[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 10:25.54 AM GMT ]
பொருளாதார ரீதியாக சீனாவுடன் உறவுகளைப் பேணுவதற்கு இந்தியா விரும்பினாலும், அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக சீனா குறித்தும் அதன் நகர்வுகள் குறித்தும் இந்தியா எச்சரிக்கையாகவே இருக்கிறது. மிகச் சமீபத்திய சில விவகாரங்கள் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
1. இந்தியப் பெருங்கடலில் செல்லும் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக குர்கானில், இந்தியா உருவாக்கியிருக்கும் மிகப் பிரம்மாண்டமான ரேடார் கண்காணிப்பு வலையமைப்பு.
2. இலங்கையில் வெளிநாட்டு இராணுவப் பிரசன்னங்கள் குறித்து இந்தியா கண்காணித்து வருவதாகவும், சீன நீர்மூழ்கிகளின் வருகை குறித்து, இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்திய பாராளுமன்றத்தில் அளித்துள்ள பதில்.
3. சார்க் அமைப்பினுள் நிரந்தர உறுப்பினராக இணைந்து கொள்வதற்கு சீனா எடுத்துள்ள முயற்சிகள்.
இந்த 3 முக்கிய விவகாரங்களும், சீன விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களையும், அதனை எதிர்கொள்வதற்கு கையாளும் உத்திகளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன.
சீனாவுக்கும் சவாலாகியுள்ள இந்தியாவின் கண்காணிப்பு பொறிமுறை
இந்தியப் பெருங்கடலில் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், கடல்வழியான தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், இந்தியா மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பை உருவாகியுள்ளது.
இந்தியாவிலுள்ள 46 ரேடார்கள் இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள ரேடாரடகளுடன் செய்மதிகளையும் ஒருங்கிணைத்து இந்த பாரிய கண்காணிப்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் முகாமைத்துவ ஆய்வு நிலையம் (Information Mannagement and Analysis Center (IMAC), என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு வலையமைப்பை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
450 கோடி ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு அமைப்பினால் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான கப்பல்களைத் தினமும் கண்காணிக்க முடியும். இந்த திட்டத்தில் 24 நாடுகளை ஒன்றிணைத்து வணிகக் கப்பல்கள் பற்றிய தரவுகளை பகிர்ந்து கொள்வது மற்றும் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்த கண்காணிப்பு அமைப்பும் செய்யப்படவுள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள கடற் பகுதியில் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவுள்ள இந்த தகவல் முகாமைத்துவ ஆய்வு நிலையத்தினால் தென் சீனக்கடல் வரையான பகுதி வரையில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறிய முடியும்.
மும்பையில் 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், தான் இந்த கட்டமைப்பை உருவாக்க இந்தியா முயற்சித்தது. ஆனால், இந்தியாவின் இந்த திட்டத்தின் இலக்கு தீவிரவாத நடவடிக்கைகளை மட்டும் முறியடிப்பதில்லை.
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கான பலத்தைப் பெருக்குவதும் தான். இந்தியப் பெருங்கடலின் ஆதிக்கத்தை மைப்படுத்தி சீனா தனது கடற்படை பலத்தை பெருக்கத்தை தொடங்கிய போதே இந்தியாவும் அதற்கேற்ற திட்டங்களை வகுக்கக் தொடங்கியது.
அதுவும் சீன நீர்மூழ்கிகள் இந்தியாவுக்கு அருகே வெளிப்படையாக நடமாட தொடங்கியுள்ள நிலையில் இத்தகைய கண்காணிப்பு பொறிமுறையை இந்தியா உருவாகியுள்ளது முக்கிமானது. சீனா தனது விமானந்தாங்கி கப்பலை கூட, இந்தியப் பெருங்கடலை மையப்படுத்தியே நிறுத்தவுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடலில் தனது விநியோகப் பாதையை பாதுகாத்து கொள்வதற்காக சீனா எதையும் செய்வதற்கு தயாராகி வருகிறது.
இதற்கு இந்தியாவின் அயல் நாடுகளின் ஆதரவை பெறுவதில் சீனா வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்தியா தனது பாதுகாப்பு கட்டமைப்புக்களின் ஊடாகவே தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த ரேடார் கண்காணிப்பு பொறிமுறை இது இந்தியப் பெருங்கடலில் நடமாடும் கப்பல்கள், போர்க்கப்பல்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் படகுகள் எல்லாவற்றையும் கண்காணிக்கும் திறன் கொண்டது. விடுதலை புலிகள் இயக்கம் இன்று இருந்திருந்தால் கூட இந்தியாவின் இந்த பொறிமுறையால் பெரும் பாதிப்பை சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இது அவர்களின் கடல்வழி நடமாட்டங்கள் அனைத்தையும் கண்டறிந்து விடும் என்பதால் சிக்கலான பிரச்சினையாக அவர்களுக்கு உருவெடுத்திருக்கும்.
இது போன்ற பொறிமுறையை அமெரிக்காவும் வைத்திருக்கிறது. அந்தப் பொறிமுறையின் மூலம் கிடைத்த தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியே புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கக் காரணமாக இருந்தது அமெரிக்கா குர்கானில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரேடர் பொறிமுறையுடன் இலங்கையிலுள்ள தனது ரேடர்களையும் இணைத்திருக்கிறது இந்தியா.
இது சீனாவுக்கு எரிச்சலூட்டும் விடயமாகவே இருக்கும் ஏனென்றால் தென் சீனக்கடல் வரைக்கும் கண்காணிக்கும் திறன் கொண்ட ஒரு பொறிமுறையின் ஊடாக தனது கடல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதை சீனா ஒருபோதும் விரும்பாது. இதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குவதையும் அதனால் ஜீரணிக்க முடியாது.
சீன நீர்மூழ்கியும் இந்தியாவும்
சீன நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வந்து செல்வது குறித்து இந்தியா முதல் முறையாக தெளிவான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரையிலும் மழுப்பலான அல்லது அலட்சியமான பதில்களையே இந்தியத் தரப்பில் அளிக்கப்பட்டு வந்தது.
முதல்முறையாக இந்திய பாராளுமன்றத்தில் இதுபற்றிய ஒரு பதிலை அளித்திருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் “சீன நீர் மூழ்கி ஒன்று கடந்த செப்டெம்பர் 7ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையிலும் ஒக்டோபர் 31ம் திகதி தொடக்கம் நவம்பர் 6ம் திகதி வரையிலும் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றது.
அயல் நாடுகளில் வெளிநாட்டு இராணுவப் பிரசன்னம் தொடர்பாக இந்திய அரசாங்கம் உன்னிப்பாக கண்காணிக்கின்றது. சீன நீர்மூழ்கியின் அண்மைய கொழும்புப் பயணம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கேள்வி எழுப்பியது.
அதற்கு இந்த நீர்மூழ்கிகள் விநியோகத் தேவைகளுக்காகவே கொழும்புத் துறைமுகம் வந்ததாக இலங்கை பதிலளித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக எந்தச் செயலையும் செய்ய மாட்டோம் என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளது. இந்தியாவும் இலங்கையும் பலமான பலமுனை உறவுகளைக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நலன்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பை கொண்டிருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் கூறியிருந்தார்.
சுஸ்மா சுவராஜின் இந்த எழுத்து மூலமான பதில் பல விடயங்களை பொய்யாக்கியிருக்கின்றது.
முன்னதாக இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவல் சீன நீர்மூழ்கிகள் குறித்து இந்தியா கவலைப்படவில்லை என்றும் அது கொழும்புடன் தொடர்புடைய விவகாரம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவும் இந்தியா சீன நீர்மூழ்கிகள் குறித்து எந்தக் கவலையோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இலங்கை கடற்பரப்பில் சீன நீர்மூழ்கிகள் நடமாடுவது தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருந்தார்.
இது பற்றி ஊடகங்களில் தான் செய்திகள் வருகின்றதே தவிர இந்திய அரசாங்கம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் ரம்புக்வெல்ல கூறியிருந்தார் இலை அனைத்தையுமே பொய்யாக்கியிருக்கிறது சுஸ்மா சுவராஜ் அளித்துள்ள அறிக்கை.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சீன நீர்மூழ்கி விவகாரம் குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்சவிடம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். அதை இரண்டு தரப்பும் சரியாக வெளிப்படுத்தவில்லை மறைத்தே வந்தன.
இப்போது இந்தியா அதிகாரப்பூர்வமாக தாம் எதிர்ப்பை வெளியிட்டதை – கேள்வி எழுப்பியதை ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் மட்டுமல்ல ஏற்கனவே சீனக் குடாவில் விமான பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி அளித்த விவகாரத்திலும் இதேபோன்று தான் இலங்கை அரசாங்கம் நாடகமாடியது.
புதுடில்லி சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிசிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சீனக்குடாவில் சீனா நிறுவனத்துக்கு இடமளிக்கப்படக் கூடாது என கண்டிப்பாக கூறியிருந்தார்.
ஆனால் பாராளுமன்றத்தில் அமைச்சர் பீரிஸ் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை அதைப்பற்றி சுஸ்மா சுவராஜ் சாதாரணமாகவே விசாரித்தார் என்று பதில் கூறினார்.
பின்னர் இந்தியா தாம் எதிர்ப்பு வெளியிட்டதால் தான் சீனக்குடாவில் விமான பராமரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறியிருந்தது. இப்போது கூட இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான எதையும் செய்யமாட்டோம் என்று இலங்கை உறுதி அளித்துள்ளதாக சுஸ்மா சுவராஜ் கூறியிருக்கிறார்.
ஆனால் இந்தியா தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் என்று அண்மையில் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையிடம் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விடயமாக இருக்க முடியாது.
இலங்கையின் வாக்குறுதியையிட்டு இந்தியா சற்று ஆறுதல் அடையலாமே தவிர அயர்ந்து போக முடியாது.
சார்க்கிலுள் மூக்கை நுழைக்கும் சீனா
சார்க் அமைப்புக்குள் காலடி எடுத்து வைக்க சீனா போடுகின்ற திட்டம் இந்தியாவுக்கு மிகப் பெரிய சிக்கலாக உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த வாரம் காத்மண்டுவில் நடந்த சார்க் மாநாட்டின் போது சீனாவுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. சார்க் மாநாடு ஆரம்பிக்க முன்னரே நேபாளத்தில் இது பற்றிய கேள்வி எழுந்தது. நேபாள அரசாங்கம் அது பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.
சார்க் மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுங்யிங் தமது விருப்பத்தை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
சார்க் அமைப்பில் தாமும் ஆக்கப்பூர்வமான பங்காளராக இருக்க விரும்புவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் சீனாவை சார்க் அமைப்புக்கு உறுப்பினராக ஏற்க இந்தியா தயாராக இல்லை காரணம் சார்க் அமைப்பிலுள்ள எட்டு நாடுகளில் இந்தியா தான் பிரதான பாத்திரத்தை வகிக்கிறது.
அதற்கு சீனா நுழைந்து கொண்டால் இந்தியாவின் முக்கியத்துவம் இல்லாது போய்விடும். இப்போது சீனா உலகின் எல்லா பிரதான அமைப்புகளுக்குள்ளேயும் அவற்றைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது. சார்க் மட்டும் தான் இந்தியாவின் கையில் இருக்கின்ற அமைப்பு அதையும் கைப்பற்ற துடிக்கிறது சீனா.
ஆனால் அது தனது தனித்துவ நிலைக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என்று இந்தியா அஞ்சுகிறது சார்க் மாநாட்டின் போது பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் மாலைதீவு ஆகிய நான்கு நாடுகளுமே சீனாவை அனுமதிப்பதற்கு வலியுறுத்தியிருக்கின்றன.
இது இந்தியாவுக்கு சவாலாக மாறியிருக்கின்றது. சீனாவின் பொருளாதார உதவிகளிலும் ஏனைய ஒத்துழைப்பில் தங்கியுள்ள சார்க் நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதை இந்தியா புரிந்து கொள்கிறது.
இப்போது சீனாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக குரல் கொடுக்காமல் இருப்பது நேபாளம் பூட்டான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும் தான் சீனாவின் பாணியில் ஒரு பில்லியன் டொலர் கடன் துரு ஹெலிகொப்டர் நீர் மின் திட்டம் ஏராளமான சலுகைகள் ஊடாக நேபாளத்தை தக்கவைக்க போராடுகிறது இந்தியா.
பூட்டான் விடயத்தில் இந்தியா அவ்வளவு அச்சம் கொள்ளவில்லை
ஆப்கானிஸ்தானிலும் இந்திய ரயில் பாதை அமைப்பு உள்ளிட்ட பாரிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. இவையெல்லாம் இந்தியாவின் நலனுக்கு நீண்ட காலம் கை கொடுக்குமா என்று தெரியவில்லை.
ஆனால் சார்க்கினுள் சீனா புகுந்து விடும் காலம் நெருங்கி வருவதாகவே தெரிகிறது.
ஏனைய உறுப்பு நாடுகளையெல்லாம் தனது பொருளாதார பலத்தினால் வலைத்துப் போட்டுள்ள சீனாவை இந்தியா சமாளித்துக் கொள்வது அவ்வளவு எளிதானதல்ல இலங்கை கூட இந்த விடயத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை.
இந்தியா தனது உறவினர் என்றும் சீனா தனது நண்பர் என்றும் கூறிய இலங்கையின் தத்துவங்கள் எல்லாம் பழையதாகிவிட்டன.
இப்போது உறவினரைக் கைவிட்டு நண்பரின் கையைப் பிடிப்பதிலேயே இலங்கை நாட்டம் கொண்டிருக்கிறது என்பதை இந்தியா புரிந்து கொள்ளாமல் இல்லை.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmszBQUKZls2.html
படிப்படியாகவே எமது உரிமையினை வென்றெடுக்க முடியும்!- சிவநேசதுரை சந்திரகாந்தன்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 11:24.48 AM GMT ]
பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறுபவர்களுக்கு, செழிப்பான இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகளைத் திருத்துவதற்கான பணக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு, இருதயபுரம் இருதயநாதர் மண்டபத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
1968ல் டட்லி – தந்தை செல்வா ஒப்பந்தத்தில், அதிகாரம் பிராந்திய முறையிலிருந்து மாவட்ட முறைக்கு வந்தது. இறுதியில் எதுவும் இல்லாமல் போய்விட்டது.
பின்பு அரசியலில் நரியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன, 2/3 பலத்தோடு இருந்தும் இந்திய அரசுடன் செய்து கொண்ட 13வது ஒப்பந்தத்தின் படி, மாகாண சபைக்கான அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாண சபைக்கு வழங்கவில்லை.
அதற்காக மஹிந்த ராஜபக்ஸ எமக்கு அள்ளிக் கொட்டிவிட்டார் என்று கூறவில்லை, மாகாணங்களுக்கு அதிகாரங்களை ஓரளவுக்கேனும் வழங்கிapருந்தார். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் பெற முடியாது பதிலாக படிப்படியாகத்தான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
2009ம் ஆண்டின் பின்னர் நாட்டில் அமைதி நிலவுகின்றது. இராணுவம், பொலிஸ் பரிசோதனை என்றில்லாமல் யார் எந்த இடத்துக்கும் எe;நேரமும் செல்லலாம். இந்நிலையை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழர்களாகிய எமக்கு சந்தர்ப்பம் தரப்பட்டுள்ளது நாம் படிப்படியாக முன்னேறுவோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, குழுக்களுடன் பேசுதல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கல் என்று பல்வேறு பிரச்சினைகளைப் பேசுகின்றார்கள். அவர்கள் பெரிய தேசியப் பிரச்சினைகளைக் கண்டு கொள்வதில்லை.
அதை விடுத்து எல்லாம் கொள்ளை, குடும்ப ஆட்சி என்று ஒட்டு மொத்த பொய்களைக் வாய் கூசாமல் கூறாமல், நல்ல விடயங்களை நல்லது என்றே கூற வேண்டும்.
மட்டக்களப்புக்;கு நிறைய அபிவிருத்தி வந்துள்ளது. இவைகள் அபிவிருத்தி இல்லையா அதை விடுத்து பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உளரீதியாக ஏற்று சிறந்த சிந்தனை மாற்றத்தோடு செயற்படுங்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்து ஆட்சி புரிந்து வந்த மைத்திரிபால சிறிசேன, பொன்சேகா போல் விழுந்து நொருங்கப் போகின்றார் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2010ம் ஆண்டு இதே மாதிரியான ஒரு சூழல் வந்தது. மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, சரத் பொன்சேகா இதோ வருகின்றார் மாற்றத்துக்காக வருகின்றார். ஆறு மாதத்துக்குள் ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்றாu;. மஹிந்த ராஜபக்ச தோற்கப் போகின்றார் என்று கூறினார்கள்.
பாவம் சரத் பொன்சேகா சிறைச்சாலைக்கு சென்றார். சரத் பொன்சேகா ஒரே அடியாக வீழ்ந்து விட்டார். அந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டினார்.
அதே போன்று இன்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் இருந்தாலும் மூன்றாவது தடவையாகவும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அவர் போட்டியிடுகின்றார்.
தேர்தல் அறிவித்தவுடனேயே மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது சட்டப்பிரச்சினை உள்ளது என்றார்கள்.
இதோ வருகின்றார் பொன்சேகா என்று அன்று கூறியது போல இதோ வருகின்றார் எமது பக்கத்து மாவட்டத்திலுள்ள மைத்திரிபால சிறிசேன என்கின்றனர்.
அவர் 100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல் போன்ற பல்வேறு நடைமுறைக்குப் பொருந்தாத பொய்யான பிரசாரங்களை பேசி வருகின்றார்.
அவர் 100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல் போன்ற பல்வேறு நடைமுறைக்குப் பொருந்தாத பொய்யான பிரசாரங்களை பேசி வருகின்றார்.
இவற்றை நம்பாமல் எமக்குள்ள பிரச்சினைகளை எமது சிறார்களுக்கு இட்டுச் செல்லாது உரிமைகளைப் பெற சிறந்த சிந்தனை மாற்றத்தோடு தீர்க்க தரிசனமிக்க ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களித்து தமிழர்களாகிய எமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZls4.html
Geen opmerkingen:
Een reactie posten