கள் குழு இலங்கை வரவுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 02:46.49 PM GMT ]
தமிழக மீனவர்கள் குழு ஒன்று அடுத்த மாதம் முதல் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அழைப்பின் பேரில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் 19 பேர் வரை அங்கம் வகிப்பதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏற்கனவே இந்தியா சென்றிருந்த போது, இந்த குழுவினர் அவரை சந்தித்திருந்தனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் அவர்கள் இலங்கை விஜயம் செய்யவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களின் மீனவர் சமூகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டவர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவங்கள்!- த.தே.கூட்டமைப்பு கண்டனம்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:35.05 AM GMT ]
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றமை மோசமான தேர்தல் மோசடி நடைபெறவுள்ளமைக்கான எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்படி மாவட்டங்களிலிருந்து இராணுவத்தினரால் சிவில் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவர்கள் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வடக்கில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
கடந்த 2012ம் ஆண்டு இராணுவத்தின் சிவில் தொடர்புகளுக்கான அலுவலகங்கள் ஊடாக அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கான அனுமதி கடிதங்கள் கூட இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கடிதங்களில் தற்காலிக பணி என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதைவிட இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தற்போது சாந்தபுரம், தேராவில், தேறாங்கண்டல் முக்கொம்பன் போன்ற இடங்களில் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் பண்ணைகளிலும் முன்பள்ளி ஆசிரியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
 மேலும் இவர்களே கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதேபோல் இவர்கள் அரசாங்கம் சார்ந்த அரசியல் கட்சிகளினாலும், இராணுவத்தினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தபால் மூல வாக்களிப்பில் தாம் குறிப்பிடுபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
எனவே நீதியான, சுதந்திரமான வாக்களிப்பு இடம்பெறுவது சாத்தியமற்றது.
தபால் மூல வாக்களிப்பு நேரடியாக தேர்தல் பணிகளுடன் தொடர்புபட்டு வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல கால அவகாசம் இல்லாத அரசாங்க ஊழியர்களுக்கே வழங்கப்படுகின்றது.
எனவே என்ன அடிப்படையில் சிவில் பாதுகாப்பு படை பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றது என்பது குறித்து அனைவருக்குமே தெரியும்.
இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவர்களும் சாதாரண மக்களே. அவர்கள் சுதந்திரமாக வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்குள்ள அவர்களுடைய வாக்களிக்கும் உரிமை நசுக்கப்படக் கூடாது.
இந்த விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும்.
மேலும் இவ்விடயம் குறித்து கட்சியின் உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.
எனவே இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten