தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட ஆவணப்படம் வெளியீடு

மூன்று மாகாணங்களிலும் அரசு தோல்வியை சந்திக்கும்: ஹேமகுமார நாணயக்கார - திருட்டை மறைக்கவே சிலர் அரசுடன் இணைகின்றனர்: ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 08:19.25 AM GMT ]
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தோல்வியில் இருந்த தப்பித்து கொள்ள அரசாங்கம் பல தந்திரோபாயங்களை செய்து, தோல்வியான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு இன்று மிகவும் வலுவிழந்த நிலைமைக்கு சென்றுள்ளது. துரும்புச்சீட்டுகள் முடிந்து, போலியான துரும்புச் சீட்டுகளை பந்தயத்தில் இறக்கி வருகிறது.
இந்த அரசாங்கம் தற்போது மிகவும் வலுவிழந்துள்ளதால் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குகிறது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசு தோல்வியடையும். வடமேல் மாகாணத்திலும் தோல்வியடையும். மத்திய மாகாணத்திலும் தோல்வியடையும்.
மக்களின் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதால் அரசு இந்த தேர்தலில் தோல்வியை சந்திக்கும். மூன்று மாகாணங்களில் உள்ள மக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்து வீட்டுக்கு அனுப்பி வைக்க தயாராகி வருகின்றனர்.
எதிர்க்கட்சியில் இருந்த ஒரு முக்கியமான பிரபலமான நபரை தன் பக்கம் இழுத்து அரசாங்கம் வேட்புமனு என்ற பலகையை பலமாக பொருத்தியுள்ளது.
தேர்தலில் பந்தய குதிரைகளை களமிறங்கி தேர்தலில் வெற்றிப் பெற அரசு முயற்சித்து வருகிறது. அந்தளவுக்கு அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது என்றார்.
திருட்டை மறைக்கவே சிலர் அரசுடன் இணைகின்றனர்: ஐ.தே.க
ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து எவராவது ஆளும் கட்சிக்கு சென்றால், அவர்கள் தமது இருப்பை பாதுகாத்து கொள்ளும் அரசியலில் ஈடுபடவே செல்கின்றனர் என தென் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த புஷ்பகுமார தெரிவித்தார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்திற்கு தாவும் அனைவரும் திருடர்கள். திருடர்களின் தவறுகள் அடங்கிய கோவைகளை மறைப்பதற்காகவே அவர்கள் அரசுடன் இணைக்கின்றனர்.
கடந்த காலங்களிலும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொண்டனர். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் ஐ.தே.கட்சிக்கு வந்தனர். கட்சியில் உள்ள சகலருக்கும் செல்ல முடியும். அதுபோல் வரவும் முடியும்.
கரு ஜயசூரிய 14 பேரை அழைத்து கொண்டு அரசுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தார்.
சிலர் 35 வயதிலும் 40 வயதிலும் கட்சியின் தலைவராக முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு மூளையில் கோளாறு உள்ளது.
கிராமத்தில் உள்ள மரண உதவி சங்கத்தில் கூட நினைதாற் போல் தலைவராகி விட முடியாது.
அரசுடன் இணைந்து கொள்ள விரும்புபவர்கள், ரணிலை கெட்டவார்த்தைகளால் திட்டிவிட்டு, சஜித்திடம் செல்வார்கள். அங்கிருந்து அரசுக்கு தாவிவிடுவார்கள் என நிஷாந்த புஷ்பகுமார தெரிவித்தார்

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட ஆவணப்படம் வெளியீடு
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 08:47.43 AM GMT ]
 தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள “அறப்போர்” ஆவணப்படம் எதிர்வரும் ஜூலை 28ம் திகதி சென்னையில் வெளியிடப்படுகின்றது.
2013 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணைய அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது என்றவுடன் “அந்தத் தீர்மானம் ஒரு ஏமாற்றுத் தீர்மானம், அதை இந்தியா ஆதரிக்கக் கூடாது” என்று கிளம்பியது மாணவர்கள் போர்க்குரல். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை இலயோலாக் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர், கடந்த மார்ச் 8ம் திகதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பற்றிப் பரவத் தொடங்கியது.
“மாணவர்களின் போராட்டம், டெசோவுக்கு ஆதரவானது, மாணவர் போராட்டம் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கிறது” என்று தி.மு.கவும், தி.மு.க ஆதரவு ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்கத் தீர்மான நகலை எதிர்த்தனர். ஒரு கட்டத்தில் “அந்தத் தீர்மானமே இந்தியாவின் ஒப்புதலோடுதான் தயாரிக்கப்பட்டது” என்று அமெரிக்கா பின்வாங்கியது. இது மாணவர் போராட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழினப் படுகொலைக்கு நேரடியாக உதவி செய்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. இந்த மாணவர் போராட்டத்தின் வீச்சைக் கண்டு அஞ்சிய தி.மு.க தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலை வந்துவிடுமோ என்று அஞ்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இந்த மாணவர் போராட்டம் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்தது. மாணவர்கள் பேருந்துகள் மீது கல்லெறியவில்லை. அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவில்லை.
தமிழக வரலாற்றில் முதல் முதலாக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். வரலாறு காணாத இந்த மாணவர் போராட்டத்தினை அதன் போக்கில் ‘அறப்போர்’ ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.
இப்படத்தை, செங்கொடி மீடியா ஓர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் திரு. சி.கபிலன் தயாரித்துள்ளார். மூன்று தமிழர் உயிர்காக்க தீக்குளித்த காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்வைப் படம்பிடித்த ”இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்பட இயக்குநரும், பத்திரிக்கையாளருமான திரு. வே.வெற்றிவேல் சந்திரசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் தமிழர் அல்லாதவர்களிடம் தமிழீழக் கோரிக்கையின் தேவையை உணர்த்தும் நோக்கில் இந்த ஆவணப்படம் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானீஷ், இத்தாலி மொழி சப் டைட்டில்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, சென்னை - அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் 28.07.2013 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகின்றது. இயக்குநர் அமீர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிகழ்வுக்குத் தலைமையேற்க, உணர்ச்சிப்பாவலர்  காசி ஆனந்தன் ஆவணப்படத்தை வெளியிட, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். இயக்குநர் ம.செந்தமிழன் கருத்துரை வழங்குகிறார்.
ஏற்கனவே, இந்த ஆவணப்படம் தமிழீழத் தமிழர்கள் அதிகம் வாழும் சுவிசர்லாந்தில் இரண்டு முறை திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னையில் நடக்கவுள்ள, இவ் ஆவணப்பட வெளியீட்டு விழாவில், தமிழீழ ஆதரவாளர்களும், மாணவர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென ஆவணப்பட வெளியீட்டு விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten