தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

தமிழீழ மாவீரர்நாள் அறிக்கை - 2014 - விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம்!.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் மாவீரர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2014.
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர்நாள். தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல இலட்சியத்துக்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்துக்காகச் சாவைத் தழுவிய புனிதர்களை எம் நெஞ்சங்களில் இருத்தி நெய்விளக்கேற்றிப் பூசிக்கும் தூய நாள்.

உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசியச் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுத்து, சொந்த மண்ணில் எமது மக்கள் தன்மானத்தோடு கௌரவமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளுக்காக மடிந்த மானமறவர்களை எமது அகமனதில் தரிசித்து வணக்கம் செலுத்தும் தேசிய நாள்.
மாவீரர்கள் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பின் கொடுமைகளுக்கு எதிராக, தமது சாவையே துச்சமாகக் கொண்டு போர்புரிந்தார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்த எமது பூர்வீக மண்ணுக்காகவும் எமது மக்களின் சுதந்திரத்துக்காகவுமே களமாடிக் காவியமானார்கள்.
எமது போராட்டப் பாதையில் ஒப்பற்ற தியாகங்கள் புரிந்து, எண்ணற்ற வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து, அளவிடமுடியாத மகோன்னத அர்ப்பணிப்புகளைச் செய்து, எமது தேசத்தின் நீண்ட போராட்ட வரலாற்றுச் சக்கரத்தை ஊக்கத்தோடு ஓயாது உந்திக்கொண்டிருப்பவர்கள் எமது மாவீரர்களே.
மாவீரர்கள் புரிந்த ஈடிணையற்ற தியாகங்களும் அவர்கள் படைத்த வீர வரலாறுகளும் எமது போராட்டப் பாதையில் எமக்கு ஆன்ம மனவலிமையைத் தருகின்றன. புதிய உத்வேகத்தோடு தொடர்ந்து எம்மைப் பயணிக்க வைக்கின்றன. தமிழீழச் சுதந்திரத்துக்காக உளத் தூய்மையோடு போராடி தமதுயிரை ஈகம்செய்த எமது மாவீரச் செல்வங்கள், உலகில் அடக்கியொடுக்கப்படும் அனைவருக்குமான விடியலின் குறியீடாகவும் முன்மாதிரியாகவும் உலக விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் பதியப்படுவார்கள்.
இந்தப் புனிதர்களைப் பெற்றுத் தாய்நாட்டுக்காக உவந்தளித்த பெற்றோர்களும் அவர்கள் குடும்பத்தினரும் என்றுமே போற்றுதற்குரியவர்கள். அன்புக்குரிய வாழ்க்கைத் துணையைப் போர்க்களமனுப்பிக் காத்திருந்தவர்கள், விடுதலைப் போரில் களமாடி மடிந்த தாய் தந்தையர், குடும்பமே களத்தில் போராடி மடிந்த வீர வரலாறுகள் என ஒட்டுமொத்தமாக எமது இனம் இப்போராட்டத்துக்காகச் சிந்திய குருதி ஈடிணையற்றது. மாவீரச் செல்வங்களை நாட்டுக்களித்த குடும்பத்தினர் அனைவரும் பெருமைக்குரியவர்கள். தேசத்தின் பெற்றோரெனும் மதிப்பிற்குரியவர்கள்.
எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகிவிட்டது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டிவந்த உலக நாடுகள் இன்று தமது முழுக் கவனத்தையும் எமது மக்கள் மீது திருப்பியுள்ளன. தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை.
எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திரதாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எமது அன்பான மக்களே!
எமது தாயகப் பூமி இன்று வரலாற்றில் என்றுமில்லாத பெரும் இனவழிப்பை எதிர்கொண்டு நிற்கிறது. தமிழ் இனத்துக்கு எதிராகத் தொடரப்பட்டுவரும் இனவழிப்புத் தீவிரம்பெற்றுத் தொடர்கிறது. போர் நெறிகளை மீறி, முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட பெரும்மனிதப் படுகொலைகள் ஒரு விபத்தோ அன்றித் தவிர்க்கமுடியாது நடந்தவையோ அல்ல.
அது சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டுத் தமிழ்மக்களை அழிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட பெரும் போர். இலங்கைத் தீவில் தமிழர்களை இல்லாதொழிக்க, சிங்கள இனத்திடம் இருந்துவரும் இந்த இனப்படுகொலைக் கலாச்சாரம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மகாவம்சச் சிந்தனைகளிலிருந்து தோன்றியது. வரலாற்று ரீதியான சிங்கள இனத்தின் படுகொலைச் சிந்தனையினதும் இனவழிப்புக் கலாச்சாரத்தினதும் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட தமிழர்களுக் கெதிரான கொலைக்களம் என்பது தெளிவு.
சிங்கள நாட்டில் போருக்கு எதிராகப் பகுத்தறிவின் குரல் ஒலிக்கவில்லை. எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது மொத்தச் சிங்கள தேசமே போருக்குப் பெரும் சக்தியைக் கொடுத்தது. அனைத்துச் சிங்கள அதிகாரபீடங்களும் போரையே விரும்பின. சிங்கள ஊடகங்கள், பௌத்த மதத்தினர், சிங்களப் புத்திசீவிகள், முதலாளிவர்க்கம், சாமானியச் சிங்கள மக்கள் என சிங்கள தேசமே தமிழர்களை அழிக்கும் போருக்கு முழு ஆதரவை வழங்கியது. அழகான இந்த இலங்கைத் தீவில் தமிழினம் கொன்றொழிக்கப்பட்ட போரை நிறுத்தத் தென்னிலங்கையில் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. மாறாக, தமிழினம் இலட்சக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட, தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்கள தேசம் இன்றுவரை வெற்றிவிழாவாகக் கொண்டாடி மகிழ்கிறது.
எமது அன்பான மக்களே!
ஈழத்தமிழரின் சுதந்திர ஆயுதப் போராட்டம் எந்த சக்தியாலும் மறுக்கப்படமுடியாத நீதிக்கும் மக்கள் உரிமைகளுக்குமான போராட்டமாகவே உருப்பெற்றது. அகிம்சை வழியில் தொடங்கி ஆயுதவழியில் பரிணமித்த தமிழரின் சுதந்திரப் போராட்டம், பல படிமுறை வளர்ச்சிகளைக் கொண்டது. கெரில்லாப் போராட்டமாகத் தொடங்கித் தமிழரின் ஆயுதப் போராட்டம், பின் தமிழ்மக்களின் சொந்தப் பலத்தில், எந்த உலக நாடுகளின் ஆதரவுமின்றி, இராணுவச் சமபலத்தை எட்டியபோது எமது இயக்கம் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டுவந்தது.
போருக்கு ஓய்வுகொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் செயற்பட்டோம். இந்நிலையில், சிங்களப் பேரினவாத அரசு எமது மக்களின் பிரச்சினையை நீதியின் அடிப்படையில், மனித தர்மத்தின் அடிப்படையில் தீர்க்க விரும்பாது, தமிழ்மக்களை அழிப்பதற்கான போரிலே முழுக் கவனத்தையும் செலுத்தியது. தமிழருக்கு நேர்மையான அரசியல் தீர்வெதையும் முன்வைக்கத் தொடர்ச்சியாக மறுத்துவரும் சிங்கள ஆட்சிபீடங்கள் கூட்டாகச் சேர்ந்து சமாதானத்துக்குத் துரோகமிழைத்தன.
நாம் சமாதானத்தில் உறுதிப்பாட்டுடன் இருந்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் சமாதானத் திரைக்குப் பின்னால் சிங்கள அரசு நிழல்யுத்தம் ஒன்றை எம்மீது கட்டவிழ்த்துவிட்டிருந்தது. இந்த நிழல் யுத்தம் வாயிலாக, சமாதானத்தைக் கடைப்பிடித்துவந்த எமது இயக்கத்தின் மீதும் எமது மக்கள் மீதும் ஒட்டுக்குழுக்களை ஏவிவிட்டுத் தாக்குதல் தொடுத்துவந்தது. இதன் வாயிலாக எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய போராளிகள், ஆதரவாளர்கள், எமக்கு ஆதரவான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என்ற வகையில் பெருந்தொகையானோரைக் கொன்றொழித்து, அப்பட்டமாகப் போர்க்குற்றமிழைத்தது.
உலகமாற்றத்தின் காலவிரிப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான பன்னாட்டுப் போர்முனைப்பைச் சிங்கள இனவாதம் தமிழருக்கு எதிரான போருக்கு வாய்ப்பாக மாற்றியது. நாம் சமாதானத்தில் பற்றுக்கொண்டு, இதயசுத்தியோடும் ஈடுபாட்டோடும் சமாதானத்தை நோக்கிப் பயணித்தபோது இந்த உலகம் போருக்கு முன்னுரிமை கொடுத்தது.
எமது மக்களின் சொந்தப் பலத்தில், மக்களைப் பாதுகாப்பதற்காக, மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, பல தசாப்தகாலமாக எமது மக்களால் கட்டியெழுப்பப்பட்ட எமது மக்களின் தேசியச் சுதந்திரப் போராட்டம், உலகச் சட்டநெறிகளுக்குப் புறம்பாக உலக வல்லரசு நாடுகளால் பயங்கரவாதமாகச் சேறுபூசப்பட்டுக் கொடூரமாக நசுக்கப்பட்டது, எமது மக்களுக்கு ஆழமான கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. நெஞ்சு பொறுக்காத நிலையும் உலக நீதி பற்றிய சந்தேகமும் உலகின் மனச்சாட்சி பற்றிய கேள்வியும் தமிழ் மக்களின் அடிநெஞ்சில் ஆழப் பதிந்துநிற்கின்றது.
முள்ளிவாய்க்காலில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக எமது இயக்கம் பெரும் முயற்சிகளைச் செய்தபோதும் உலகநாடுகள் பாராமுகமாக இருந்தன. தமிழினத்துக்கு எதிரான வன்முறையில் ஆசைகொண்டு தமிழ்மக்களைக் கொன்றொழித்த போரை நிறுத்துமாறு தமிழ்மக்கள் தமது சக்திக்குட்பட்டு உலகநாடுகளெங்கும் போராடியபோதும் இந்த உலகம் எமது மக்களின் அவலக் குரலுக்குச் செவிசாய்க்காது, பெரும் அநீதியை இழைத்தது. இந்நிலையில், நாளாந்தம் ஆயிரக்கணக்காகக் கொன்றொழிக்கப்பட்டுக்கொண்டிருந்த எமது மக்களையும், காயங்களுக்கு இலக்காகி மருத்துவ வசதியின்றி ஒவ்வொரு நொடியும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களையும் பாதுகாப்பதற்காகவே எமது ஆயுதங்களை மௌனித்தோம்.
காலவரையறையின்றி நாம் ஆயுதங்களை மௌனித்து, உலக அரங்கில் எமது மக்களுக்கான நீதியையும் உரிமைகளையும் போராட்டத்துக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்காக அமைதிவழியிலான அரசியல் போராட்டங்களையே செய்துவருகிறோம். எமது மக்களைப் பாதுகாக்க ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து இன்றுவரை எவ்வித ஆயுதப்பயன்பாட்டிலும் எமது அமைப்பு ஈடுபட்டதில்லை.
இந்நிலையில், சிங்கள அரசு எமது விடுதலை அமைப்பைக் காரணங்காட்டி, தமிழர்தாயகத்தில் ஒட்டுக்குழுக்கள், புலனாய்வுக்குழுக்கள் சகிதம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தை நிலைநிறுத்தி, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி இனவழிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துவருவதை இந்தியாவும் சர்வதேசச் சமூகமும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
புலிகளைத் தோற்கடித்தபின்னர் தீர்வுத்திட்டத்தை அறிவிப்போமெனக் கூறி, உலகநாடுகளின் ஆதரவைத் திரட்டி, சிங்களப் பாசிச அரசு தமிழ்மக்களைக் கொன்றொழித்து, இன்று ஐந்து ஆண்டுகள் ஆகியும், தணியாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டதா? தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா?
தமிழரின் நீதியான, நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா?
ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும் இம்சைக்கும் ஆளாகிநிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா?
ஆக்கிரமிப்பு இராணுவத்தால் கடத்தப்பட்டுக் காணாமற் போனோருக்கு நீதி கிடைத்ததா? போரின்பின் சரணடைந்த எமது மக்களும் போராளிகளும் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைய நடத்தப்பட்டனரா? எதுவுமே நடக்கவில்லை.
மாறாக, முடிவிலா ஒரு துன்பியல் வரலாற்று நீட்சியாகத் தமிழர் இனவழிப்பு, உலகநாடுகளால் தடுத்துநிறுத்தப்படாது, தொடர்கிறது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிறுவி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுவருகிறார்கள். எமது தாய்நிலம் ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குள் சிக்கிச்சீரழிய, மறுபுறம் உயர்பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் எமது மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
தமிழரின் பூர்வீக மண்ணில் தமிழின விகிதாசாரத்தைக் குறைத்து, சிங்கள இனப்பரம்பல் அதிகரிக்கப்படுகிறது. அதேநேரம், தமிழ்ப் பெண்களைக் கருச்சிதைவுக்கு உட்படுத்துவதன் ஊடாகத் தமிழினப் பெருக்கத்தைக் கருவிலேயே சிதைத்தழிக்கும் கொடூரமான நடவடிக்கையிலும் சிங்கள அரசு ஈடுபட்டுள்ளது. தமிழர் தாயகமெங்கும் புத்தர் சிலைகளை நாட்டியும் வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களைச் சூட்டியும் பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் அசுர வேகத்தில் தொடர்ந்துவருகிறது. தமிழீழத்தின் செல்வவளம் நிறைந்த அனைத்துப் பகுதிகளிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு, தமிழரின் பொருளாதாரமும் தேசியச் சொத்துக்களும் சிங்களப் பெரும்பான்மையினரால் பறித்தெடுக்கப்படுகின்றன.
தமிழீழத்தின் கடல்வளம், மண்வளம், கனிமவளம், வனவளம் என்பவையெல்லாம் அந்நிய ஆக்கிரமிப்புச் சக்திகளால் அடக்குமுறைகொண்டு பறிக்கப்படுகின்றன. எமது பாரம்பரிய வரலாற்று நிலப்பரப்புகள் வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. எமது மக்களின் பாரம்பரியப் பண்பாட்டு விழுமியங்கள் சீரழிக்கப்பட்டுச் சின்னாபின்னமாக்கப்படுகின்றன. எம்மக்களின் இயல்பான சமூக வாழ்வைத் துண்டித்து, நடமாட்டத்திற்கும் பேச்சுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து, அடிப்படை உரிமைகளைப் பறித்து, இனவாத அரசு எம்மக்கள் மீது ஒடுக்குமுறை அரசியலைத் திணித்துவருகிறது.
இந்தப் புறநிலையில், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்றும் இன நல்லிணக்கம் என்றும் கூறிக்கொள்வது, உலகத்தை ஏமாற்றி, தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் வழங்காது காலத்தை இழுத்தடித்து, இனவழிப்பைத் தீவிரப்படுத்துமே அன்றி, தமிழருக்கு எதிரான தென்னிலங்கையின் இனவழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.
அநீதியான யுத்தமொன்றை நடாத்தி, தமிழ்மக்களை இதுவரை மூன்று இலட்சத்துக்கும் மேல் கொன்றொழித்து, தமிழரின் உண்மையான பேரம்பேசும் சக்தியை நசுக்கி, இன்னும் உருப்படியாக எந்தத் தீர்வையும் முன்வைக்காத பேரினவாதச் சிங்கள அரசுக்கு முழு இராணுவ ஆதரவை வழங்கிய சர்வதேச நாடுகளின் கொள்கைத் தவறு, உலகத் தமிழினத்தின் ஆன்மாவில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமாதான அறநெறிகளின் பால் தொடர்ச்சியான பற்றுறுதியை வெளிப்படுத்தி, எமது விடுதலை இயக்கம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் நீதி விசாரணையை மதித்து, முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகிறது. அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணையையும் பன்னாட்டுச் சமூகத்தையும் அவமதித்து, முழுமையாக நிராகரித்துவருவதென்பது அசல் குற்றத்தின் தொடர்ச்சியையே காட்டுகிறது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நேரடியாக வாக்குமூலங்களை அளிக்கவிடாமல் அச்சுறுத்துவதோடு, சகல தொடர்பாடல் வழிமுறைகளையும் கட்டுப்படுத்தி, அராஜகத்தைச் செய்துவருகிறது.
அதையும் மீறிச் சாட்சிகளை அளிப்போர் மீது தனது கொடூர நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. இவ்விசாரணைக்கென சாட்சியமளித்தவர்களையும் தொண்டில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்தல், கடத்துதல், கொலைசெய்தல் போன்ற செயல்களில் இறங்கி, விசாரணை முறையாக நடைபெறாவண்ணம் முட்டுக்கட்டைகள் போட்டுவருகின்றது. எமது விடுதலை இயக்கத்துக்கு எதிராக எமது மக்களை அச்சுறுத்தி, பொய்யான சாட்சிகளைச் சேகரித்து, பொய்ப்பரப்புரைகளையும் செய்துவருகிறது.
அதுமட்டுமன்றி, ஐ.நா. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே முஸ்லிம் சகோதரர்கள் மீது அரச பின்னணியில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைச் சிங்களக் காடையர்கள் நடாத்தியமை என்பது, சிங்களப் பௌத்தப் பேரினவாதம் உலக நியதிகளையும் மனிதவுரிமைகளையும் புறந்தள்ளிப் பன்னாட்டுச் சமூகத்துக்குச் சவால் விடுவதையே சுட்டிநிற்கிறது.
தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுவரும் கொலை அச்சுறுத்தல்கள், கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், பாலியல் துன்புறுத்தல்கள், காணாமற்போதல்கள், அகதிகளாகத் தமிழ்மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுதல் என்பன யாவும் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினப்படுகொலையையே சுட்டிநிற்கிறது. அதேவேளை, சிங்கள அரசு தன்பிடியில் வைத்திருக்கும் அரசியல் கைதிகள், போர்க்கைதிகளை எதுவித விசாரணையுமின்றித் தடுத்து வைத்துச் சித்திரவதைக்குள்ளாக்கியும் கைதிகளைப் படுகொலை செய்தும் அரசியற் பழிவாங்கலைச் செய்துவருகிறது.
உண்மையை உண்மையாக உணரவேண்டியது சர்வதேசத்தின் தார்மீகக் கடமை. அனைத்துலக நாடுகள், பன்னாட்டு ஊடகங்கள், பன்னாட்டுப் பொறிமுறைக் கட்டமைப்புகள் இனியும் தாமதிக்காது தமிழ்மக்களின் மனிதகுல நீதிக்காக அக்கறைகாட்ட முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அந்த நம்பிக்கையிலே, எமது மக்கள் இன்று சந்திக்கும் இடையூறுகள், உயிரச்சுறுத்தல்கள் மத்தியிலும் தமது வாக்குமூலங்களையும் சாட்சிகளையும் முன்வந்து வழங்கிவருகிறார்கள். பன்னாட்டுச் சமூகம் மேல் எம்மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இம்முறை அனைத்துப் பன்னாட்டுத் தரப்பினரும் கருத்திலெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
எமது அன்பான மக்களே!
இன்று பூகோள ஒழுங்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. அனைத்துலக அரசியல் உறவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மானுட உரிமைப் போராட்டங்கள் சம்பந்தமாக உலகின் பார்வையும் மாறிவருகிறது. அரசியற் கோட்பாடுகளிலும் தார்மீகக் கொள்கைகளிலும் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்றைய காலத்தின் தேவைகருதி உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது விடுதலைப் போராட்டத்தைப் புதிய பரிமாணத்தில் விவேகமாக முன்னகர்த்திச் செல்லவேண்டிய வரலாற்றுப் பணி எமக்கு ஏற்பட்டிருக்கிறது.
எமது தொப்புள்கொடி உறவான தமிழ்நாட்டில், நீறுபூத்திருந்த எமக்கான ஆதரவுக்குரல்கள் இன்று எரிமலை உணர்வுகளாகத் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கின்றன. தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சி, தமிழகக் கட்சிகள், வழக்கறிஞர்கள், திரையுலகத்தினர், தொழிற்சங்கத்தினர், பரந்துபட்ட மக்கள், தமிழக அரசு என எமது உரிமைப் போராட்டத்துக்குப் பெருகிவரும் வலிமையான ஆதரவு எமக்குப் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகின்றது. தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு நீதிகேட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் தமிழக மக்களின் போராட்டங்களும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.
எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும், தமிழக இளைய தலைமுறையினருக்கும், தமிழகத் தலைவர்களுக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்துக்கும் எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்தும் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்துக்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்பும் அதேவேளை, இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் தமிழீழத் தனியரசுப் போராட்டத்துக்கான ஆதரவைத் திரட்டுவதோடு, இந்தியாவுக்கும் எமது இயக்கத்துக்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் தடையாக எழுந்துநிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
மத்திய ஆட்சிமாற்றத்தில் வரலாற்று வெற்றியீட்டியிருக்கும் இந்திய அரசு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்டு எமது மக்களுக்கெதிரான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்து, எமது மக்களோடு நேர்மையான உறவைக் கட்டியெழுப்பி, அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்பட வேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
உலகநாடுகளின் அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக, சிங்களதேசம் இப்பொழுது பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பற்றி முன்பைவிடக் கூடுதலாகப் பேசிவருகிறது. ஆனால், வடக்கு-கிழக்கு இணைப்பு, நில உரிமை, காவல்துறை அதிகாரம் எதையும் தமிழர்களுக்குத் தரமுடியாது என்று முள்ளிவாய்க்காலின் பின்பு அழுத்தமாகச் சொல்லிவருகிறது. இச்சட்டத் திருத்தத்தில் தமிழர்களுக்குரிய எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்பதை தமிழ்மக்களின் சுதந்திரப் போராட்ட அமைப்பாகிய நாம் தொடக்ககாலத்தில் இருந்தே கூறிவந்துள்ளோம். இருப்பினும், தமிழர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத இந்தச் சட்டத்திருத்தத்தையாவது சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதும், பதின்மூன்றாவது சட்டத் திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணசபை, எமது மக்களோடு சுதந்திரமாகப் பணியாற்ற முடியாதவாறு, எந்த அதிகாரங்களுமற்ற நிறுவனமாகவே இருப்பதும் தெட்டத்தெளிவாக உலகிற்குப் புலனாகியிருக்கிறது.
இராஜீவ் - ஜெயவர்த்தன உடன்படிக்கை செய்யப்பட்ட நாளில் இருந்து 27 ஆண்டுகளாக இச்சட்டத் திருத்தத்தைச் செயற்படுத்தாமல் சிங்கள ஆட்சிபீடங்கள் இழுத்தடித்து வருவதை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள அரசு தமிழர்களை அழிப்பது மட்டுமன்றி, பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தைக் கூட்டாக உருவாக்கிய இந்திய அரசையும் அவமதித்துவருகிறது.
சிங்கள அரசியலின் இயங்குவிசை அச்சாக இந்திய எதிர்ப்பு இருந்துவருவதை வரலாறு சுட்டிநிற்கிறது. நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தால்தான் எமது இயக்கத்துக்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்பிலும், ஈழத்தமிழரின் நலன் இந்தியாவின் ஆதரவிலும் என ஒன்றிலொன்று தங்கியிருக்கும் தவிர்க்கமுடியாத யதார்த்தத்தை இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் கவனத்தில் இருத்தவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
நவீன வரலாற்றை நவீனக் கண்கொண்டே பார்க்கவேண்டும். ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டப் பரிமாணத்துக்கு ஊடாக மட்டும் எடைபோட்டு நோக்குவது தவறு. சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கூடாகவும் தமிழரின் உரிமைகளுக்கூடாகவுமே இதனைப் பார்வையிடவேண்டும். ஈழத்தமிழரின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் போர் முடிந்துவிட்டதென்று மட்டும் கருதுவது பெருந்தவறு.
இலங்கைத் தீவில் காலாகாலமாக நடந்துவரும் ஒடுக்குமுறையைச் சமாதான வழியில் தீர்க்கச் சிங்களத் தலைவர்களும் மகாசங்கத் தலைவர்களும் சிங்கள மக்களும் ஒருபோதும் தயாரில்லை என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. படுகொலைக் கலாச்சாரமும் இனவழிப்புக் கலாச்சாரமும் இனப்பகைமை உணர்வும் வளர்ந்துள்ள சிங்கள அரசியலில், ஈழத்தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை எப்போதோ அடைந்துவிட்டது. பிரிந்துசெல்வதான ஒன்றேதான் தமிழரின் உயிருக்கும், நிலத்துக்கும், உடைமைக்கும், மொழிக்கும், பண்பாட்டுக்கும் பாதுகாப்பானது. அதுவே, இந்தியாவின் பாதுகாப்புக்கும் இந்தியப் பிராந்தியத்தின் அமைதிக்கும் ஒரேயொரு வழியாக அமையும் என்பது திண்ணம்.
அண்மையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் எமது இயக்கம் மீது தடைவிதித்தது நடைமுறைத் தவறென்று தீர்ப்பு வழங்கியிருப்பது எமது விடுதலை இயக்கத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் மிகுந்த ஆறுதலைத் தருகிறது.
எமது இயக்கம் மீதான தடையும் எம்மைப் பயங்கரவாதிகளாக நோக்கும் மனப்பாங்கும் தமிழரின் உரிமைப் போராட்டத்தை மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் ஆழமாகப் பாதித்து வருகின்றது. இந்த நீதிக்குப் புறம்பான தடையை, எமது மக்களை அழிப்பதற்காக மட்டுமே சிங்கள இனவாத அரசு பயன்படுத்துகிறது என்பதைப் பன்னாட்டுச் சமூகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தடையால் இலட்சக்கணக்கான எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டது மட்டுமன்றி, போர் முடிவடைந்தபோதும் எமது ஆதரவாளர்களும் நீதிக்காக உழைத்துவருபவர்களும் அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகிவருகிறார்கள்.
எனவே, எமது மக்களின் ஆழமான விருப்பங்களையும் தேவையையும் புரிந்துகொண்டு, எமது சுதந்திர இயக்கம் மீதான தடையை நீக்கி, எமது போராட்டத்தை அங்கீகரித்து, எமது மக்கள் வெளிப்படைத்தன்மையோடு அரசியல் பணிகளை முன்னெடுக்க வழிவகை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் எம்மைத் தடைவிதித்த ஏனைய நாடுகளையும் மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், எமது உரிமைகளை மீட்கும்வரை, அந்த உரிமைகளுக்காக ஜனநாயக வழியிலும் அறவழியிலும் சட்டவழியிலும் தொடர்ந்து போராடி, தமிழீழத் தனியரசுக்கான ஆதரவைத் திரட்டுமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் உலகத் தமிழர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஈழத் தமிழர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டிருக்கும் இன்றைய வரலாற்றுச் சூழமைவில், உலகத் தமிழ்ச் சமூகம் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும் வலுவான பேரம்பேசும் சக்தியை உருவாக்கவும் ஒரு பொறிமுறையை அமைப்பதற்கு ஆரோக்கியமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
தாயகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் நில ஆக்கிரமிப்பு உட்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளை உடனுக்குடன் சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து அறவழியில் போராடுமாறு வேண்டுகிறோம். அதேநேரம், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடாத்த உலகெங்குமுள்ள தமிழர்கள் அதற்கான புறநிலைச் சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கும் முயற்சியை வரவேற்கிறோம்.
சளைக்காது தொடர்ந்து தாயகக் கனவோடு விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தடையை நீக்குவதற்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்காடிய சட்ட அறிஞர்களுக்கும் சட்ட உதவியாளர்களுக்கும் குறிப்பாக இன்றைய போராட்டத்தின் சுமைதாங்கிகளாக விளங்கும் செயற்பாட்டாளர்களுக்கும் எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளை, போராட்டம் புதிய திருப்பத்தை எட்டும்வரை இலட்சிய உறுதியோடும் மாவீரர்களின் கனவோடும் தாயகக் கடமைகளைப் பலமுனைகளில் திட்டமிட்டுத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், சிங்களப் பேரினவாதத்தின் போரினால் சிதையுண்டுபோயுள்ள எமது தாயக மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்குண்டு அல்லற்படும் எம்மக்களுக்குத் தாராள மனிதாபிமான உதவிகளை வழங்கவும் முன்வரவேண்டுமென அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.
தமிழீழத் தனியரசு உதயமாவது தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாகும். அதனை எந்தவொரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது.
எமது ஆன்மக் கதவுகளைத் திறந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் இப்புனித நாளில், தமிழர்கள் இப்பூமிப்பந்தின் திசைநாலும் பரந்து வாழ்ந்தாலும் ஒன்றுபட்ட சக்தியாக அணிதிரண்டு, தமிழீழத் தனியரசை அமைக்கத் தொடர்ந்து உழைப்போமென உறுதி எடுத்துக் கொள்வோமாக.
-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
அறிக்கையினை முழுதாக பார்வையிட இங்கே அழுத்தவும்
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmq7.html


புலிகளின் அனைத்துலக தொடர்பகம் விடுத்துள்ள மாவீரர் நாள் அறிக்கை இதோ !

[ Nov 28, 2014 05:11:27 PM | வாசித்தோர் : 8460 ]
விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் விடுத்துள்ள மாவீரர் நாள் அறிக்கை இதோ இணைக்கப்பட்டுள்ளது !

Geen opmerkingen:

Een reactie posten