தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

நெருங்கி வருகிறதா இலங்கை மீதான பொருளாதாரத் தடை?



முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 07:26.31 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னணி பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட சிலர் கலந்து கொண்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlr3.html
நெருங்கி வருகிறதா இலங்கை மீதான பொருளாதாரத் தடை?
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 09:03.42 AM GMT ]
ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற பரிந்தரை ஒன்று கடந்த வியாழக்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ,இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்த விவாதங்கள் மீண்டும் உருவாகியிருகின்றன.
பிரித்தானிய அரசாங்கத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை சாதாரணமாக கருதி விடக்கூடியதொன்றல்ல. தற்போதைய சூழலில் இது முக்கியமானதொரு விவகாரம்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை ,சாட்சியப் பதிவுகளைக் கடந்து, அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடையவுள்ள கட்டத்தில் தான் இந்தக் கோரிக்கை வந்திருக்கின்றது.
பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் ரிச்சர்ட் அட்டவே தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளின்படி,
1. ஐ.நா விசாரணைக் குழுவை அனுமதிக்க தொடர்ந்து மறுப்புத் தெரிவித்தால், விசாரணைக்கு ஒத்தழைப்பு கொடுக்காது போனால், இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதிக்கவேண்டும்.
2. பொருளாதாரத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட சாத்தியப்பாடுகளை ஆராய வேண்டும்.
3. தற்போது இலங்கை பெற்று வருகின்ற ஜி.எஸ்.பி போன்ற வர்த்தகச் சலுகைகளை நிறுத்த வேண்டும் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவின் அறிக்கை பிரித்தானிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதில்,  இது குறித்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கலந்தரையாடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஒரு பரிந்துரையே என்றாலும் பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது.
உடனடியாக இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றோ, இலங்கைக்கு எதிரான தடைகள் விதிக்கப்படும் என்றோ கருதுவதற்கில்லை.
ஆனால், தற்போதைய நிலையில் ,இந்தப் பரிந்துரைகள் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு சாதகமற்ற சூழல், மேலும் அதிகமாகி வருகிறது என்பதையே காட்டுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகளைக் கொச்சைப்படுத்தி, அதன் மீது குறைகளைக் கூறி ,தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதிலேயே இலங்கை காலத்தைக் கடத்துகிறது.
ஆனால் எந்தப் பாரபட்சமும் இன்றியே விசாரணை நடத்தப்படுகிறது என்பதை, ஐ.நாவின் உயர் கட்டமைப்புகள் உறுதியாக நம்பகின்றன.
ஐ.நா விசாரணையின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தி, இந்த விசாரணையின் இறுதியில் வெளியாகும் அறிக்கையில் இருந்து தப்பிக்க அரசாங்கம் முனைகிறது.
என்றாலும், ஐ.நாவோ, மேற்குலக நாடுகளோ இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.
ஐ.நா விசாரணைக்கு ஒத்தழைக்க மறுப்பதுடன், அந்த விசாரணையின் நம்பகத் தன்மையை கேள்விக்குட்படுத்தி, அதனை விமர்சிக்கும் பாங்கு மேற்குலகத்தை சீற்றமடைய வைத்திருக்கிறது. தற்போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையும் அதன் விளைவேயாகும்.
இந்தப் பரிந்துரையை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கலந்துரையாடியே பிரித்தானிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியும். அது நடந்தால் இலங்கைக்குப் பெரும் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படும்.
ஏனென்றால், 2012ம் ஆண்டு தரவுகளின் படி, இந்தியாவை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியமே இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. ஆண்டுக்கு 3.57 பில்லியன் யூரோ வர்த்தகம் இலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெறுகிறது.
இது இலங்கையின் மொத்த வர்த்தகத்தின் 13.8 வீதமாகும். இதில்,1.1 பில்லியன் யூரோ பெறுமதியான ஏற்றுமதிகளை இலங்கை ஜி.எஸ்.பி சலுகையின் மூலம் மேற்கொள்கிறது. எனினும், இலங்கையின் ஏற்றுமதி பங்காளி நாடுகளில், முதன்மை இடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தான்.
2.23 பில்லியன் யூரோ பெறுமதியான பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்கிறது இலங்கை.
இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில், 26.8 வீதமாகும், அதைவிட, இந்தியா, சீனாவுக்கு அடுத்த படியாக ஐரோப்பிய ஒன்றியமே இலங்கையின் மூன்றாவது இறக்குமதி பங்காளியாகவும் இருக்கிறது.
ஆண்டுக்கு.1.34 பில்லியன் யூரோ பெறுமதியான பொருட்கள் அங்கிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகின்றன. இது இலங்கையின் மொத்த இறக்குமதியில் 7.6 வீதமாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியளவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் இருக்கின்றன.
இத்தகைய நிலையில் ,ஐரோப்பிய ஒன்றியத்தினால், இலங்கை மீது தடைகளை விதிக்கின்ற சலுகைகளை நிறுத்துகின்ற முடிவுகள் எடுக்கப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்துக்கு விழுகின்ற மிகப் பெரிய அடியாகவே இருக்கும்.
பொருளாதார அழுத்தங்களின் மூலம், இலங்கையை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க அழுத்தம் கொடுக்கலாம் என்று பிரித்தானிய பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவர் ரிச்சர்ட் அட்டவே கூறியிருக்கிறார்.
இதுபோன்ற கருத்து ஏற்கனவே அமெரிக்காவிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட்டர்கள் சிலர் இதுபற்றிய தீர்மான வரைவு ஒன்றை கடந்த பெப்ரவரி மாதம் செனட்டில் சமர்ப்பித்திருந்தனர்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். போர்க்குற்றம் புரிந்ததாக கருதப்படும் படை அதிகாரிகளுக்கும், அரச தலைவர்களுக்கும் அமெரிக்கா பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மான வரைவில் கூறப்பட்டிருந்தது.
எனினும், அந்த தீர்மான வரைவு இன்னமும் அமெரிக்க செனட்டில் விவாதத்துக்கு வரவில்லை. வெளிவிவகாரக் குழுவின் பரீசிலனையிலேயே இருந்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை விடயத்தில் ஒருமித்த கருத்திலேயே இருந்து வருகிறது.
ஐ.நா விசாரணைகளை ஆரம்பிக்கும் விடயத்திலும் அவை முக்கிய பங்காற்றியிருந்தன.இந்தநிலையில், இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கவோ, சலுகைகளை நிறுத்தவோ ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானம் எடுக்கக்கூடும்.
அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது போனாலும், வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பின்னர், இத்தகைய தடைகளுக்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.
அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதிக்க முற்பட்டால், அதற்கு அமெரிக்காவின் ஆதரவும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையின் மீது அடுத்த நடவடிக்கையாக,அதனை பாதுகாப்புச் சபைக்கே கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அங்கு சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கு பாதுகாப்பாக இருக்கும், எனவே,அடுத்த கட்டம் என்பது சிக்கலானதொரு விடயமாகவே இருக்கும்.
வடகொரியா தொடர்பான ஐ.நா விசாரணைக்குழுவின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு. ஐ.நா பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும், வடகொரியாவும் தான் தடையாக இருக்கின்றன.
அண்மையில் ஐ.நா பொதுச்சபையில் அந்த விசாரணை அறிக்கை மீதான நடவடிக்கை குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது, 111 நாடுகள் அதற்கு ஆதரவளித்திருந்தன. 56 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன.
இலங்கை உள்ளிட்ட 19 நாடுகள் ஐ.நா விசாரணைக் குழுவிற்கு அறிக்கைக்கு எதிராக வடகொரியாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. அது இலங்கை தன் மீதான அறிக்கையைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவேயாகும்.
இந்த நிலையில், இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அடுத்த கட்டமாக ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் தமது வர்த்தக தடைகளையே ஆயுதமாக பயன்படுத்தக்கூடும்.
அதற்கு முன்னோடியாகவே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தக்கோரிக்கையைக் கருத முடிகிறது .எவ்வாறாயினும். இந்த பரிந்துரை தற்போது இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் அரசதரப்புக்கு சாதகமாக அமையலாம்.
எனவே ஜனாதிபதித் தேர்தல் வரை ஐரோப்பிய ஒன்றியம் எந்த நகர்விலும் ஈடுப்பட வாய்ப்பில்லை.
ஆட்சி மாற்றத்தை மேற்குலகம் விரும்புகின்ற சூழலில், அதனைக் கெடுக்கின்ற எந்தக் காரியத்திலும் அது ஈடுபடாது.
அதேவேளை, வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வென்றுவிட்டால் ,ஐரோப்பிய ஒன்றியம் தனது கடும்போக்கைத் தொடருமா என்ற கேள்வியும் உள்ளது.
எனினும் ,சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இடமளியோம் என்றும் எந்த இராணுவ அதிகாரியையோ,அரச அதிகாரியையோ சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவிடமாட்டோம் என்றும் ஐ.தே.க கூறியிருக்கிறது.
அத்தகையதொரு நிலைப்பாட்டை எதிரணி அரசும் எடுத்தால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கை இலங்கையை நோக்கி நீள்வது அவசியமாகிவிடும். சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் விடயத்தில் ஆளும்கட்சியோ எதிரணியோ வேறுபட்ட கொள்ளைகளை கடைபிடிக்கப் போவதில்லை.
எனவே ,ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் இலங்கையின் கழுத்தை நெரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே தெரிகின்றன.அது எந்தளவுக்கு வீரியம் கொண்டது என்ற விடயத்தில் ஜனாதிபதித் தேர்தலில் முடிவு தாக்கத்தைச் செலுத்தக்கூடும்.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlr6.html

Geen opmerkingen:

Een reactie posten