தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

தொடர் தோல்வியில் முஸ்லிம் காங்கிரஸ்!



நாங்கள் தான் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்று மார்தட்டி வந்த மு.கா நடந்து முடிந்துள்ள மத்திய, வட மேல் மாகாணத் தோதல்களில் மு.கா. தனியாகக் களமிறங்கி 3 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
மு.கா எப்போதும் ஐ.தே.க.யின் குடையின் கீழ் அந்தக் கட்சியின் நிழலில்தான் கடந்த 13 வருடங்களாக மறைந்து கொண்டு மு.கா சின் வெற்றியென்று மார்தட்டி வந்த மு.கா சின் உண்மையான வெற்றி என்ன என்பது இம்முறை மு.கா தனியாகப் போட்டியிட்டு மு.கா.சின் ஆதரவு இவ்வளவுதான் என்பதை நன்றாக தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக மு.கா.முஸ்லிம்களினால் நிராகரிக்கப்பட்ட கட்சியாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டியில் முஸ்லிம்கள் படுதோல்வி
கண்டியில் மாவட்டத்தில் 1.40.000 முஸ்லிம் வாக்குகளும், மாத்தளையில் 38.000 முஸ்லிம் வாக்குகளும், நுவரெலயாவில் 25.000 வாக்குகளாக 2 இலட்சத்தி 3 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றது. ஆனால் இத்தனை வாக்குகள் இருந்தும் ஐ.தே.க.சார்பாக 2 ஆசனமும் மு.கா சார்பாக ஒரு ஆசனம் மட்டும்தான் முஸ்லிம்களால் பெற முடிந்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்கள் படுதோல்வி
புத்தளம் மாவட்டத்தில் மு.கா.10,730 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது.  புத்தளத்திலும் மு.கா.தப்பிப் பிழைத்து ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் மு.கா வுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளது.
இது மு.கா சின் தேய்வு நிலையைக் காட்டுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் 17,130 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
வடமேல் மாகாணத்தில் மு.கா. 27,860 வாக்குகள் பெற்று 2 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. வடமேல் மாகாணத்தில் மு.கா. தனியாக களம் இறங்கியதால் அங்கு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
ஊவாவில் படுதோல்வி
நாட்டில் கடைசியாக நடந்துள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீனின் அகில இலங்கை காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிட்டது.
ஊவாவில் முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் அரசாங்கம் ஹக்கீம் ரிஷாத் பதியுதீன் அணியை இணைந்து போட்டியிடுமாறு இணைத்துக் கொடுத்தது.
ஆனால் முஸ்லிம் மக்கள் ஹக்கீம் ரிஷாட் ஆகிய இருவரையும் ஒதுக்கிவிட்டு ஐ.தே.க.வுக்கு வாக்களித்தார்கள். இருவரையும் தோற்கடித்துள்ளார்கள். இருவரும் இணைந்து ஒரு கொடியின் கீழ் போட்டியிட்ட போதும் இருவரும் படு தோல்வியடைந்துள்ளார்கள். ஒரு ஆசனம் கூட இவர்களால் வெல்ல முடியவில்லை.
முஸ்லிம்களை வழி நடத்தத் தவறிய முஸ்லிம் அரசியல்வாதிகள்
ஆனால் மு.கா சரியான வியூகத்தை வடித்துச் செயல்பட்டிருக்குமேயானால் மத்திய மாகாணத்தல் மு.கா குறைந்தது 3 ஆசனங்களையும் வடமேல் மாகாணத்தில் 4 ஆசனங்களையும் பெற்றிருக்க முடியும் என்று மு.கா பிரமுகர்களே சொல்கின்றார்கள்.
இந்த மாகாண சபைத் தேர்தல்களில் மு.கா சின் வியூகம் பிழையான வியூகம் என்று ஏற்கனவே மு.கா தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் சொல்லியிருந்தார்.
அதேபோன்று வடக்கில் மு.கா கூட்டமைப்புடன் வட மாகாணத் தேர்தல் கூட்டணியொன்றை ஏற்படுத்தி கூட்டமைப்புடன் களம் இறங்கி இருந்தால் 3 ஆசனங்களின் வெற்றியுடன் கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் ஒன்றையும் பெற்று 4 ஆசனங்களுடன் கூட்டமைப்பின் மாகாண அமைச்சுப் பதவி ஒன்றையும் பெற்றிருக்கலாம்.
வடக்கில் கூட்டமைப்புடன் மு.கா கூட்டுச் சேர்வது என்பது காலத்தின் கட்டாயத் தேவை, இந்தத் தேவையை வட மாகாண முஸ்லிம்களுக்காக மு.கா செய்திருக்க வேண்டும்.
ஆனால் மு.கா செய்யவில்லை. கிழக்கிலும் முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை வடக்கிலும் மக்களுக்காக மு.கா அரசியல் செய்யவில்லை என்பதை இந்த மாகாணத் தேர்தலின் போது காணக் கூடியதாகவுள்ளது.
மு.கா.தனியாகக் களமிறங்கியதால்தான் இரண்டு மாகாணங்களிலும் முஸ்லிம்களின் 10 ஆசனங்கள் இழக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும் முஸ்லிம்கள் சரியான முறையில் நடத்தப்படவில்லை என்பதும் ஒரு காரணம் எனலாம்.
10 முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழந்து 4 ஆசனங்களை மயிரிழையில் பெற்றுள்ள மு.கா.நாங்கள்தான் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியென்று இனிமேல் மார்தட்ட முடியாது. மூன்று மாகாணங்களிலும் மு.கா.படுதோல்வி கண்டு முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.
வட பகுதி மக்கள் கூட்டமைப்புடன் இணக்க அரசியல் செய்ய வேண்டும்
வட மாகாண முஸ்லிம் மக்கள் எப்போதும் தமிழ் மக்களுடன் இணைந்த இணக்க அரசியலில் ஈடுபட வேண்டும். அதுதான் அந்த மக்களுக்கு ஆரோக்கியமான அரசியலாக அமையும். அதை விட்டு எங்கிருந்தோ வருபவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி வட பகுதி மக்கள் ஏமாளிகளாகி விட்டார்கள்.
வட பகுதி தமிழ் மக்களின் தீர்ப்பு தற்போது ஏனைய முஸ்லிம் மக்களுக்கும் ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் இருக்க வேண்டும். தேர்தல் காலங்கள் வந்தால் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் வடபகுதி முஸ்லிம் மக்களின் வாக்குகளை மூலதனமாக்கி ஏப்பமிட்டு கொழும்பில் அரசியல் வியாபாரம் செய்வதற்கு வட பகுதி முஸ்லிம் மக்கள் துணை போகக் கூடாது.
வடக்கில் ஆயிரம் பசப்பு வார்த்தைகளை அள்ளி விட்டார்கள். வடக்கில் தண்ணிர் ஊற்றுப் பகுதி உட்பட வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை 6 மாத காலங்களுக்குள் தீர்த்து விடுவதாக மக்களிடம் வாக்குறுதிகளை மு.கா தலைமை அள்ளி வீசியுள்ளது.
மு.கா தலைமையால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுகள் நிறைவேறுமா? ஏற்கனவே கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் இப்படித்தான் ஏமாந்து போனார்கள். இப்போது ஒரு வருடமாகி விட்டது வட மாகாண மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா முஸ்லிம் காங்கிரஸ் தீர்ந்து விட்டதா?
வடக்கைப் பொறுத்த மட்டில் அங்கு பெரும்பான்மை பலம் கொண்டவர்கள் தமிழர்கள். அந்தத் தமிழர்களுடன் இணைந்துதான் முஸ்லிம்கள் தங்களது உரிமைகளைப் பெறலாமே தவிர ஒரு முஸ்லிம் ஆசனத்தை வைத்துக் கொண்டு வீரம் பேசுவதும் வீறாப்புக் பேசுவதும் விழலுக்கு இறைத்த நீர் போன்றாகி விடும்.
முஸ்லிம் காங்கிரஸ் தiமையினைப் காப்பாற்றுவதற்காக இத்தனை முஸ்லிம்கள் பலிக்கடாவாகின்றார்கள் என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் பரிதாபகரமான நிலைமை.
10 முஸ்லிம் பிரதிநிதித்துவம் தோல்வி
மத்திய மகாணத்தில் கண்டியில் 1.40.000 முஸ்லிம் வாக்குகளும்,மாத்தளை மாவட்டத்தில் 38.000 முஸ்லிம் வாக்குகளும், நுவரெலிய மாவட்டத்தில் 25 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளும் உள்ளது.
இவ்வளவு முஸ்லிம் வாக்குகள் இருந்தும் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க.சார்பாக 2 உறுப்பினர்களும் மு.கா சார்பாக மு.கா.3.273 வாக்குகள் மட்டும்; பெற்று ஒரு உறுப்பினருமாக 3 முஸ்லிம் உறுப்பினர்களே வெற்றியடைந்துள்ளார்கள்.
நுவரெலிய மாவட்டத்தில் அரசு சார்பாக 11 சிங்கள உறுப்பினர்களும் ,ஐ.தே.க.சார்பாக 4 சிங்கள உறுப்பினர்களும் வெற்றியடைந்துள்ளார்கள் நுவரெலிய மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட எந்தக் கட்சியில் இருந்தும்; வெற்றியடையவில்லை.
மாத்தளை மாவட்டத்தில் அரசு சார்பாக 7 சிங்கள உறுப்பினர்களும் ஐ.தே.க.சார்பாக 3 சிங்கள உறுப்பினர்களும் வெற்றியடைந்துள்ளார்கள். ஆனால் எந்தக் கட்சியிலும் இருந்தும் ஒரு முஸ்லிம் உறுப்பினராவது வெற்றியடைய முடியவில்லை.
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் படுதோல்வி
கண்டி மாவட்டத்தில் அரசு சார்பாக 16 உறுப்பினர்கள் வெற்றியடைந்துள்ளார்கள் ,ஆனால் இந்தப் 16 சிங்கள உறுப்பினர்களில் ஒரு முஸ்லிம் கூட வெற்றி பெற முடியவில்லை. ஐ.தே.க.சார்பாக 2 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளார்கள் இந்த 2 உறுப்பினர்களும் முஸ்லிம்கள்தான்.
மு.கா சார்பாக 3.273 வாக்குகள் மட்டும் பெற்று மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்து ஒரு ஆசனத்தை மட்டும் பெற்றுள்ளது. கண்டியில் ஐ.தே.க.யின் மானம் அசாத் சாலியால் காப்பாற்றப்பட்டுள்ளது. அசாத் சாலி கண்டியில் போட்டியிடவில்லையென்றால் ஐ.தே.க.யின் மானம் கண்டியில் மலையேறியிருக்கும்.
மத்தியில் 14 மலையகத் தமிழர்கள் சரித்திரம் படைப்பு
கண்டிக்கான 58 மொத்த ஆசனங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 11 ஆசனங்களும்,ஐ.தே.க. 2 ஆசனங்களும் மலையக மக்கள் முன்னணி 1 ஆசனமும்,மு.கா ஒரு ஆசனமும் பெற்றுள்ளது.
14 ஆசனங்கள் மலையகத் தமிழர்கள் பெற்றுள்ளார்கள். மலையக வரலாற்றில் முதன் முதலாக மலையகத் தமிழர்கள் 15 வீதம் கொண்ட மலையகத்தில் 25 க்கும் அதிகமான அரசியல் வெற்றியை அடைந்துள்ளார்கள்.
மலையகத் தமிழர்களுக்கு இது மாபெரும் வெற்றி. நல்ல வழிகாட்டலும் நல்ல சிந்தனையும் சேர்ந்து மலையக மக்களை நல்வழிப்படுத்தப்பட்டுள்ளது. மலையக அரசியல்வாதிகளைப் பாராட்டுவோம். வாயாற வாழ்த்துவோம்
கண்டியில் ஏற்கனவே 6 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்து வந்துள்ளார்கள். ஆனால் இம்முறை 2 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றியடைந்து 4 உறுப்பினர்கள் தோல்வியடைந்துள்ளார்கள்.
புதிதாக அசாத் சாலி இணைந்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் இருந்து வந்த ஒரேயொரு முஸ்லிம் ஆசனம் இழக்கப்பட்டுள்ளது.
மலையகத் தமிழ் மக்களிடம் மத்திய, வடமேல் மாகாண முஸ்லிம் மக்கள் நல்ல பாடமும் படிப்பினையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோன்று வடக்குத் தமிழ் மக்களிடம் கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அத்துடன் மலையக அரசியல்வாதிகளிடம் அமைச்சர் அதாவுல்லா தவிர்ந்த அத்தனை முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவை. முஸ்லிம்கள் பட்டாவது திருந்த வேண்டும்.
ஏனெனில் அதாவுல்லா எப்போதும் சிங்கள வாக்குகள் மூலமாக சிங்களப் பகுதிக்குள் ஊடறுத்துப் புகுந்து தனது வியூகத்தை வடித்து வெற்றி பெற்று வருகின்றார். அதாவது குறைந்த முஸ்லிம் வாக்குகளால் கூடுதலான சிங்கள வாக்குகளைக் கொண்டு அம்பாறையில் அதாவுல்லா கடந்த காலங்களாக வெற்றியடைந்து வருகின்றார்.
இந்த வியூகத்தை இன்று வரையும் மு.கா சினால் வடிக்க முடியவில்லை. ஆனால் மு.காசின் எதிர்தரப்பு என்று சொல்லப்படுகின்ற அணியினரின் வெற்றி வாய்ப்புக்களை இல்லாமல் செய்யும் பணிகளில்தான் மு.கா அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
வட மேல் மாகாணம்
குருநாகல் மாவட்டத்தில் அரசு சார்பாக 23 சிங்கள உறுப்பினர்களும் ஐ.தே.க சார்பாக 5 சிங்கள உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அங்கு ஒரு முஸ்லிமாவது வெற்றி பெறமுடியவில்லை.
அதேபோன்று புத்தளம் மாவட்டத்தில் அரசு சார்பாக 9 சிங்கள உறுப்பினர்களும் ஐ.தே.க.சார்பாக 5 சிங்கள உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அங்கும் ஒரு முஸ்லிமாவது இந்தக் கட்சிகளில் வெற்றி பெற முடியவில்லை.
குருநாகல் மாவட்டத்தில் ஏற்கனவே 4 முஸ்லிம் உறுப்பினர்கள் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளிலும் இருந்து வந்தார்கள். 4 பேரும் தோற்றுப் போயுள்ளார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
அதேபோன்று புத்தளம் மாவட்டத்தில் 4 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்து வந்தார்கள். ஆனால் இந்தத் தேர்தலில் 4 ஆசனங்களும் இழந்துள்ளது. புதிதாக மு.கா. ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
முஸ்லிம்களின் ஆதரவின்றி ஆட்சியமைக்கலாம்
மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்கள் இல்லாது முஸ்லிம்களின் ஆதரவுகள் இல்லாது முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாது அரசினால் ஆட்சியமைக்கலாம் என்ற செய்தியொன்று சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இந்தத் தேர்தல் மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாகாணத் தேர்தல்களும் எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு பெரும் சவாலாகவும் பாரிய பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் தங்களின் உறுப்பினர்களை வெற்றியடையச் செய்வதற்கான நல்ல வியூகத்தை வடிக்கவில்லை. இரண்டு மாகாண சபைகளிலும் 3 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்காக 10 உறுப்பினர்களை முஸ்லிம் சமுதாயம் இழந்து நிற்கின்றது.
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு இரண்டு மாகாணங்களிலும் முஸ்லிம் சமூகம் அரசியல் அனாதைகளாக நிற்கின்றார்கள். இந்த அவலநிலைக்கு என்ன காரணம் யார் காரணம் என்பதை முஸ்லிம் சமூகம் ஆராய வேண்டும்.
ற்றுமைப்படாத முஸ்லிம் சமூகம்
பொதுபல சேனா இந்தளவு முஸ்லிம்களுக்கு கொடுமைகள் செய்தும் இன்னும் செய்து கொண்டும் இருக்கின்ற போதிலும் இந்த முஸ்லிம் சமூகம் இன்னும் ஒற்றுமைப்படவில்லையே முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டிருந்தால் மூன்று மாகாணத்திலும் முஸ்லிம் சமூகம் மண் கவ்வியிருக்க மாட்டாது.
இரண்டு மாகாணங்களிலும் முஸ்லிம்களின் வாக்குகள் மூன்று கட்சிகளுக்கும் சிதறடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் அல்லது ஐ.தே.க வுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் முஸ்லிம்களின் ஆசனங்கள் அதிகரித்திருக்கும்.
ஒன்றுமேயில்லாத ரங்கா எம்.பியுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் களம் இறங்க முடியுமானால் பெரும் சக்தி கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வட பகுதி முஸ்லிம்களுக்காக மு.கா ஏன் கூட்டுச் சேர முடியாது.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் நன்மை கருதி வாக்களித்த கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்காக ஏன் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர முடியாது. மக்களின் தலைமைகள் என்பது அந்த மக்களின் அபிலாஷைகளுக்காக இயங்க வேண்டும்.
ஹக்கீம் என்ற தனிப்பட்ட ஒருவரின் சுயநலனுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் பாதிக்கப்படுவதுதான் பரிதாபம். இந்த உண்மைகளை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளாத வரை இப்படித்தான் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பறிபோகும். ஏமாந்த மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இப்படித்தான் ஏமாற்றுவார்கள்.
பொதுபல சேனாவின் நோக்கம் நிறைவேறியுள்ளது
இந்த இரண்டு மாகாணங்களிலும் பொதுபல சேனாவின் நோக்கம் முற்று முழுதாக நிறைவேறியுள்ளது. அண்மைக் காலங்களாக பொதுபலசேனா முஸ்லிம்களையும் சிங்கள மக்களையும் பிரிக்க வேண்டும் என்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த ஆசை முற்று முழுதாக நிறைவேறியுள்ளது.
இரண்டு மாகாணங்களிலும் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளிலும் ஒரு முஸ்லிமாவது வெற்றி பெற முடியவில்லை. கண்டியில் ஒட்டு மொத்த சிங்களவர்களும் அரசுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்.
கண்டியில் ஐ.தே.க.சார்பாக 2 முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம் வாக்குகளால் மட்டும்தான் வெற்றியடைந்துள்ளார்கள். கண்டியில் முஸ்லிம் வாக்குகளால் 2 முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றியடைந்தால் மூன்றாவது உறுப்பினரின் வெற்றி எங்கே?.
அதாவது சரியான முறையில் மனாப்பை பயன்படுத்தப்பட்டடிருக்குமேயானால் 3 வது உறுப்பினரும் முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அப்படியானால் முஸ்லிம்களின் 3வது மனாப்பை வீணடிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களிடம் எந்தவொரு திட்டமும் இல்லாது முஸ்லிம்களை நல்ல முறையில் அரசியல் வழிநடத்தத் தெரியாமல் முஸ்லிம்களின் பள்ளி உடைப்பைக் காட்டியே தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
இது ஆரோக்கியமான முன்னெடுப்பல்ல என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.இரண்டு மாகாணங்களிலும் ஓரு முஸ்லிம் உறுப்பினராவது தெரிவு செய்யப்படவில்லை என்கின்ற போது பெரும்பான்மை மக்களிடமும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடமும் அரசிடமும் என்ன முகத்தோடு முஸ்லிம்கள் அரசியல் பேச முடியும்.
முஸ்லிம்களின் இந்தத் தீர்ப்பு என்பது எதிர்வரும் காலங்களில் முழு நாட்டிலும் ஏதாவது பாரிய தாக்கம் செலுத்தி விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
வட கிழக்கில் முஸ்லிகள் கூட்டமைப்புடனும் ஏனைய முஸ்லிம்கள் அரசுடனும்தான் . இணக்க அரசியல் செய்ய வேண்டும்
பொதுவாக வட கிழக்கு முஸ்லிம்கள் கூட்டமைப்புடன் இணக்க அரசியல் செய்ய வேண்டும். ஏனைய பகுதி முஸ்லிம்கள் அரசுடன்தான் இணைந்து இணக்க அரசியல் நடத்த வேண்டும். அதுதான் இன்றைய காலத்திற்குப் பொருத்தமான முஸ்லிம்களின் தெரிவாக அமைய வேண்டும். அது காலத்தின் அவசியத் தேவை.
பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக பெரும் பலம் கொண்ட அரசுக்கு தங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பைக் காட்டி எதைச் சாதிக்கப் போகின்றார்கள். இது இன்னும் இனவாதிகளின் இனவிரோதச் செயலுக்கான வாய்க்கு முஸ்லிம்கள் அவல் கொடுத்து விட்டார்கள்.
எழும்ப முடியாத ஐ.தே.க.வுக்கு முஸ்லிம்கள் மட்டும் வாக்களித்து 2 உறுப்பினர்கள் வெற்றியடைந்து முஸ்லிம்களுக்கு எந்த விதமான விமோசனமும் கிடைக்க மாட்டாது. முஸ்லிம்கள் பிழையான வழிகளில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
மஹரகமை பகுதியில் முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்று தாக்கப்பட்ட போது அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரால் இந்த நாட்டில் ஏதாவது நீதி பெற முடிந்ததா. அல்லது நீதிமன்றம் போக முடிந்ததா இல்லையே. இப்படிப்பட்ட நிலையில் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டியுள்ளதானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல தருணத்தை முஸ்லிம்கள் எதிர்பார்க்க வேண்டும். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய நிலையில்லை. ஆட்சி மாற்றத்தை நோக்கி முஸ்லிம்களால் முடியாது. நல்ல காலம் வரும் வரை இந்த அரசுடன் இணைந்துதான் மேற்குத் தெற்கு முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும்.
காலம் கனியும் வரையும் முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளை எதிர்த்து நின்றாலும் கூட்டமைப்புடன் இணைந்துதான் உமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
முஸ்லிம்களின் உரிமைக் குரலாக வட மாகாணசபை இயங்கும்
நாடு முழுவதும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் மற்றும் ரணில் விக்கிரமசிங்க. அப்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிக்கிட்டு பள்ளிவாசல்கள் உடைக்கப்படவில்லையென்று குறுக்கிட்டார்கள். சம்பந்தனையும்,ரணிலையும் தொடர்ந்து பேச விடாது குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
முஸ்லிம்களுக்கான குரல் ஒலிக்கும் மாகாணமாகவும், முழு நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் மாகாணமாகவும் வட மாகாண சபையும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் இருக்கப் போகின்றார்கள். 9 மாகாணங்களிலும் ஒரேயொரு மாகாணமாக வட மாகாணம் மட்டும்தான் முஸ்லிம்களின் குரலாக இருக்கப் போகின்றது.
மேற்கு தெற்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அநீதிகள் ஏற்படுகின்ற போது வட மாகாண சபையில் கண்டனம் எதிரொலிக்கும். கண்டனப் பிரேரணைகள் நிறைவேற்றப்படும்.
ஆக மொத்தத்தில் வட மாகாணம் என்பது வட பகுதி தமிழ் மக்களை மட்டும் மைய்யப்படுத்தவில்லை, முழு நாட்டுச் சிறுபான்மை மக்களையும் பாதுகாக்க வந்த எழுச்சியாகும். முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்காகவும் வட மாகாணம் குரல் கொடுக்கும்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தமிழ் கூட்டமைப்புடன் இணக்க அரசியல் நடத்தக் கூடிய முஸ்லிம் அணியொன்றின் அவசியத்தை கடந்த காலங்களாக வலியுறுத்தி எழுதி வருகின்றோம்.
மேற்கு,தெற்கு வாழ் முஸ்லிம்கள் வட மாகாண சபையைப் பலப்படுத்தவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்க வேண்டும்.மேற்குத் தெற்கு வாழ் முஸ்லிம் மக்களுக்காக வட மாகாணம்தான் உரிமைக் குரல் கொடுக்கவுள்ளது.
இன்று முஸ்லிம்களை மையப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்தி வரும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளால் முஸ்லிம்கள் இப்படித்தான் அரசியல் அநாதைகளாக கைவிடப்படுவார்கள்.
எதிர்வரும் காலங்களில் நாட்டில் முஸ்லிம்களுக்கு மிகவும் மோசமான காலமாக அமையலாம்.
-எம்.எம்.நிலாம்டீன்-
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszBTXKXhoy.html

Geen opmerkingen:

Een reactie posten